பணம் தரும் பனைப் பொருட்கள்


பணம் தரும் பனைப் பொருட்கள்
x
தினத்தந்தி 18 Oct 2021 11:45 AM GMT (Updated: 18 Oct 2021 11:45 AM GMT)

பனை ஓலைகள் மூலம் தட்டு, அஞ்சறைப் பெட்டி, பரிசுப் பொருட்கள், வண்ணப் பூக்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் தயாரிப்புகளை தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வட மாநிலங்களிலும் ஆர்வமுடன் ஆன்லைன் மூலம் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

னை ஓலை மூலம் பயனுள்ள பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் பாரதி. திருநெல்வேலி அருகே உள்ள திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த இவர், தனது முயற்சியால் பனைத் தொழிலில் தனி முத்திரை பதித்ததுடன், மற்றவர்களுக்கும் அதைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறார். இது பற்றி அவர் கூறியது...  



“நான் எம்.ஏ., பி.எட்., முடித்துவிட்டு தனியார் பள்ளியில் தமிழாசிரியையாக சிறிது காலம் பணியாற்றினேன். திருமணத்துக்குப் பின்பு குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், வேலையைத் தொடர முடியாமல் போனது. அதேநேரம் வீட்டில் இருந்தவாறே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 

எனவே ஆரி வேலைப்பாடு, ஜூவல்லரி மேக்கிங் படித்துவிட்டு எனது சகோதரிகளுடன் சேர்ந்து சிறியதாக பெண்களுக்கான ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்கும் கடையை நடத்தினேன். 

அதன் பிறகு ஊறுகாய், சாக்லெட் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பனை செய்து தொழிலை விரிவுபடுத்தினோம். இவை மட்டுமில்லாமல் வேறு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அந்த நேரத்தில் தான், எங்கள் ஊரில் நடந்த ஒரு சம்பவம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

கூலி வேலை செய்வதற்காக எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் தினமும் பக்கத்துக்கு ஊர்களுக்குச் சென்று வருவார்கள். அவ்வாறு ஒரு நாள் வேலைக்கு சென்று வரும்போது ஏற்பட்ட விபத்தில், எங்கள் ஊரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பெண்கள் மரணம் அடைந்தனர். 

அந்தச் சம்பவம் என் மனதை உலுக்கியது. குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பக்கத்து ஊருக்கு வேலை தேடிச் செல்லும் பெண்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன்.

திருமலைக்கொழுந்துபுரத்தில் பனை மரங்கள் அதிகமாக இருந்ததால், அவற்றைக்கொண்டு ஏதாவது செய்யலாம் என நானும், எனது தோழி அனிதாவும் யோசித்தோம். அதன் பிறகே பனை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிலை ‘பனை விருட்சம்’ என்ற பெயரில் ஆரம்பித்தோம்.

பனை ஓலைகள் மூலம் தட்டு, அஞ்சறைப் பெட்டி, பரிசுப் பொருட்கள், வண்ணப் பூக்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் தயாரிப்புகளை தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வட மாநிலங்களிலும் ஆர்வமுடன் ஆன்லைன் மூலம் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். 

இந்தப் பனை ஓலைகள் மட்கினால் மண்ணுக்கு வளம் சேர்க்கும். நெகிழியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பனை ஓலைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம்.  

விருப்பம் உள்ளவர்களுக்கு பனை ஓலைப் பொருட்களைத் தயார் செய்வது குறித்த செய்முறையையும் ஆன்லைன் மூலமாக கற்றுத் தருகிறோம்.  இதைக் கற்றுக்கொண்டால் பொருளாதாரத்தை 
மீட்டெடுக்கலாம்’’ என்கிறார் பாரதி.

உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பனைப் பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரதி ‘அன்னம்’, ‘வெற்றிவாகை’ போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். 

Next Story