களிமண்ணில்... கலைவண்ணம்...


களிமண்ணில்... கலைவண்ணம்...
x
தினத்தந்தி 15 Nov 2021 5:30 AM GMT (Updated: 13 Nov 2021 11:19 AM GMT)

தோடு, வளையல், நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லெட், கொலுசு போன்ற நகைகளைத் தயார் செய்கிறேன். மேலும் பெண்கள் பயன்படுத்தும் பைகள், மணிபர்ஸ் ஆகியவற்றை பாலிமர் களிமண் கொண்டு அலங்கரித்துக் கொடுக்கிறேன்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டியைச் சேர்ந்தவர் காயத்ரி செல்வராஜன். இவர் எம்.காம்., பட்டதாரி. பாலிமர் களிமண் மூலம் நகைகள் தயார் செய்கிறார். அதற்கான மூலப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து வரவழைக்கிறார். இது குறித்து அவரே கூறுகிறார்:

“எனக்குச் சிறு வயதில் இருந்தே மலர்களை மிகவும் பிடிக்கும். மலர்களை வைத்து ஏதாவது கைவினைப் பொருள் செய்து பார்ப்பேன். அதுவே நாளடைவில் களிமண் மூலம் மலர் உருவங்கள் தயார் செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது.

சமூக வலைத்தளங்களில் கைவினைப் பொருட்கள் செய்யும் பதிவுகளை அடிக்கடி பார்ப்பேன். நான் தயாரிக்கும் கைவினைப் பொருள் எல்லோரும் செய்வதைப் போல இருக்கக் கூடாது, தனித்தன்மையுடன் கூடிய பொருளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பித்ததுதான் பாலிமர் களிமண் நகைகள். 

இதற்கான களிமண் வகைகளை வெளிநாட்டிலிருந்து வரவழைக்கிறேன். மேலும் அதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளையும் வெவ்வேறு இடங்களிலிருந்து வரவழைத்து வாங்குகிறேன்.

பாலிமர் களிமண்ணை பேக்கிங் செய்து, நகைகள் தயாரிக்கிறேன். அதன் காரணமாக நான் தயார் செய்யும் நகைகளின் வண்ணங்கள் மாறாது. இந்த வகை நகைகள் குறைவான எடை கொண்டவை. எளிதில் உடையாதவை.

தோடு, வளையல், நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லெட், கொலுசு போன்ற நகைகளைத் தயார் செய்கிறேன். மேலும் பெண்கள் பயன்படுத்தும் பைகள், மணிபர்ஸ் ஆகியவற்றை பாலிமர் களிமண் கொண்டு அலங்கரித்துக் கொடுக்கிறேன்.

எனது தயாரிப்புகளுக்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள்.

வாடிக்கையாளர் விரும்பியபடி அவர்கள் உடைகளுக்கு ஏற்ற நிறங்களில் நகைகள் வடிவமைக்கிறேன்.

ரோஜா, செம்பருத்தி மற்றும் சூரியகாந்திப் பூக்கள் போன்ற வடிவமைப்பிலும் நகைகளை உருவாக்குகிறேன். இதைத் தொழிலாகச் செய்ய ஆரம்பித்த போது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

இதில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கும் எண்ணம் உள்ளது.

எப்போதும் என்னை ஊக்கப்படுத்துவது எனது பெற்றோர்தான். என்னைப் போல ஒவ்வொரு பெண்ணும் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருக்க வேண்டும். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு எப்போதும் பலன் தரும்” என்கிறார் காயத்ரி. 

Next Story