சாதனைகளைச் செய்யும் சூடாமணி!


சாதனைகளைச் செய்யும் சூடாமணி!
x
தினத்தந்தி 2 May 2022 5:30 AM GMT (Updated: 30 April 2022 1:12 PM GMT)

எனது எட்டு வயதில், நான் வரைந்த ஓவியத்துக்காக பாரத ஸ்டேட் வங்கியியின் விருதைப் பெற்றேன். இது எனக்கு உத்வேகம் அளித்ததால், வரையும் திறனை மேம்படுத்துவதற்காக பெற்றோர் என்னை கலைக்கூடத்தில் சேர்த்தனர்.

மிழ் மொழிக்கு சேவை செய்வதை தனது லட்சியமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சூடாமணி. கதை, கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், பேச்சு என பன்முகத் திறமையோடு விளங்குகிறார். தனக்கென யூடியூப் சேனலைத் தொடங்கி அதில் தமிழ் மொழி தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். ‘உலக சாதனை விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள அவருடன் நடந்த உரையாடல் இதோ…

“என் தந்தை முத்துக்குமார், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தாய் ஜெயலட்சுமி தனியார் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனக்கு சிறுகதைகள், கவிதைகள், ஓவியம் வரைதல் போன்றவற்றில் ஆர்வம் உண்டு.

இதுவரை 20 சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். சில கதைகளைத் தொகுத்து ‘அம்மாவைத் தேடி’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். உருவப்படங்களை வரைவதில் அதிக ஆர்வம் உண்டு. கம்ப ராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களைப் படித்து அவை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறேன். தற்போது எனது யூடியூப் சேனலில் 70-க்கும் மேற்பட்ட  தமிழ் மொழி தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளேன். அவை பலரது வரவேற்பை பெற்றுள்ளன.

பேசுவதிலும், எழுதுவதிலும் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா ஊரடங்கு நாட்களில் எழுத்தாளர் நாறும்பூநாதன் கதைகளைக் கேட்டேன். அதனால் உண்டான ஆர்வத்தால் ஒரு கதை எழுத முயற்சித்தேன். நாறும்பூநாதன் என்னை ஊக்கப்படுத்தினார். அவர் வழிகாட்டுதலால் தொடர்ந்து கதைகளை எழுதி வருகிறேன். சங்க இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு, கவிதைகளை எழுதவும் முயற்சித்து கற்றுக்கொண்டேன். எழுதுவது போலவே, எனக்குப் பேசுவதிலும் ஆர்வம் இருந்ததால், யூடியூப் சேனல் தொடங்கி தொடர்ந்து பேசி வருகிறேன்.

ஓவியம் வரைவதற்கு எவ்வாறு கற்றுக்கொண்டீர்கள்?
எனது எட்டு வயதில், நான் வரைந்த ஓவியத்துக்காக பாரத ஸ்டேட் வங்கியியின் விருதைப் பெற்றேன். இது எனக்கு உத்வேகம் அளித்ததால், வரையும் திறனை மேம்படுத்துவதற்காக பெற்றோர் என்னை கலைக்கூடத்தில் சேர்த்தனர். அதன் மூலம் ஓவியத் திறனை வளர்த்துக்கொண்டேன்.

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்..
11 வயதுக்குள் 15 சிறுகதைகளையும், 12 தமிழ் கவிதைகளையும், 42 தமிழ் பேச்சு அடங்கிய வீடியோக்களையும் வெளியிட்ட சாதனைக்காக  ‘வஜூரா உலக சாதனை’ விருதைப் பெற்ேறன். ‘பொதிகை தமிழ்ச் சுடர்’, அப்துல்கலாம் உலக சாதனை சான்றிதழ், பாரதி பைந்தமிழ் விருது, தூய்மை இந்தியா குறித்த ஓவியத்துக்காக ‘ஸ்வச் பாரத் அபியான் பதக்கம்’, இளம் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளேன். எனது தமிழ் சார்ந்த செயல்பாடுகளுக்காக பல அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன்.

உங்களின் லட்சியம் என்ன?
ஆசிரியராகி நல்ல மாணவர்களை உருவாக்குவதோடு, அறம் சார்ந்த பல செயல்களைச் செய்ய வேண்டும். புதின எழுத்தாளராகி, தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். 

Next Story