திறமையால் உயர்ந்த ஹேமா
மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கைக் கருத்துகளோடு உரையாடுவது, அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. எனக்கும் திருப்தியாக இருக்கிறது.
சென்னையில் வசிக்கும் ஹேமா ராகேஷ், செய்தித்துறைப் பணியோடு, சீரியல் நடிகையாகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், ஆவணப்பட இயக்குநராகவும், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், விளம்பர மாடலாகவும் பன்முகத் திறமையோடு விளங்கி வருகிறார். அவரது பேட்டி…
உங்களைப் பற்றி..
நான் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவள். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இளநிலை ஆசிரியர் பட்டமும் பெற்றிருக்கிறேன். தந்தை மனோகரன் திருமண மண்டப மேலாளர், தாய் பிரேமா அரசுப் பள்ளி ஆசிரியை. நான் கணவர் ராகேஷ் மற்றும் மூன்று வயது மகள் ஆத்மிகா ஆகியோருடன் தற்போது சென்னையில் வசிக்கிறேன். கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
பள்ளி, கல்லூரிக் காலத்தில் உங்கள் செயல்பாடுகள் பற்றி கூறுங்கள்?
பள்ளியில் படிக்கும்போது பேச்சு, நடனம், பாடல், கதை, கவிதை, கட்டுரை, நாணயம் சேகரித்தல், சமூக சேவை போன்றவற்றில் ஈடுபட்டேன். சிறந்த செயல்பாட்டுக்காக 350-க்கும் மேற்பட்ட பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றேன்.
சிறந்த சமூக சேவைக்காக, அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் இருந்து ‘ராஜ்ய புரஸ்கார் விருது’ வாங்கினேன். பள்ளியின் கோடை விடுமுறை நாட்களில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராகவும், கல்லூரியில் படிக்கும்போது பகுதி நேர மாணவ நிருபராகவும் பணிபுரிந்தேன்.
மேலும் பள்ளியில் மாணவர் பிரதிநிதி, இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் தலைவி, தேசிய மாணவர் படைத் தலைவி, பள்ளி மாணவர் தலைவி ஆகிய பொறுப்புகளை வகித்தேன்.
கல்லூரியிலும், ரெட் ரிப்பன் கிளப் தலைவர், தேசிய மாணவர் படைத் தலைவி, ஆங்கிலத் துறை செயலர், கலாசாரக் குழுத் தலைவர், கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து, நிகழ்ச்சிகளை திறம்பட ஒருங்கிணைத்திருக்கிறேன். அதே காலகட்டத்தில், சேலம் அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன்.
இப்போது என்னென்ன பணிகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
செய்தி இணையதளம் ஒன்றின் பொறுப்பாளராக இருக்கிறேன். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஊடகத்துறை மற்றும் செய்தி வாசிப்பாளர் குறித்து பயிற்சி வகுப்புகளை மேற்கொள்கிறேன். தன்னம்பிக்கை குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறேன்.
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறேன். சில நிறுவனங்களுக்கு டிஜிட்டல் புரமோஷன் பணிகளை மேற்கொள்கிறேன். மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் உரையாற்றுகிறேன்.
அரசு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
மகிழ்ச்சியாக இருக்கிறது. அமைச்சர்கள், ஆளுநர்கள், ஆட்சிப்பணி அதிகாரிகள் போன்றவர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பல மணி நேரம் என்னைத் தயார்படுத்திக் கொள்வேன்.
விளம்பர மாடலாக உங்கள் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
கல்லூரியில் படிக்கும்போது விளம்பர படங்களில் நடித்தேன். பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக பணியாற்றினேன். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
சீரியல் நடிகையாக உங்கள் அனுபவங்கள்?
‘நாயகி’, ‘அன்பே வா’, ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற தொடர்களில் நடிக்கிறேன். ஆரம்பத்தில் நடிப்பது சற்றே சிரமமாக இருந்தது. இப்போது நன்றாக நடித்து வருகிறேன்.
தன்னம்பிக்கைப் பேச்சாளராக உங்கள் பயணம் பற்றி கூறுங்கள்?
மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கைக் கருத்துகளோடு உரையாடுவது, அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. எனக்கும் திருப்தியாக இருக்கிறது.
ஆவணப் படம் இயக்கிய அனுபவம் எவ்வாறு இருந்தது?
என்னுடைய சொந்த ஊரைப்பற்றி ‘தொன்மையின் அடிச்சுவடு கிருஷ்ணகிரி’ என்ற வரலாற்று ஆவணப்படம் இயக்கி உள்ளேன். இதற்காக காடு, மலை, குகைகள், மலைக்கோட்டை, சுரங்கப்பாதை என்று பயணம் செய்து ‘டிராவல் டாக்குமெண்டரியாக’ எடுத்திருக்கிறேன். கிருஷ்ணகிரியின் வரலாற்றுச் சிறப்புகள், குகை ஓவியங்கள், கல்வெட்டுகள், கல்திட்டைகள் குறித்து இப்படத்தில் பதிவு செய்துள்ளேன். அதற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. அதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறேன்.
நீங்கள் செய்தவற்றில் மறக்க முடியாத நிகழ்வு?
2006-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகளற்ற அவல நிலையைச் செய்தியாக அளித்தேன். அதைப் பார்த்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்பாபு என்னைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். அந்த மக்களுக்கு உடனடியாகத் தேவையான வசதிகளைச் செய்துத் தருவதாக உறுதியளித்தார். பிறகு அவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்ததோடு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றையும் அளித்தார்கள். அந்த விழாவுக்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இதேபோல இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன.
உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் என்ன?
பள்ளி, கல்லூரிகளில் ‘பல்திறனில் சிறந்த மாணவி’ விருது, சிறந்த சமூக சேவைக்காக, கல்லூரியின் ‘சிறந்த தேசிய மாணவர் படை மாணவி’ விருது, ‘மாணவ சாதனையாளர்’ விருது, ‘சிறந்த செய்தி வாசிப்பாளர்’ விருது, ‘பெண் சாதனையாளர்’ விருதுகள் என 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து வந்து பெண்களுக்குச் சிறந்த உதாரணமாய் திகழ்வதாக, முன்னாள் தமிழக ஆளுநர் ரோசைய்யாவிடம் இருந்து ‘சிறந்த பெண்மணிக்கான விருதை’ பெற்றேன்.
Related Tags :
Next Story