கைவினை கலை

பிளாஸ்டிக் இல்லாத உலகம் படைப்போம் - ஸ்ரீமதி + "||" + we need plastic free world- srimathi

பிளாஸ்டிக் இல்லாத உலகம் படைப்போம் - ஸ்ரீமதி

பிளாஸ்டிக் இல்லாத உலகம் படைப்போம் - ஸ்ரீமதி
பிளாஸ்டிக் இல்லாத கைவினைப் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். கைவினைப் பொருட்களையே நம்பி தொழில் செய்யும் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும் என்பதே என் கனவு.
பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் மாற்றத்தை தன்னிடம் இருந்து தொடங்கி இருக்கிறார், சென்னையைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஸ்ரீமதி குமாரசாமி. எந்தவித பிளாஸ்டிக்கும் பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் கைவினைப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார். இது குறித்து ஸ்ரீமதி கூறியது...

எனது சொந்த ஊர் ஈரோடு. விவசாயப் பின்னணியைக் கொண்டது எனது குடும்பம். அதன் காரணமாக சிறுவயதிலேயே விவசாயத்தின் மீதும், களிமண் பொருட்கள் மீதும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனது குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. பல சிரமங்களுக்கு இடையில் பெற்றோர் என்னை படிக்க வைத்தார்கள். நான் பொறியியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். முதுகலை படிக்கும்போதே திருமணம் நடந்தது.

பொறியாளரான உங்களுக்கு கைவினைப் பொருட்களின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
களிமண் பொருட்கள் மீது ஆர்வம் இருந்தாலும், அதைக் கொண்டு கலைப் பொருட்கள் உருவாக்கவோ அல்லது அந்தக் கலையை முறையாகப் பயிலவோ வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் யூடியூப்பில் டெரகோட்டா பொருட்களைத் தயாரிக்கும் பதிவுகளைப் பார்த்து கற்கத் தொடங்கினேன்.  நாளடைவில் அதையே தொழிலாகவும் மாற்றிக் கொண்டேன்.

பிளாஸ்டிக் கலக்காமல் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் யோசனை எப்போது உருவானது?
திருமணத்துக்குப் பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்த நான், சில சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தத் தொடங்கினேன். நான் வசிக்கும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழுவாகவும், தனியாகவும் நேரில் சென்று குப்பைகளை, மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தினேன். அதன் விளைவாக அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கத் தொடங்கினர். 

வாரத்தில் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றி கொண்டிருந்தவர்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்ததன் பலனாக இப்பொழுது சிறிய டிராக்டரில் மட்டுமே குப்பைகள் தரம் பிரித்து வெளியேற்றப்படுகின்றன. மேலும், எனது வீட்டிலும் என்னால் முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மரச்சாமான்களையும், வெண்கல பாத்திரங்களையும் பயன்படுத்தத் தொடங்கினேன். இதன் மூலம் என் வீட்டில் 80 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை இப்பொழுது காண முடியும்.

வீட்டை அலங்கரிக்கும் கைவினைப் பொருட்களைக் கடைகளில் பார்த்தபொழுது, அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் இழைகளால் செய்யப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. ஏற்கனவே எனக்குள் கைவினைப் பொருட்களின் மீது இருந்த ஆர்வத்தினாலும், சமூக செயல்களில் ஈடுபட்டதன் மூலம் கிடைத்த அனுபவத்தாலும், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்ததாலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வண்ணம் பிளாஸ்டிக் சேர்க்காத கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் எண்ணம் உருவானது.உங்களுடைய பொருட்கள் மற்ற கைவினைப் பொருட்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?
வீட்டை அலங்கரிக்கும் கைவினைப் பொருட்களில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருக்கும். பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் தயாரிக்கும் கைவினைப் பொருட்களில் அதிக அளவிலான டிசைன்கள் கிடைக்காது. ஆனால் நான் தயாரிக்கும் பொருட்களில் அதிக அளவிலான, புதுமையான டிசைன்களை காலத்திற்கு ஏற்ப நவீனமயமாக வடிவமைத்துள்ளேன். 

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் களிமண், மரத்துண்டு, கண்ணாடி மற்றும் துணி வகைகளை மூலப் பொருட்களாகப் பயன்படுத்துகிறேன்.

இத்தகைய பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறதா?
வாடிக்கையாளர்கள் இதனை அதிகமாக வரவேற்கின்றனர். ஆரம்பத்தில் நான் தயாரித்த டெரகோட்டா பொருட்களை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக விற்பனை செய்யத் தொடங்கினேன். 

தொடக்கத்திலேயே இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் பிளாஸ்டிக் கலக்காத   கைவினைப் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டிருப்பதால், அதிக அளவிலான வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இதை விரும்பி வாங்குகின்றனர்.

பொது முடக்க நேரத்தில் எப்படி சமாளித்தீர்கள்?
ஆரம்பத்தில் மிகவும் துவண்டுவிட்டேன். ஒரு கட்டத்தில் தொழிலை நிறுத்தி விடலாம் என்று எண்ணி, சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் எனது கடைசி விற்பனையை அறிவித்தேன். அதற்கு பிறகு நடந்தவை தான் என்னை இந்தத் தொழிலில் ஈடுபட இன்னும் உத்வேகப்படுத்தியது. நான் கடைசி விற்பனையை அறிவித்த சில நாட்களிலேயே எனது வாடிக்கையாளர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, விற்பனையைத் தொடரும்படி அறிவுறுத்தினர். 

தொடர்ந்து தங்களது ஆதரவை தருவதாகவும் உறுதியளித்தனர். அதன் பலனாக எனது அனைத்து கைவினைப் பொருட்களுமே அடுத்த 2 மாதங்களில் விற்றுத் தீர்ந்தது. இது எனக்கு ஆச்சரியத்தையும், அதே சமயம் தொடர்ந்து இந்தத் தொழிலை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தையும் அளித்தது. எனவே மீண்டும் எனது தொழிலை புதிய நம்பிக்கையுடன் நடத்தத் தொடங்கினேன்.

குடும்பத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது?
திருமணத்திற்குப் பிறகுதான் எனக்கு தொழில் செய்வதற்கு ஆர்வம் வந்தது. குடும்பத்தினர் இதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். லாக்டவுனில் துவண்டிருந்த சமயத்தில் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

உங்கள் எதிர்கால கனவு?
இந்தியா முழுவதும் எனது கிளைகளை உருவாக்க விரும்புகிறேன். பிளாஸ்டிக் இல்லாத கைவினைப் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். கைவினைப் பொருட்களையே நம்பி தொழில் செய்யும் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்கு முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத உலகம் படைக்க வேண்டும். இதுவே எனது கனவு.

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...
வாழ்வில் துவண்டு இருக்கும்போது நம்பிக்கை இழக்காமல், உத்வேகத்துடன் உங்கள் கனவுகளை நோக்கிய பயணங்களைத் தொடருங்கள். எதற்காகவும் உங்கள் கனவுகளை விட்டுக்கொடுக்காதீர்கள். திருமணத்திற்கு பிறகும் உங்களுக்கென லட்சியம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொந்தக் காலில் நிற்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். 

சமூக ஊடகங்களில் கொட்டிக்கிடக்கும் பயனுள்ள தகவல்களை அறிந்து, தொழில் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த மாற்றத்தை இந்த உலகத்திற்கு கொண்டு வாருங்கள். அதை உங்கள் வீட்டிலிருந்தே தொடங்குங்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. ஏட்டுக் கல்வியோடு, வாழ்க்கை கல்வியும் அவசியம்
எந்த விஷயத்தைக் கற்றாலும், அதை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி கற்க வேண்டும்.
2. அடங்காத காளைகளை அன்பால் அடக்கிய கவுசல்யா
உணவு கொடுப்பது, பராமரிப்பது, அவற்றை அன்பாக பார்த்துக்கொள்வது என பெண்களே காளைகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதன் காரணமாகவே காளைகள் பெண்களின் அன்புக்கு அடி பணிகின்றன.
3. பனிக்கால உதடுகள் பராமரிப்பு
குளிர் காலம் ஆரம்பித்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அடிக்கடி உதடுகளை நாவினால் எச்சில்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.
4. புதியவற்றை கற்கும் ஆர்வமே வெற்றியாளராக மாற்றும் - ஜெயஸ்ரீ சுரேஷ்
இதுவரை நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும், எனக்கு பிடித்தமானதையும், என்னால் முடிந்ததையுமே செய்து வருகிறேன். அந்த வகையில், அடுத்த கட்டமாக தொடங்கியதுதான் தினை வகை உணவு விநியோகம்.
5. குழந்தைகள் வாழ்வில் பண்டிகைகளின் முக்கியத்துவம்
தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன. இது குழந்தைகளை ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க உதவுகிறது.