பெண் கல்வியே சமூகத்தின் வளர்ச்சி - கல்யாணந்தி
சமூகம், இயற்கை என்று பல்வேறு காரணத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்குத் தொடர்ந்து உதவ வேண்டும் என்றால், முதலில் அமைப்பாக திரள வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். பிறகு தான் ‘புராஜக்ட் பியூச்சர் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவினேன்.
‘ஒரு குழந்தையை நல்ல முறையில் வளர்த்து சமூகத்திடம் ஒப்படைப்பதே, நாம் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்’ என்கிறார் கல்யாணந்தி சச்சிதானந்தன். தான் செய்யும் பணி சமூகத்திற்கும், நாளைய தலைமுறைக்கும் முக்கியமானது என்பதை உணர்ந்து, செயல்பட்டு வருகிறார். மனநல ஆலோசகர், போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர், மருந்தாளுனர் என பன்முக திறனோடு, தன் அனுபவங்கள் மூலம் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்கு பலம் சேர்த்து வருகிறார்.
“என் குழந்தைப் பருவத்தில், என்னுடைய கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்பை மாட்டிவிட்டு ‘நீ மருத்துவராகி சேவை செய்ய வேண்டும்’ என்று எனது அப்பா கூறுவார். அது நடக்கவில்லை. ஆனால் என் அப்பா சொல்லிய ‘சேவை செய்’ என்ற வார்த்தை, எனது வாழ்க்கையாகி விட்டது. என்னைச் சுற்றி இருந்த அனைவரும் எனக்கு நல்லதையே செய்தார்கள்.அதையே நானும் எனது சமூகத்துக்குத் திருப்பி செய்கிறேன்” என்ற கல்யாணந்தி சச்சிதானந்தத்திடம் பேசினோம்.
“என் பூர்வீகம் தமிழ்நாடு. நான் பிறந்தது இலங்கையில். 80-களில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய பல குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. தமிழகம் வந்த நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். அப்பா சச்சிதானந்தன் மருத்துவர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார். தாத்தா பழனிசாமி தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தவர். இவ்வாறு சமூகத்தோடு பிணைந்த குடும்ப பின்னணியைச் சேர்ந்தவள் நான். இளங்கலை மருந்தாளுனர் மற்றும் முதுகலை உளவியல் படித்திருக்கிறேன்.
2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோதுதான், முழுமையாக களத்தில் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கினேன். மழை வெள்ளத்தின் போது சென்னைக்கு வெளியே உள்ள கிராமங்கள், குறிப்பாக குடிசைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. என் நண்பர்களுடன் சேர்ந்து 2500 பேருக்கு உணவு, உடை கொடுத்து உதவினோம்.
சமூகம், இயற்கை என்று பல்வேறு காரணத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்குத் தொடர்ந்து உதவ வேண்டும் என்றால், முதலில் அமைப்பாக திரள வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். பிறகு தான் ‘புராஜக்ட் பியூச்சர் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவினேன்.
2021-ம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த போது, நாங்கள் வசிக்கும் பகுதியில் வருமானம் இழந்து உணவுக்கே போராடும் மனிதர்களை அடையாளம் கண்டோம். திருநங்கைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், வீடற்றவர்கள் என பலருக்கு, தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக மூன்று வேளை உணவு, மருந்து, உடைகளை வழங்கினோம்.
தற்போது நாங்கள் செய்யும் பணியைப் பார்த்து, நிறைய நண்பர்கள் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். அவர்கள் தான் எங்களின் பலம். சமூகத்திற்கு செய்யும் சிறிய உதவி பேரிடர் காலத்தில் மட்டும் இல்லாமல், தொடர்ந்து பயனளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் குழந்தைகள் மீது எங்கள் கவனத்தை முழுமையாக செலுத்தத் தொடங்கினோம்.
குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம், குழந்தைகள் மகிழ்ச்சியாக, சரியாக வளரவில்லை என்றால் பிரச்சினையுள்ள சமுதாயம் உருவாகும். மனநல ஆலோசகர் என்ற வகையில், பல்வேறு சமூக பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளைச் சந்திக்கிறேன். ‘குடித்துவிட்டு அம்மாவை அடிக்கும் அப்பா, அடித்தாலும் அவருக்கு சாப்பாடு போடும் அம்மா’ என தன் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு குழந்தை கவனிக்கிறது என்றால், ‘குடிகாரரோடு குடும்பம் நடத்திவிட முடியும் என்றும், பெண்களை அடிப்பது தவறு இல்லை’ என்றும் அந்தக் குழந்தையின் மனதில் பதிந்துவிடும். இதுதான் சமூக கட்டமைப்பு என்று நினைத்துக்கொள்ளும்.
இவற்றை தடுக்க வேண்டும் என்பதால்தான், எங்கள் அமைப்பு மூலம் குழந்தைகளுக்காக சில திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறோம். வறுமை கோட்டுக்கு கீழ், குடிசை பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாது. ஆகையால் ‘டாக்டர்ஸ் அவே’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு வாழை, மாதுளம், திராட்சை, பேரீச்சம் போன்ற பழங்களை வழங்குகிறோம். வாரத்திற்கு நான்கு நாட்கள் என, மாதத்திற்கு 16 நாட்கள் பழங்களை வழங்குகிறோம். இதன் மூலம் 1500 குழந்தைகள் பயனடைகிறார்கள்.
குடிசைப்பகுதியில் வசிக்கும் வளரிளம் பெண் குழந்தைகளுக்கு, ரத்தசோகை பாதிப்பு அதிகம் இருக்கும். அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாத சூழல் இருக்கும். அதனால் ‘இளவரசி’ என்ற திட்டம் மூலம் மாதம் 2 சானிட்டரி நாப்கின்கள், தினமும் பேரீச்சம் பழங்களை வழங்கி வருகிறோம்.
கூலி வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழலில் இருக்கும் வீட்டில் பிறந்த, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ‘சூப்பர் ஹூமன்ஸ்’ என்ற பெயரில் அவர்களுக்குத் தேவையான பராமரிப்பு வழிகளை செய்து வருகிறோம்.
வாழும் இடத்தின் சூழல், சமூகப் பின்னணி, குடும்ப வறுமை காரணமாக ஏராளமான குழந்தைகள் இறுக்கமாக இருப்பார்கள்; அதனால் அவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. விளையாட்டின் மூலம் அவர்களின் மகிழ்ச்சியை வெளிக்கொண்டு வருகிறோம். குறிப்பாக கால்பந்தில் அதிக கவனம் செலுத்துகிறோம்.
சமீபத்தில் கூட இலங்கை தமிழர் முகாமில் இருக்கும் 40 குழந்தைகளை, ஒரு கால்பந்து கிளப்பிற்கு அழைத்துச் சென்றோம். அதில் 2 குழந்தைகளை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த இரண்டு குழந்தைகளும் கோவாவில் நடக்கவிருக்கும் ‘ஆல் இந்தியா குளோபல் கப்’ போட்டியில் கலந்துகொள்ள போகிறார்கள்.
குழந்தைகளுக்காக நாம் செய்யும் உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டால் தான் பயனளிக்கும். அதனால்தான், நான் இருக்கும் பகுதியை சுற்றியுள்ள கோதாமேடு, திடீர் நகர், அடையாறு, கூவம் குடிசைப் பகுதிகள், அரசு கூர்நோக்கு பள்ளிகள், இலங்கை தமிழர் முகாம்கள் ஆகிய பகுதிகளில் வசிக்கும், படிக்கும் குழந்தைகளுக்கு உதவிகளை செய்து வருகிறோம். குழந்தைகளுக்கு மேலும் நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.
வறுமைதான் எனக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தியது. எனவேதான் குழந்தைகளுக்கு கல்வியை வழங்க வலியுறுத்துகிறேன். ஒரு பெண்ணின் கல்வியை சரியாக பயன்படுத்தும் சமுதாயம் தான், வளர்ச்சி அடைந்ததாக இருக்கும்” என முடித்தார் கல்யாணந்தி.
Related Tags :
Next Story