‘உடல் வெப்பத்தால் ஒளிரும் விளக்கு’ கண்டுபிடித்த இளம்பெண்


‘உடல் வெப்பத்தால் ஒளிரும் விளக்கு’ கண்டுபிடித்த இளம்பெண்
x
தினத்தந்தி 28 March 2022 11:00 AM IST (Updated: 26 March 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

அறிவியல் துறையில் கண்டுபிடிப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறார்கள். அந்த வரிசையில் தடம் பதித்தவர் கனடாவைச் சேர்ந்த 24 வயது ஆன் மகோசின்ஸ்கி.

சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட ஆன் மகோசின்ஸ்கி, ஏழாம் வகுப்பு படிக்கும்போது மெழுகுவர்த்தியின் வெப்பத்தால் இயங்கக்கூடிய வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

அவரது 14 வயதில், பள்ளியில் தனது தோழி மரியா சோர்வாக இருப்பதைக் கண்டார். அவரது அருகில் சென்று விசாரித்தபோது ‘தன் வீட்டில் மின்சாரம் இல்லாததால் பாடங்களை சரியாக படிக்க முடியவில்லை. அதனால் வருத்தமாக இருப்பதாக’ தெரிவித்தார். அவர் கூறியதைக் கேட்டு ஆன் சிந்திக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து மனித உடலின் வெப்பத்தின் மூலம் இயங்கக்கூடிய ‘ஹாலோ பிளாஷ் லைட்’டைக் கண்டுபிடித்தார். இது கையிலிருக்கும் வெப்பத்தைக் கொண்டு  இயங்கக்கூடியது. ஆனின் கண்டுபிடிப்பு பிரபலமாகி, கலிபோர்னியாவில் நடந்த ‘சர்வதேச கூகுள் அறிவியல் கண்காட்சி’யில் முதல் பரிசையும், 25 ஆயிரம் டாலரையும் வென்றுள்ளது.

இதோடு நின்றுவிடாமல் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தியவர், சூடான காபி நிரம்பிய கோப்பையின் வெப்பத்தின் மூலம் கைப்பேசியை சார்ஜ் செய்யும் ‘இ-ட்ரிங்க்’ எனும் கருவியை கண்டுபிடித்தார். இவ்வாறு இயற்கை சார்ந்த, சுற்றுச்சூழலை சீர்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்காக கனடியன் அமைப்பில் இருந்து 50 ஆயிரம் டாலர் பரிசாகப் பெற்றார்.

“சிறுவயது முதலே எனக்கு அதிக கேள்விகள் தோன்றும். அதற்கான விடையை  அறிவியல் தந்ததால், அதுவே எனது வாழ்வின் கனவாக மாறியது. புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும்போது  புத்துணர்ச்சியாகவும், ஆனந்தமாகவும் உணர்கிறேன்” என்று கூறும் ஆன் மகோசின்ஸ்கி, கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகத் திறமை பெற்றவராக விளங்குகிறார். தற்போது கல்லூரியில் படித்துக்கொண்டே ‘மாகோட்ராநிக்ஸ்’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கூகுள் சயின்ஸ் கண்காட்சி,  இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளார். ஜீ7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கனடா நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து பேரில் ஒருவராக இடம் பெற்றார். கூகுள் பிக்சல் தூதர், அடிடாஸ் ஒரிஜினல்ஸ் தூதர், ஆர்க்டிக்கிற்கான கனடா சி3 பயணத்தின் இளைஞர் தூதர் போன்ற பல கவுரவ பதவிகளை வகித்துள்ளார்.

“மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்தவற்றை தினந்தோறும் 20 நிமிடங்களாவது செய்யுங்கள். உங்கள் முயற்சியில் ஈடுபாடும், உழைப்பும் இருந்தால் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்’’ என்கிறார். 

Next Story