ஆடைகளில் மிளிரும் எம்பிராய்டரியின் வரலாறு தெரியுமா?


ஆடைகளில் மிளிரும் எம்பிராய்டரியின் வரலாறு  தெரியுமா?
x
தினத்தந்தி 1 Nov 2021 11:00 AM IST (Updated: 30 Oct 2021 5:29 PM IST)
t-max-icont-min-icon

இன்று எம்பிராய்டரி வடிவங்கள் இல்லாத ஆடைகளே இல்லை என்றாகிவிட்டது. இப்போது, கணினியிலும் வடிவங்களை உருவாக்கும் எம்பிராய்டரி முறைகள் வந்துவிட்டன.

சாதாரண ஆடைகளை மிகவும் அழகாக மாற்றும் கலைதான் எம்பிராய்டரி தையல் வேலைப்பாடு. இது கற்பனைத் திறனுக்குத் தீனி போடுவதுடன், ஆடைகளை மிடுக்காகவும் காட்டக்கூடியது.  தற்போது இதில் பல பாணிகள் வந்துவிட்டன.

எம்பிராய்டரி எங்கிருந்து வந்தது? முதலில் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது தெரியுமா?
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பிரபலமாக இருக்கும் எம்பிராய்டரியின் பூர்வீகம் சீனா. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் இது 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இக்கலையில், பெரும்பாலும் கையால் தைக்கப்பட்ட ஆடைகள், தலைக்கு அணியும் தொப்பிகள், ஷூக்கள் தயாரிக்கப்பட்டன.  சைபீரியாவில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விலங்குத் தோல்களில் எம்பிராய்டரி செய்யப்பட்டது. 

இதில், பட்டு நூல், பல விலை உயர்ந்த கற்கள், முத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. எம்பிராய்டரியின் ஊசி வேலைப்பாடுகள், ஓரியண்ட் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் தோன்றியது. 


ஒவ்வொரு காலத்திலும் பல புதிய மாற்றங்களைப் பெற்று 1500-ம் ஆண்டில் ஐரோப்பாவிற்குள் நுழைந்தது எம்பிராய்டரி கலை. அதன் பின்னரே இது உலகின் பிற பகுதிகளிலும் ஆடம்பரமான ஒன்றாக மாறிப் பரவியது. 

 கூடைகள், நீதிமன்ற உடைகள், வீட்டு அலங்காரப் பொருட்களில் எம்பிராய்டரி செய்தனர். இவ்வகை ஆடைகள் எப்போதுமே ஆடம்பரம் நிறைந்ததாக கருதப்பட்டது.

 மன்னர்கள், ஜமீன்தார்கள் இந்த ஆடைகளை அதிக அளவில் பயன்படுத்தினர். இவ்வாறு ஒவ்வொரு நாடாக பரவிய இந்தக் கலை, மெல்ல மெல்ல இந்தியாவிற்குள் நுழைந்தது. 

எம்பிராய்டரியில் இருந்துதான் கம்பளி வேலைகள், பெர்லின் கம்பளி, கேன்வாஸ் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. 1870-ம் ஆண்டுகளில், குறுக்குத் தையல் மூலம் பிரபலமானது. 

படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று எம்பிராய்டரி வடிவங்கள் இல்லாத ஆடைகளே இல்லை என்றாகிவிட்டது. இப்போது, கணினியிலும் வடிவங்களை உருவாக்கும் எம்பிராய்டரி முறைகள் வந்துவிட்டன.

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த எம்பிராய்டரி கலை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. இத்தாலியில்  பிரபலமானது ‘அசசி எம்பிராய்டரி’. இது, மேலும் கீழுமாக, சிவப்பு நிற நூலில் வடிவமைக்கப்படும். 

பிரேசில் நாட்டில் பிரபலமானது ‘பிரேசிலியன் எம்பிராய்டரி’ எனும் முடிச்சுகள் மூலம் தைக்கும் தையல் முறை. துணிகளில் மலர்கள், இலைகள் போன்றவற்றை அழகாக எடுத்துகாட்டும் வகையில் இந்தத் தையல் முறை இருக்கும்.  

இந்தியாவிலும் இதற்குப் பல பரிமாணங்கள் கிடைத்துள்ளன. பல மாநிலங்களில், பல விதங்களில் இதற்கு அடையாளம் கொடுத்துள்ளனர். அதில் மணிகள், கற்கள் கொண்டு வடிவமைக்கப்படும் ‘ஆரி எம்பிராய்டரி’ முறை, உத்தரகாண்டின் பாரம்பரிய ‘சிக்கன்கரி’ முறை, கர்நாடகாவின் ‘கசூதி’ முறை, பஞ்சாப் மாநிலத்தின் ‘புல்காரி’ முறை என பல வகை எம்பிராய்டரி முறைகள் பிரபலமாக உள்ளன.

Next Story