டென்னிஸ் உலகின் ராணி ‘மரியா ஷரபோவா’


டென்னிஸ் உலகின் ராணி ‘மரியா ஷரபோவா’
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 11:32 AM GMT)

மரியாவின் டென்னிஸ் வாழ்க்கை, நான்கு வயதில் தொடங்கியது. இவரது தந்தையின் நெருங்கிய நண்பரான அலெக்ஸாண்டர் காஃபெல்னிகோவின் மகனும், ரஷியாவின் சிறந்த டென்னிஸ் வீரருமான யெவ்ஜெனி, மரியாவுக்கு டென்னிஸ் ராக்கெட்டை பரிசாக வழங்கினார்.

டென்னிஸ் விளையாட்டில் முடி சூடா ராணியாக திகழ்ந்து அனைவரையும் கவர்ந்தவர் மரியா ஷரபோவா. 32-வது வயதில், டென்னிசில் இருந்து ஓய்வு பெற்று, குடும்பத்தை கவனிப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

பல விருதுகள், 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், விம்பிள்டன் பட்டம், தர வரிசைப் பட்டியலில் முதல் இடம் என இவருடைய சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

1987-ம் ஆண்டு, ஏப்ரல் 9-ந் தேதி, ரஷியாவின் மேற்கு சிபெரியா நகரில், நியாகன் என்ற இடத்தில் பிறந்தவர் மரியா ஷரபோவா. இவரது பெற்றோரும் விளையாட்டு வீரர்கள்தான்.

மரியாவின் டென்னிஸ் வாழ்க்கை, நான்கு வயதில் தொடங்கியது. இவரது தந்தையின் நெருங்கிய நண்பரான அலெக்ஸாண்டர் காஃபெல்னிகோவின் மகனும், ரஷியாவின் சிறந்த டென்னிஸ் வீரருமான யெவ்ஜெனி, மரியாவுக்கு டென்னிஸ் ராக்கெட்டை பரிசாக வழங்கினார். 

அதைக் கொண்டு, முதன் முதலில் விளையாடத் தொடங்கிய மரியா, படிப்படியாக தனது திறமையை வளர்த்து டென்னிஸ் உலகில் முத்திரை பதித்தார்.இவரது 6-வது வயதில், மாஸ்கோவில் உள்ள டென்னிஸ் கிளப்பில் பெற்ற பயிற்சியின் போது திறமையை வெளிப்படுத்தி, அப்போதைய முன்னிலை டென்னிஸ் வீராங்கனையான மார்ட்டினா  நவரத்திலோவாவை வியக்க வைத்தார்.

மரியாவின் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக சிறப்பு பயிற்சி பெறுவதற்கு, புளோரிடாவில் உள்ள பயிற்சி மையத்தை அணுகியபோது ரஷிய மொழியை மட்டும் தெரிந்திருந்த இவருக்கு, முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. 7-வது வயதில், நான்கே மாதத்தில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு  அதே அகாடமியில் தனது திறமையை நிரூபித்து, 9 வயதில் கல்விக் கட்டணமின்றி படித்தார்.

விளையாட்டு வீரர்களின் ஆடைகளுக்கு பெயர் பெற்ற நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட போது, மரியாவுக்கு வயது 11. அதன் பின்பு, பல போராட்டங்கள், வெற்றிகள், பரிசுகள் என வரிசையாக வாரிக் குவித்தார். வெற்றிகள் பல பெற்று இருந்தாலும், தோள்பட்டை அறுவை சிகிச்சை, போதை மருந்து பயன்படுத்தியது என பல சர்ச்சைகளையும் சந்தித்தார். 

Next Story