சிறப்பு குழந்தைகளை மேம்படுத்தும் பீனிக்ஸ் பெண்


சிறப்பு குழந்தைகளை மேம்படுத்தும் பீனிக்ஸ் பெண்
x
தினத்தந்தி 1 Nov 2021 5:30 AM GMT (Updated: 30 Oct 2021 11:18 AM GMT)

சிறப்புக் குழந்தைகளுக்கான அனைத்து வசதிகளும் கொண்ட ‘உலகத் தரம் வாய்ந்த உண்டு-உறைவிடப் பள்ளி'யை ஒரே கூரையின் கீழ் நிறுவ வேண்டும் என்பதே எனது கனவு.

கோவையைச் சேர்ந்த பொறியாளர் காயத்ரி சம்பத். இவர் சிறப்புக் குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையத்தைத் தொடங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். தான் சந்தித்த ஒரு துயர சம்பவமே இதற்கு காரணம் என்கிறார்.

இனி அவருடன் பேசலாம்…
எனது சொந்த ஊர் திருப்பூர். கணவர் சம்பத் குமார், கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர்.  எனது முதல் குழந்தை நிதில்யா, இவள் ஒரு சிறப்புக் குழந்தை. இரண்டாவது குழந்தை ரோகித் கிருஷ்ணா ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த மென்பொருள் பொறியாளராகப் பணி செய்த எனக்கு, எல்லா பெண்களையும் போலவே முதல் குழந்தையைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புகளும், கனவுகளும் இருந்தன. சுகப்பிரசவம்தான் நடந்தது. ஆனால் பிறந்தபோது குழந்தை அழவே இல்லை. 


பிறகு ஆக்சிஜன் தேவைப்பட்டதால்  வெண்டிலேட்டரில் வைத்தார்கள். அதன்பிறகும் குழந்தை அழவில்லை, தானாக தாய்ப்பாலும் குடிக்கவில்லை. ‘மூளை பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

பிறந்த ஆறு மாதத்தில் இருந்தே நம்பிக்கையோடு பிஸியோதெரபி சிகிச்சை அளித்தோம். பல்வேறு மாநிலங்களில், பலவிதமான சிகிச்சைகளை மேற்கொண்டோம். 

சென்னையிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி சிறப்புப் பள்ளியில் சேர்த்து சிகிச்சை அளித்தேன். எந்த சிகிச்சை முறையாலும் அவளை குணப்படுத்த முடியாததால், நானே பார்த்துக்கொள்கிறேன்.

சிறப்புக் குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையத்தைத் தொடங்கியதன் நோக்கம்?
எனது மகளுக்கு சிகிச்சை அளித்த சிறப்புப் பள்ளியில் மிகவும் குறைவான கட்டணமே வாங்கினார்கள். அந்த கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் இருந்த ஒரு தாயை அங்கே சந்தித்தேன். 

30 கிலோ எடை இருந்த தனது பெண் குழந்தையை தினமும் தோளில் சுமந்துகொண்டு, பேருந்தின் கூட்ட நெரிசலில் நின்றபடியே பயணித்து, பேருந்து நிறுத்தத்திலிருந்து பள்ளிவரை நடந்தே வருவார். அந்தக் குழந்தைக்கான கட்டணத்தை நான் கட்ட முன்வந்தபோது அவரின்  தன்மானம் அதை ஏற்கவில்லை. 

தையல் தொழில் செய்த அவர், விரைவில் தனது குழந்தையை நடக்க வைத்துவிட முடியும் என நம்பிக்கையுடன் இருந்தார். ஒரு நாள் அந்த அம்மா தனது குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதைக் கேள்விப்பட்டபோது அதிர்ந்து போனேன். அந்தக் குழந்தை குறித்து அவரின் கணவர் செய்த பிரச்சினையே அவர் இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்தது.

அதன் பின்பு அங்கு வசிப்பதற்கு விருப்ப மில்லாமல் கோவைக்குத் திரும்பினேன்.  2016-ல் வாடகைக் கட்டிடத்தில் எனது மகளின் பெயரில் - ‘நிதில்யம்’ என்ற சிறப்புப் பள்ளியைத் தொடங்கினேன். 2018-ல் 20 குழந்தைகள் இருந்தார்கள். இடநெருக்கடி ஏற்படவே, ராஜேந்திரன் என்ற நண்பர் சரவணம்பட்டியில் உள்ள தனது இடத்தை வாடகை இல்லாமல் எங்களுக்குக் கொடுத்தார். அதில்தான் இப்போதுவரை பள்ளி இயங்குகிறது.

உங்கள் மையத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?
இப்போதுள்ள பள்ளியில் ஆறு வகுப்பறைகள், நீச்சல் குளம், விளையாட்டுத் திடல் என எல்லா வசதிகளும் உள்ளன. சுகாதாரம், தரம், முன்னேற்றம் இவை மூன்றையுமே முக்கியமாகக் கருதுகிறோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப தனித்தனியாகக் குறுகிய கால மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு அதை அடைய பயிற்சி அளிக்கிறோம். 

எங்கள் பள்ளியில் சமச்சீர் கல்வி மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவன பாடத்திட்டமும் உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் எதில் ஆர்வமுள்ளது என்பதைக் கண்டறிந்து அதை ஊக்குவிக்கிறோம். கட்டணம் செலுத்த வசதியில்லாதவர்களுக்கு நானும், என்னுடைய சில நண்பர்களும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.


குழந்தைகளுக்கு எத்தகைய பயிற்சிகளை அளிக்கிறீர்கள்?
தீபா சுப்ரமணியம் என்ற மருத்துவர் லண்டனில் வசிக்கிறார். அவர் பீடியாட்ரிக் பிசியோதெரபி முடித்தவர். ஒரு முறை தனது சொந்த ஊரான கோவைக்கு வந்தபோது, எங்கள் பள்ளிக்கு நேரடியாக வந்து நிறைய ஆலோசனைகளை வழங்கினார். எனது வேண்டுகோளுக்கு இணங்கி அவரும் எங்கள் தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். 

அதன் மூலம் எங்கள் பள்ளி ‘நிசார்க்’ என்ற பெயரில் தரம் உயர்த்தப்பட்டது. இப்போது 70 பிள்ளைகள் உள்ளனர். இதுவரை 120-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பல்வேறு பயிற்சிகள் கொடுத்திருக்கிறோம்.
ஸ்கேட்டிங், கீ-போர்டு, ஓவியம், சமையல் என அவரவருக்கு விருப்பமான கலைகளை கற்றுக் கொடுக்கிறோம். 

ஓவியத்தில் ஆர்வமுடைய ஒரு மாணவனின் ஓவியங்களை ஆன்லைனில் விற்பதற்கு ஏற்பாடு செய்து, அவன் தொடர்ந்து வருமானம் பெறுவதற்கான வழியை உருவாக்கிக் கொடுத்தோம். 

குழந்தைகளின் மேம்பாடு மற்றும் சாதனைகள் பற்றி சொல்லுங்கள்?
எங்கள் பள்ளியிலிருந்து பல குழந்தைகள், சர்வதேச ஓவியப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளனர். மாநில அளவிலும் பல விருதுகளை  பெற்றுள்ளனர். 

சில குழந்தைகள் பொதுத் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுள்ளனர். ஒரு மாணவி 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். 
மற்றொரு மாணவர் தட்டச்சுப் பயிற்சி முடித்து ‘டேட்டா எண்ட்ரி’ பணிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள்?
பீனிக்ஸ் பெண் விருது, வொண்டர் வுமன், ஒர்க்கிங் வுமன் அச்சீவர் விருது, சேவாஸ்ரீ விருது, பீனிக்ஸ் விருது-2021 உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் 
பெற்றிருக்கிறேன். சிறந்த சிறப்புப் பள்ளிக்கான விருதையும் பெற்றிருக்கிறோம்.

உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?
சிறப்புக் குழந்தைகளுக்கான அனைத்து வசதிகளும் கொண்ட ‘உலகத் தரம் வாய்ந்த உண்டு-உறைவிடப் பள்ளி'யை ஒரே கூரையின் கீழ் நிறுவ வேண்டும் என்பதே எனது கனவு.

Next Story