உள்ளத்தின் உறுதியால் வெற்றி பெற்ற சுகந்தினி


உள்ளத்தின் உறுதியால் வெற்றி பெற்ற சுகந்தினி
x
தினத்தந்தி 20 Dec 2021 5:30 AM GMT (Updated: 18 Dec 2021 10:02 AM GMT)

நாங்கள் செய்த கைவினைப் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. என்னுடைய தயாரிப்புகள் பிடித்துப்போனதால் பலர் அதைக் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். அதுதான் என் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றியது.

புற்றுநோய் அறுவை சிகிச்சை, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்கவே முடியாத நிலை என உடல் ஆரோக்கியத்தில் பல சவால்களை சந்தித்தவர் சுகந்தினி பாலாஜி. அவற்றையெல்லாம் தனது உள்ளத்தின் உறுதியாலும், குடும்பத்தின் ஆதரவாலும் எளிதாகக் கடந்து, தொழில் முனைவோராக வெற்றி பெற்று இருக்கிறார். கைவினைக் கலையில் பல சாதனைகள் செய்து, அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

சுகந்தினி பாலாஜி பொருளாதார படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர். கைவினைக் கலையில் டிப்ளமோ படிப்பும், அழகுக்கலையும் படித்துள்ளார். தான் கற்ற கலையை பலருக்கும் சொல்லிக்கொடுத்து வருகிறார். சோதனைகளை சாதனைகளாக்கிய தன்னுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

“நான் சிதம்பரத்தில் வசிக்கிறேன். கணவர் பாலாஜி சீனிவாசன். எனக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். எனது அம்மா கைவினைப் பொருட்கள் தயார் செய்வதில் கைதேர்ந்தவர். அவரைப் பார்த்துதான் எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. 8-ம் வகுப்பு படிக்கும் போதே நிறைய பரிசுப் பொருட்கள் தயார் செய்திருக்கிறேன்.

திருமணத்திற்குப் பிறகு எனது திறமையையும், ஆர்வத்தையும் புரிந்து கொண்ட கணவர், என்னை கைவினை சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க வைத்து ஊக்கமளித்தார். பின்பு சிறியதாக கடை ஆரம்பித்து, நாங்கள் செய்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்தோம். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. என்னுடைய தயாரிப்புகள் பிடித்துப்போனதால் பலர் அதைக் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். அதுதான் என் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றியது. பொம்மைகள் செய்வது, ஓவியம், தையல் கலை என அனைத்தையும் கற்றுக்கொடுத்தேன்.

என் வாழ்க்கையின் மிகப்பெரிய இன்னலாக நான் நினைப்பது, புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டதுதான். அதில் இருந்து மீண்டு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்த எனக்கு, அடுத்த இரண்டு வருடங்களில் காலில் அடிபட்டு நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தாலும் குணப்படுத்த முடியாது என்ற நிலையில், அனைவருக்கும் பாரமாகி விடுவோமோ? என்ற பயம் உண்டானது.



அந்த சவாலான சமயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தது என் குடும்பமும், கணவர் கொடுத்த நம்பிக்கையும்தான். வீட்டில் இருந்தே பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்கு கணவர் ஊக்கப்படுத்தினார். என்னிடம் மாணவர்கள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் ஆகியோர் ஆர்வமுடன் வந்து கைவினை கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு கற்றுக்கொண்டவர்கள், அதன் மூலம் சுயமாக தொழில் செய்து லாபம் ஈட்டுவதாகக் கூறும்போது, என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த நிலையில்தான் 2015-ம் ஆண்டு புதுவை கவிதை வானில் கவி மன்றம் சார்பில் ‘கைவினைத் திலகம்’ என்ற விருது கிடைத்தது. முதன் முதலாக  விருது ெபற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தை மறக்கவே முடியாது. அடுத்து 2017-ம் ஆண்டு பாரதியார் இல்லத்தில், சிறந்த கைவினைக் கலைஞருக்கான ‘செல்லம்மாள் விருதை' புதுவை முதல்வர் வழங்கினார்.

உலக சாதனை படைக்க வேண்டும் என்பது எனது கனவு. அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் தானியங்களான கம்பு, கேழ்வரகு, அரிசி, துவரம் பருப்பு, கொள்ளு, கொண்டைக்கடலை, மிளகு போன்றவற்றையும், காகிதம், பனைமட்டை ஓலை, துணி, சீயக்காய், வேப்பங்கொட்டை, பூந்திக்கொட்டை போன்றவைகளைக் கொண்டும் 108 விநாயகர் சிலைகளை, 23 மணி நேரம் 55 நிமிடங்களில் தயார் செய்தேன். அசிஸ்ட் உலக சாதனை அமைப்பின் சார்பாக 2020 ஆகஸ்டு மாதம் ‘தனிமனித (பெண்) உலக சாதனையாளர் விருது’ கிடைத்தது. அதற்காக என்னைப் பாராட்டி அப்போதைய தமிழக முதல்வர் பாராட்டுக் கடிதம் எழுதி இருந்தார். எனக்கான அங்கீகாரம் கிடைத்ததாக மகிழ்ந்தேன். இதைத் தவிர மூன்று முறை, குழு உலக சாதனையிலும் பங்களித்துள்ளேன். என்னிடம் பயின்ற மாணவர்களும் பல உலக சாதனைகளைப் படைத்துள்ளார்கள். அவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தவை’’ என்கிறார்.

இவருடைய வழிகாட்டுதலில், ஒரே நாளில் இரண்டு உலக சாதனைகள் படைத்து, ‘விர்ச்சியூ புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில்’ இடம் பிடித்துள்ளார் ஒரு மாணவர். அதே போல் இவரிடம் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் இணைந்து, பாரா ஒலிம்பிக்கின் இறுதி நாளன்று, 200 சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய பாரா ஒலிம்பிக் சின்னம் வரைந்தனர். அதை பாரா ஒலிம்பிக் வீரர்களுக்குச் சமர்ப்பித்தார்கள்.

‘‘பெண்கள் வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்து சம்பாதிக்கலாம். அதன் மூலம் குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியில் நமது பங்களிப்பைத் தரலாம். அது நமக்கு மன நிறைவைத் தரும். சிறு தொழிலில், கைவினைப் பொருள்களுக்கு மதிப்பு அதிகம். ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டால் கூட, உங்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிடும். இதற்கு நான்தான் எடுத்துக்காட்டு.

ஓவியம், மெஹந்தி, சாப்ட் டாய்ஸ், பிஸ்கட், சாக்லேட், அப்பளம், வற்றல், சிறுதானிய உணவு வகைகள், ஊறுகாய், சணல் பை தயாரிப்பு, ஆரி ஒர்க், பேஷன் டிசைனிங், அழகுக் கலை, கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, டூடுல் ஆர்ட் என பலவகைப் பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு சுயமாக முன்னேறலாம்” என்றார் சுகந்தினி பாலாஜி. 

Next Story