தயக்கத்தை நீக்கினால் தொழில் அதிபராகலாம் - ஹரிணி சிவகுமார்


தயக்கத்தை நீக்கினால் தொழில் அதிபராகலாம் - ஹரிணி சிவகுமார்
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 11:13 AM GMT)

2017-ம் ஆண்டு எனது தொழிலை வீட்டிலிருந்தபடியே ஆரம்பித்தேன். நான் தயாரித்தப் பொருட்களை இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் விற்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கிப் பயன்படுத்தினர். அதன் விளைவாக எனது தொழிலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

னது சொந்த பயன்பாட்டுக்காக, வீட்டு சமையல் அறையில் ஆரோக்கியமான அழகு சாதனப் பொருட்களை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கினார் ஹரிணி சிவகுமார். அவற்றின் மூலம் அதிக பயன்கள் கிடைத்ததால், அதையே தொழிலாக செய்ய ஆரம்பித்தார்.  தனது விடா முயற்சியால் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறார். இவர் பயன்படுத்தும் பொருட்களில் 99 சதவீதம் ரசாயனங்களும், பிளாஸ்டிக்கும் இடம்பெறுவது இல்லை. தனது வெற்றி பாதையை பற்றி அவர் கூற கேட்போம்...

“2009-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. அதுவரை சென்னையில் இருந்த நான், எனது முதல் குழந்தைக்கு ஏற்பட்ட டவுன் சின்ட்ரோம் பாதிப்புக்கான சிகிச்சைக்காக, வங்கிப் பணியைத் துறந்து,  ஐதராபாத்துக்கு குடிபெயர்ந்தேன். 2015-ம் ஆண்டு டெல்லி சென்று வசித்தேன். அங்கு எனது 2 மகன்களும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததால், எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எனவே அதனை பயனுள்ளதாக மாற்ற நினைத்தேன். அதன் விளைவு தான் நான் தொழில் தொடங்கியது.

டெல்லியின் சீதோஷ்ண நிலை மிகவும் மாறுபட்டு இருந்தது. அதன் விளைவாக சருமப் பிரச்சினைகளும் அதிகரித்தது. எனவே சருமப் பிரச்சினைகளை நீக்க யூடியூப் போன்ற வலைத்தளங்களில் தீர்வுகளைத் தேடி, வீட்டிலேயே இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு அழகு சாதனப் பொருட்களை உருவாக்கத் தொடங்கினேன். படிப்படியாக அதன் மீதான ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே அந்தத் துறையில் முறையாக படித்து பட்டம் பெற்றேன்.

2017-ம் ஆண்டு எனது தொழிலை வீட்டிலிருந்தபடியே ஆரம்பித்தேன். நான் தயாரித்தப் பொருட்களை இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் விற்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கிப் பயன்படுத்தினர். அதன் விளைவாக எனது தொழிலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

2018-ம் ஆண்டு யதேச்சையாக எனது தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் வீடு முழுவதும் நிறைந்திருந்த பொருட்களைப் பார்த்து அதிருப்தி அடைந்து என்னைத் திட்டத்  தொடங்கினார். ஆனால், நான் தளராமல் அவரை உட்காரவைத்து பொறுமையாக எனது தொழிலைப் பற்றிய விளக்கத்தையும், எனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் கூறினேன்.

அதனைப் புரிந்துகொண்ட எனது தந்தை எனக்கு ஊக்கமளித்து, சிறியதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கலாம், அதன் வரவேற்பைப் பொறுத்து 
விரிவாக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார். அதன்படி 2019-ம் ஆண்டு எங்கள் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

குடும்பத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது?
எந்த ஒரு நிறுவனம் தொடங்குவதற்கும் குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியம். எனது வெற்றிக்கு காரணமாக நான் எனது அப்பாவை கூறுவேன். அவர் எனது ஆர்வத்தை புரிந்துகொண்டு, அனைத்துப் படிநிலை
களிலும் எனது கூடவே இருந்து அடுத்த நிலைக்கு அழைத்து சென்றார்.

அடுத்து எனது குழந்தைகள், எனது குழந்தைக்கு டவுன் சின்ரோம் இருந்ததால் அவனது அனைத்து தேவைகளையும் நானே பூர்த்தி செய்வேன். ஆனால் இந்த நிறுவனம் ஆரம்பித்த பிறகு அவன் என்னை சார்ந்து இருப்பதை குறைத்துவிட்டான். அவனுக்கான பணிகளை அவனே மேற்கொள்கிறான். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

உங்கள் தயாரிப்புகளின் சிறப்பு என்ன?
எனது தயாரிப்புகளை சந்தையில் வெளியிடும் முன்பு ‘கிளினிக்கல் ரிசர்ச்' எனப்படும் சோதனையை எனது சொந்த செலவில் செய்து, அதில் வெற்றி பெற்றால் மட்டுமே வெளியிடுவேன். அதற்கான சான்றிதழையும் வெளியிடுவேன். மேலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவண்ணம், ஷாம்புவை பாட்டில்களில் அடைக்காமல் சோப்பு வடிவில் தயாரித்து விற்கிறோம். இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறையும்.

பெண்களை நீங்கள் எவ்விதம் ஆதரிக்கிறீர்கள்?
எனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 80 சதவீதம் பெண்கள் தான்.  நான் முதன் முதலில் ஆட்கள் தேவை என்பதை, எனது அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரிடம் தான் கூறினேன். அடுத்த நாள் காலையில் எனது வீட்டு வாசலில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர். 

அவர்களில் ஒரு இளம் பெண் நன்றாகப் படித்திருந்தும், ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது என்பதால் வீட்டு வேலைக்கு வந்திருந்தார். அப்பொழுதே முடிவெடுத்து விட்டேன் அவர் தான் எனது நிறுவனத்துக்கு பொருத்தமானவர் என்பதை. எனவே அவரை அப்போது ரூ.5 ஆயிரம் சம்பளத்தில்  பணியில் அமர்த்தி, முறையான பயிற்சி அளித்தேன். இன்று அவருக்குக் கீழ் 20 பேர் வேலை செய்யும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார்.  

மேலும் 8 மடங்கு அதிகமான சம்பளத்தையும் தனது திறமையால் அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார். இதே போல எங்களை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களை தேடி, பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். ஆட்டிசம்  போன்ற குறைபாடு உள்ளவர்களையும் கண்டறிந்து அவர்களையும் பணியில் அமர்த்தியுள்ளோம். அவர்களால் இயன்ற வேலையை செய்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்கின்றனர்.

நீங்கள் தொழில் தொடங்கும்போது ஏற்பட்ட நெருக்கடிகளை எப்படி சமாளித்தீர்கள்?
முதலில், ஒரு குடும்பத் தலைவியாக வீட்டை விட்டு வெளியே வருவது கடினமாக இருந்தது. வீட்டில் 6, 7 வருடங்களாக இல்லதரசியாக பழகிய எனக்கு, என்னைச் சார்ந்த குடும்பத்தை விட்டு வெளியே வந்து நிறுவனத்தைத் தொடங்குவது பெரும் நெருக்கடியாக இருந்தது. என்னைப் போல் பல பெண்கள் இதை யோசித்து தங்களுக்கு பிடித்த தொழிலை செய்யாமல் இருப்பார்கள். ஆனால் எனது குடும்பத்தினரின் ஆதரவால் நான் அதை வென்றேன். 

இரண்டாவதாக திட்டமிடுதல், முறையாக திட்டமிட்டு நேர மேலாண்மையை கடைப்பிடித்தேன். எனக்குரிய கால அட்டவணையை நானே வகுத்து அதன்படி செயல்பட்டேன்.

மூன்றாவதாக எனக்கென ஒரு பொழுதுபோக்கை உருவாக்கி, அதில் எனக்கென நேரம் செலவழித்தேன். உதாரணமாக எனக்கு மிதிவண்டி பயணம் மிகவும் பிடிக்கும். நீண்ட தூரம் சைக்கிளிங் செய்வது எனக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இது போன்று உங்களுக்கென ஒரு பொழுதுபோக்கை நியமித்துக்கொள்வது நல்லது.

உங்களது லட்சியம் என்ன?
எனது நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பெண்கள், ஆட்டிசம் மற்றும்  டவுன்  சின்ரோம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து, முடிந்தவரை சமுதாயத்திற்கு பயனுள்ளதாய் இருக்க வேண்டும். 

Next Story