பெண்கள் உயர குடும்ப அங்கீகாரம் முக்கியம்!


பெண்கள் உயர குடும்ப அங்கீகாரம் முக்கியம்!
x
தினத்தந்தி 13 Dec 2021 11:00 AM IST (Updated: 11 Dec 2021 2:45 PM IST)
t-max-icont-min-icon

எவ்வளவு கவலைகள் இருந்தாலும், நூல் எடுத்து கைவினைப் பொருட்கள் செய்ய ஆரம்பித்தால் அனைத்தையும் மறந்து விடுவேன். புதிது புதிதாக என்னவெல்லாம் செய்யலாம் என்ற எண்ணம் மட்டும் தான் மனதில் தோன்றும்.

குடும்பப் பொறுப்பையும் கவனித்துக் கொண்டு, சுயதொழிலிலும் ஈடுபட்டு பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குபவர் கைவினைக் கலைஞர் அஞ்சனா. சிறந்த லட்சியத்தை மனதில் வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு அதை நோக்கி முன்னேறி வருபவர். அவரிடம் பேசினோம்...

உங்களைப் பற்றி?
தேனி மாவட்டம் கோட்டூரில் பிறந்து வளர்ந்த நான், பொறியியலில் முதுகலை படித்துள்ளேன். கணவர் பிரபாகரன் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்களுக்கு பிரபஞ்சன் கென்னடி எனும் ஒரு வயது மகன் இருக்கிறான். இப்போது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வசிக்கிறோம்.

சுயதொழில் செய்யும் ஆர்வம் வந்தது எப்படி?
ஆரம்பத்தில் பொழுதுபோக்காக கைவினைப் பொருட்கள் செய்யத் தொடங்கினேன். நாளடைவில் ஆர்வம் அதிகரிக்கவே, விதவிதமாக கற்றுக்கொண்டு தயாரித்தேன். கல்லூரியில் படித்தபோது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரத்தில் டியூஷன் வகுப்பு நடத்தினேன். அப்போதே சுயமாக, தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணமே, இப்போது என்னைத் தொழில் முனைவோராக உருவாக்கியிருக்கிறது.

என்னென்ன கைவினைப் பொருட்கள் தயாரிக்கிறீர்கள்?
விதவிதமான வீட்டு அலங்காரப் பொருட்கள், குழந்தைகளுக்கான தொட்டில், கதவு அலங்காரத் தோரணம், மப்ளர், மணிபர்ஸ், கீ செயின் போன்ற பொருட்களை காகிதங்கள் மற்றும் உல்லன் நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கிறேன். சிறிய அளவில் விற்பனை நிலையம் அமைத்து, எனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறேன். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்பவும் செய்து கொடுக்கிறேன்.

உங்கள் வளர்ச்சிக்கு எதைக் காரணமாக நினைக்கிறீர்கள்?
எவ்வளவு கவலைகள் இருந்தாலும், நூல் எடுத்து கைவினைப் பொருட்கள் செய்ய ஆரம்பித்தால் அனைத்தையும் மறந்து விடுவேன். புதிது புதிதாக என்னவெல்லாம் செய்யலாம் என்ற எண்ணம் மட்டும் தான் மனதில் தோன்றும். அதுவே எனது வளர்ச்சிக்கு முதல் காரணம்.

‘படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்யாமல், கைவினை வேலைகளில் ஏன் ஈடுபடுகிறாய்?' என்று கேட்டு சிலர் மனம் தளரச் செய்ததுண்டு. ‘மற்றவர்கள் பேசுவதை எல்லாம் பொருட்டாக நினைக்க வேண்டாம்; உனக்கு தோன்றுவதைச் செய்' என்று ஊக்குவித்த, இப்போதும் ஊக்குவிக்கிற கணவரின் ஒத்துழைப்பு அடுத்த காரணம். எனது அக்கா, நான் துவண்டு நிற்கும் போதெல்லாம் உற்சாகப்படுத்தி, தந்தை நிலையில் இருந்து என்னை உயர்த்தியுள்ளார்.

உங்கள் லட்சியம் என்ன?
இந்தியாவில் சிறந்த பெண் தொழில்முனைவோர் என்ற தகுதிக்கு உயர வேண்டும். எனது கைவினைப் பொருள் விற்பனையகத்தை மிகப்பெரிய நிறுவனமாக உயர்த்தி, ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்.

சமூகத்திற்குச் சொல்ல விரும்புவது?
எல்லா பெண்களிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை வெளிப்படுத்துவதற்கு அவர்களின் குடும்பத்தினர் ஆதரவும், அங்கீகாரமும் அளிக்க வேண்டும். சுற்றமும் அவர்களுக்குத் துணையாக இருந்தால், பெண்கள் வாழ்வில் மிகப்பெரிய இடத்தை அடைவார்கள்.

Next Story