சுவர் ஓவியத்தில் கலக்கும் கல்லூரி மாணவி


சுவர் ஓவியத்தில் கலக்கும் கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 29 Nov 2021 11:00 AM IST (Updated: 27 Nov 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் வாசல் உள்ளே நுழைந்து வருபவர்கள், வரவேற்பு அறையின் சுவரில் நான் வரைந்து இருக்கும் மாடிப் படிக்கட்டுகள், திறந்திருக்கும் நுழைவாயில் கதவுகள், இயற்கை காட்சியைப் பார்த்து ‘நாம் இன்னும் வீட்டின் உள்ளே போகவில்லையோ?’ என திகைத்து நின்று விடும் படியாக, தத்ரூபமான சுவர் ஓவியம் ஒன்று வரைந்தேன்.

பார்ப்பவர்கள் அனைவரும் பிரமிக்கும் வகையில் கண்கவர் சுவர் ஓவியங்களை வரைந்து வருகிறார் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ.  ஓசூரில் வசிக்கும் இவர், பட்டப்படிப்பு (டிசைன்) மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அவரது பேட்டி..

“என் அப்பா நரசிம்மன் தனியார் நிறுவன அதிகாரி. அம்மா அஞ்சலா குடும்பத்தலைவி. தாத்தா-பாட்டி ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து 
வருகிறோம். சிறு வயதில் இருந்தே எனக்குக் கலை மீது ஆர்வம் இருந்தது. அதைத் தெரிந்துகொண்ட குடும்பத்தினர் என்னை ஊக்குவித்தார்கள்.

நடனம், இசை, ஓவியம் போன்றவற்றை முறையாகக் கற்றுக் கொள்வதற்கு அனுபவமிக்க ஆசிரியரை ஏற்பாடு செய்தனர். நான் முழுமனதுடன் கற்றுக்கொண்டு, அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

பென்சில் ஓவியம், சார்கோல் பெயிண்டிங், வாட்டர் கலர்ஸ், அக்ரலிக் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங் ஆகியவற்றை செய்திருக்கிறேன்.
‘காகிதத்தில் வரைந்து கொண்டிருந்த ஓவியங்களை, வீட்டுச் சுவரில் வரைந்து பார்த்தால் எப்படி இருக்கும்?’ என்று சிந்தித்து, கல்லூரி விடுமுறை நாட்களில் சுவரில் வரைய ஆரம்பித்தேன். 

நான் குழந்தையாய் இருந்தபோது வீட்டுச் சுவரில் கிறுக்கியதற்கே ‘சபாஷ்’ போட்டு பாராட்டிய குடும்பத்தினர், கண்கவர் வண்ண ஓவியங்களை வீட்டின் சுவர் முழுவதும் வரைந்ததும் ‘சூப்பர் ஜெயஸ்ரீ. ரொம்ப அற்புதமாக இருக்கு’ என்று ஊக்கமூட்டி, என் ஆர்வத்தை மேலும் தூண்டினார்கள்.

சுவர் ஓவியங்களை, அக்ரலிக் பெயிண்டிங் முதன்மை நிறங்களான சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வண்ணக்கலவை செய்து வரைந்தேன். வீட்டின் வாசல் உள்ளே நுழைந்து வருபவர்கள், வரவேற்பு அறையின் சுவரில் நான் வரைந்து இருக்கும் மாடிப் படிக்கட்டுகள், திறந்திருக்கும் நுழைவாயில் கதவுகள், இயற்கை காட்சியைப் பார்த்து ‘நாம் இன்னும் வீட்டின் உள்ளே போகவில்லையோ?’ என திகைத்து நின்று விடும் படியாக, தத்ரூபமான சுவர் ஓவியம் ஒன்று வரைந்தேன்.

அந்த ஓவியத்தைப் பார்த்தவர்கள் ‘இது உண்மையா? ஓவியமா?’ என தொட்டுப் பார்த்து அதிசயப்படுவார்கள். அதுபோல் இலை, தழை ஓவியங்களைத் தொட்டுப் பார்த்ததும் ‘ஓ… இது உண்மையான இலை இல்லையா…?’ என்று பரவசப்படுவார்கள்.

சுவர் ஓவியங்கள் வரைந்து முடிப்பதற்கு பன்னிெரண்டு மணிநேரம் கூட ஆனதுண்டு. கல்லூரியில் என்னுடன் படிக்கும் சக தோழிகள், என் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு, தங்கள் வீடுகளுக்கும் வந்து வரைந்து கொடுக்கும்படி கேட்பார்கள். நானும் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி, ஆத்ம திருப்தி அடைந்து விடுகிறேன்” என்கிறார் ஜெயஸ்ரீ.

Next Story