அலங்கார விளக்குகள்


அலங்கார விளக்குகள்
x
தினத்தந்தி 8 Nov 2021 11:00 AM IST (Updated: 7 Nov 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை அழகாக்கும் விளக்குகளை எப்படி செய்வது என்பதை விளக்குகிறோம்.

வளையல் விளக்கு:



தேவையான பொருட்கள்:
கண்ணாடி வளையல்கள் - தேவைக்கேற்ப
அகன்ற மெழுகுவர்த்தி சிறியது - 1
பசை - 1

செய்முறை:
ஒரு வளையல் மீது மற்றொரு வளையலை வைத்து, சுற்றிலும் பசை தடவி ஒட்டிக் கொள்ளவும். இதே போல் தேவைக்கேற்ப வளையல்களை ஒன்றன் மீது ஒன்றாக பொருத்தி  ஒட்டவும். அதன் நடுவில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால், மெழுகுவர்த்தியின் ஒளியும், கண்ணாடி வளையல்களின் பிரதிபலிப்பும் அந்த அறையையே வண்ணமயமாக மாற்றும்.


தாமரை விளக்கு:



தேவையான பொருட்கள்:
பிளாஸ்டிக் ஸ்பூன் - 44
அகன்ற மெழுகுவர்த்தி - 1
இளஞ்சிவப்பு நிற பெயிண்ட் - 1 பாட்டில்
பச்சை நிற பெயிண்ட் - 1 பாட்டில்
தண்ணீர் பாட்டில் மூடி - 1
பழைய சி.டி. அல்லது அட்டை - 1
பசை

செய்முறை:
  1.  படத்தில் காட்டியபடி 31 ஸ்பூன்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டி பின்பு மேற்பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

  2. ஸ்பூனின் பின்புறத்தில் பசையைத் தடவி சி.டி.யில் சுற்றிலும் ஒட்டவும்.

  3. இதே போல் தொடர்ந்து 3 அடுக்காக ஒட்டவும்.

  4.  சி.டி.யின் நடுவில் தண்ணீர் பாட்டில் மூடியில் இளஞ்சிவப்பு வண்ணமடித்து பசையால் ஒட்டி, பக்கவாட்டில் உங்களுக்கு பிடித்த அலங்கார கற்களால் அலங்கரிக்கவும்.

  5. சி.டி.யின் பின்புறத்தில் பச்சை நிற ஸ்பூன்களை ஒட்டவும். இப்பொழுது சி.டி.யின் நடுவில் மெழுகுவர்த்தியை ஒளிர விடவும்.


காகித விளக்கு:



தேவையான பொருட்கள்:

காகிதம் - தேவைக்கேற்ப
குச்சி (அ) கம்பி - 1
பசை - 1
கத்தரிக்கோல் - 1
பெயிண்ட் - 1 பாட்டில்
தண்ணீர் பாட்டில் மூடி - 3
மணிகள் (அலங்கரிக்க) - தேவைக்கேற்ப 
அட்டை, வண்ண காகிதம் - 1
மெழுகுவர்த்தி - 1

செய்முறை:

1, 2. படத்தில் காட்டியவண்ணம் ஒரு காகிதத்தை செவ்வக வடிவில் கத்தரித்து, அதன் முனையில் குச்சி அல்லது கம்பியால் சுருட்டி அதன் இறுதியில் பசை தடவி ஒட்டியதும், குச்சியை வெளியே எடுக்கவும். தொடர்ந்து இதே போல் தேவைக்கேற்ப காகிதங்களை சுருட்டி எடுத்துக்கொள்ளவும்.
3. கத்தரியின் பின்புறத்தால், காகித சுருட்டலை தட்டையாக மாறும் வரை லேசாக அழுத்தவும்.
4, 5, 6. இப்பொழுது காகித சுருட்டலை வட்ட வடிவமாக சுருட்டவும். முதல் சுருட்டலின் இறுதியில் பசை தடவி, அடுத்த சுருட்டலை சேர்த்து சுருட்டவும். இவ்வாறு உள்ளங்கை அளவிற்கு வரும் வரை சுருட்டவும்.
7, 8. பின்னர் இரு பெருவிரலையும் நடுவில் வைத்து நடுப்புறம் லேசாக குழி விழும் வரை அழுத்தி, அதன் முனையில் ஒரு புறம் கையால் குவிக்கவும்.
9, 10. அகல் விளக்கு வடிவம் வந்ததும், முழுவதும் பசை தடவி காய்ந்ததும் விருப்பமான வண்ணம் தீட்டங்கள்.
11. பின்பு அலங்காரத்திற்காக சுற்றிலும் மணியை ஒட்டவும்.
12. ஒரு வட்ட வடிவ அட்டையின் மீது வண்ண காகிதத்தை ஒட்டி, அதன் பின்புறம் சுற்றிலும்  கத்தரித்து படத்தில் காட்டியவாறு ஒட்டவும்.
13. தண்ணீர் பாட்டில் மூடியில் பசை தடவி அட்டையின் பின்புறம் ஒட்டவும்.
14, 15. தயார் செய்து வைத்த விளக்கின் பின்புறம் பசை தடவி அட்டையின் முன்புறம் ஒட்டவும். அதன் நடுவில் மெழுவர்த்தியை ஒளிர விடவும்.
அழகாக மிளிரக்கூடிய அகல் விளக்கு இப்பொழுது தயார்! 

Next Story