‘ரிப்பன்’ மூலம் உலக சாதனை
மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பித்த இந்தச் சாதனையின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, உணவு, மருந்து வகைகள், தடுப்பு வழிமுறைகள் இவற்றையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிப்பன்களைக் கொண்டு உலக சாதனை செய்துள்ளார் விழுப்புரம் மாவட்டம், சுந்தரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வாணிஸ்ரீ. அவர் தனது சாதனையைப் பற்றி இங்கே பகிர்கிறார்…
‘‘நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். அப்பா ஜெயபால் - விவசாயி, அம்மா ரேவதி. தம்பி ஸ்ரீதரன் முதல் வகுப்பு படிக்கிறான். நான் படிக்கும் பள்ளியில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு சக மாணவர்கள் பரிசுகளும், பதக்கங்களும் வாங்கும் போது, நாமும் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அது சாதனையாக மட்டுமில்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்காக புற்றுநோய் தினத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி புதுவையில் உள்ள தனியார் கல்லூரியின் அரங்கத்தில், 10 மணி நேரத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிப்பன்களைக்கொண்டு புற்றுநோய் விழிப்புணர்வுக்கான ரிப்பன் வடிவத்தை உருவாக்கினேன். கலாம் உலக சாதனை நிறுவனம் எனது சாதனைக்கு அங்கீகாரம் அளித்துச் சான்றிதழையும், விருதையும் வழங்கிக் கவுரவித்தது. எனது அப்பா, அம்மா, அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் ஆகியோர் எனக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருந்தார்கள்.
நமது நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பித்த இந்தச் சாதனையின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, உணவு, மருந்து வகைகள், தடுப்பு வழிமுறைகள் இவற்றையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.
புதுச்சேரி முதல்வர், மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., புதுச்சேரி சபாநாயகர், பொதுப்பணித்துறை அமைச்சர், நான் சாதனை நிகழ்த்திய கல்லூரியின் முதல்வர், எனது பள்ளி முதல்வர் என அனைவரும் அழைத்துப் பாராட்டியது பெருமையாக இருந்தது. கடந்த 12 வருடங்களாக எனது தாத்தா-பாட்டி எங்களுடன் பேசாமல் இருந்தார்கள். இந்த விருதைப் பெற்றவுடன் அவர்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சி அளித்தது.
மருத்துவர் ஆக வேண்டும் என்பது எனது குறிக்கோள். அதன் மூலம் நான் பிறந்த கிராமத்திற்குப் பெருமையும், நன்மையும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஓவியம் வரைதல், நடனம், கைவினைப் பொருட்கள் செய்வது போன்றவற்றில் ஆர்வம் உள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வு சாதனைகளையும், அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார் வாணிஸ்ரீ.
Related Tags :
Next Story