ஜிம்னாஸ்டிக்கில் கின்னஸ் சாதனை


ஜிம்னாஸ்டிக்கில் கின்னஸ் சாதனை
x
தினத்தந்தி 1 Nov 2021 11:00 AM IST (Updated: 30 Oct 2021 5:28 PM IST)
t-max-icont-min-icon

சாதனை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தாலும் முதலில் கின்னஸ் ரெக்கார்டு செய்வதற்காக பயிற்சியாளர் என்னிடம் வளையத்தைக் கொடுக்கும்போது ‘என்னால் முடியுமா? என்ற தயக்கம் இருந்தது.ஆனால் அவர் ‘உன்னால் முடியும்’ என்று அடிக்கடி சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த திவினா ஸ்மிரிதி, தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். அப்பா விஜயபாலன் ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்து வருகிறார். அம்மா மஞ்சரி பிரீத்தி இல்லத்தரசி. தம்பி அர்ஜுன் பிரியன் 3-ம் வகுப்பு படிக்கிறார்.

வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பயிற்சிக்கூடத்தில் திவினா ஜிம்னாஸ்டிக்கில் மூன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார். இவரின் பயிற்சியாளர் கோகுல்நாத் பல கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தவர். அவரிடம் பயிற்சி எடுக்கும்போது தானும் கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை திவினாவிற்கு ஏற்பட்டது.

2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்னாஸ்டிக்கில் பேக் பெண்டிங் செய்து ஒரு காலை நீட்டி, நீட்டிய காலில் ஹூலோஹூப்பில் சுற்றி ஒரு நிமிடத்தில் 
180 தடவை சுழற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இதற்காக நான்குமாத காலம் கடுமையாகப் பயிற்சி எடுத்திருக்கிறார்.

இதுபற்றி திவினா ஸ்மிரிதி கூறுகையில்,

“ஜிம்னாஸ்டிக் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன். பயிற்சியாளர் சொல்லிக் கொடுக்கும்போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. இதையெல்லாம் நம்மால் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் பயிற்சி செய்யும்போது வலி அதிகமாக இருந்தது. சில நாட்கள் வரை சிரமப்பட்டேன். தொடர்ந்து பயிற்சி எடுத்ததும் பழகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட பயிற்சி வகுப்பிற்கு விடுப்பு எடுத்தது இல்லை. ஜிம்னாஸ்டிக் செய்வதற்கு தன்னம்பிக்கையும், கவனமும் தேவை. இந்த இரண்டும் இருந்தால் நிச்சயமாகச் சாதிக்க முடியும்.



சாதனை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தாலும் முதலில்  கின்னஸ் ரெக்கார்டு செய்வதற்காக பயிற்சியாளர் என்னிடம் வளையத்தைக் கொடுக்கும்போது ‘என்னால் முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் ‘உன்னால் முடியும்’ என்று அடிக்கடி சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். 

ஆரம்பத்தில் முதுகுதண்டை வளைத்து பயிற்சியெடுக்கும்போது பத்து நிமிடங்கள் கூட என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. தொடர்ந்து பயிற்சி செய்தபோது அதிக நேரம் செய்ய முடிந்தது.

கின்னஸ் ரெக்கார்டுக்காக விண்ணப்பித்தது மார்ச் மாதம். முழு ஆண்டுத் தேர்வும் அதேமாதம்தான் என்பதால் படிப்புக்கும், பயிற்சிக்கும் திட்டமிட்டு, அட்டவணை தயார் செய்தேன். 

லாக்டவுன் சமயத்தில் பயிற்சியாளர் காணொளி மூலம் பயிற்சி கொடுத்தார். அப்பாவும், அம்மாவும் நான் செய்த பயிற்சியை வீடியோ எடுத்து அவருக்கு அனுப்புவார்கள். ஒன்றிரண்டு முறை மட்டும் நேரில் வந்து பார்வையிட்டார்.

ஜிம்னாஸ்டிக் செய்வதற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அம்மா ஊறவைத்த கறுப்பு கொண்டைக்கடலை, பழங்கள், தானியங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றை உணவாகக் கொடுப்பார். துரித உணவுகளை நான் சாப்பிட மாட்டேன்.

என்னால் இந்தச் சாதனையைச் செய்ய முடிந்ததற்கு முயற்சியும், பயிற்சியும்தான் காரணம். இதைப் போல பல கின்னஸ் ரெக்கார்டுகள் செய்ய வேண்டும்” என்கிறார் திவினா.

இவருக்கு ஜிம்னாஸ்டிக் தவிர, வண்ணம் தீட்டுதல், கைவினை, ஓவியம் வரைதல் போன்றவற்றில் ஆர்வம் இருக்கிறதாம்.

Next Story