உருவப்படங்கள் வரைவதில் தேர்ந்த நிவிதா


உருவப்படங்கள் வரைவதில் தேர்ந்த நிவிதா
x
தினத்தந்தி 17 Jan 2022 11:00 AM IST (Updated: 15 Jan 2022 4:21 PM IST)
t-max-icont-min-icon

ஓவியங்கள் மற்றவர்களைக் கவரும் பட்சத்தில் பாராட்டுவார்கள். அவர்களையே ஓவியமாக வரைந்து கொடுத்தால், அவர்கள் அடைகிற மகிழ்ச்சி பல மடங்காக இருக்கும். ஓவியம் வரைகிற நமக்கும் மனநிறைவு கிடைக்கும்.

பிரபலங்களை ஓவியமாக வரைவது, அவற்றை சம்பந்தப்பட்ட பிரபலங்களிடம் கொடுத்து அவர்களை மகிழ்விப்பது, தான் கற்ற கலையை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக் கொடுப்பது என பரபரப்பாக இயங்கி வருகிறார் நிவிதா பிரசன்னகுமார். அவரது பேட்டி…

ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
சென்னையில் வசிக்கும் நான் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன், எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் முடித்திருக்கிறேன். எனது அம்மா நன்றாக ஓவியம் வரைவார். அவரைப் பார்த்து எனக்கும் ஓவியம் வரைவதில் ஈடுபாடு உண்டானது.

உருவப்படங்கள் (Portrait) வரைவதில் மட்டுமே அதிக ஈடுபாடு செலுத்துவதன் காரணம்?
ஆரம்பகாலத்தில் எல்லா விதமான ஓவியங்களும் வரைந்து கொண்டிருந்தேன். அந்த ஓவியங்கள் மற்றவர்களைக் கவரும் பட்சத்தில் பாராட்டுவார்கள். அவர்களையே ஓவியமாக வரைந்து கொடுத்தால், அவர்கள் அடைகிற மகிழ்ச்சி பல மடங்காக இருக்கும். ஓவியம் வரைகிற நமக்கும் மனநிறைவு கிடைக்கும். அத்தகைய மனநிறைவை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

குடும்பத்தினர், உறவினர்கள், நட்பு வட்டத்தினரின் பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது, பரிசாக சம்பந்தப்பட்டவர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பது வழக்கம். அதைப் பார்த்து அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள். அந்த ஓவியத்தைப் பொக்கிஷமாக வைத்துக் கொள்வார்கள்.

என் குடும்பத்தினரை, குழந்தைகளை ஓவியமாக வரைந்து அவர்களிடம் கொடுக்கும்போது, அவர்களின் முகத்தில் தெரிகிற சந்தோஷம் இருக்கிறதே... அதை உணரும்போது மனதுக்குள் உருவாகிற உற்சாகத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த சந்தோஷத்தை பலரது முகத்திலும் பார்க்க வேண்டும் என்பதாலேயே உருவப்படங்கள் வரைவதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.



விஸ்காம் படிக்கும்போது, ‘பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பிடிக்க வேண்டும்’ என்று அப்பா கூறினார். அதன்படி இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். அப்போதே எனக்குள் இருக்கும் ஓவியத் திறமையாலும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. கல்லூரிப் படிப்பை முடித்தபின்பு கணவர், குழந்தைகள், குடும்பத்தை கவனிப்பது என 10 வருடங்கள் ஓடிவிட்டது. ஆனாலும், ஓவியத்தின் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்ற எனது எண்ணம் அப்படியே இருந்தது. அதன் விளைவாக மீண்டும் வரையத் தொடங்கினேன். கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாக வரைந்து கொண்டிருக்கிறேன்.

வரைந்த ஓவியங்கள் பற்றி?
எங்களுடைய திருமண அழைப்பிதழை நானே வடிவமைத்தேன். அதில் எனது பெயரும், கணவரின் பெயரும் இணைந்தவாறு பிள்ளையாரின் உருவத்தை ஓவியமாக்கினேன். அது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில், ஓராண்டுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயனை வரையச் சொல்லி ஒரு போட்டி நடத்தினார்கள். அதில் கலந்துகொண்டு பரிசு வென்றேன். அந்த ஓவியம் சிவகார்த்திகேயனின் பார்வைக்குப் போனபோது, அவர் குரல் பதிவின் மூலம் என்னைப் பாராட்டினார்.

இவ்வாறே அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், சாதனைப் பெண்கள் என இதுவரை 70-க்கும் மேற்பட்ட பிரபலங்களை வரைந்திருக்கிறேன். நடிகர் கமலஹாசனை விதவிதமாக வரைய வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

நீங்கள் வரைந்ததில் மிகுந்த மனநிறைவு தந்த ஓவியம்?
குடும்ப உறுப்பினர்களை மொத்தமாக, குரூப் போட்டோ மாதிரி வரைய வேண்டும் என்பது எனது அம்மாவின் நீண்ட நாள் ஆசை, கனவு. அதை நிறைவேற்றும் விதத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஓவியம் வரைந்தேன். அம்மாவுக்கு ரொம்பவே சந்தோஷம். குடும்பத்திலுள்ள எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். இது எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது.

ஓவிய ஆசிரியராக இயங்குவது பற்றி?
யாருக்கெல்லாம் உருவப்படங்களை வரைந்து கொடுக்கிறேனோ அவர்களில் சிலர், ‘எனக்கும் கத்துக் கொடுங்க' என்று ஆர்வமாக கேட்டார்கள். சிலர், ‘உனக்குள் இருக்கிற கலைத் திறமை மத்தவங்களுக்கும் பயன்படுற மாதிரி முறையான பயிற்சி வகுப்பு நடத்தலாமே' என்று சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்கள். அதன் விளைவாக கடந்த ஒரு வருடமாக இணைய வழியில் சிறுவர்-சிறுமிகளுக்கும், வயது வித்தியாசமின்றி ஆர்வமுள்ளவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகிறேன். 

இலக்கு?
குடும்பப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றிக் கொண்டே, எனக்குள் இருக்கும் திறமைக்கான உயரத்தை எட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். இன்னும் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. ‘டிஜிட்டல் ஆர்ட்', ‘சார்க்கோல் ஆர்ட்' என்று சொல்லக்கூடிய கரியால் ஓவியங்கள் வரைவது, ‘மினியேச்சர் கிளே ஆர்ட்' என்று சொல்லக்கூடிய களிமண்ணில் மீச்சிறு கலை வடிவங்கள் உருவாக்குதல் உள்ளிட்டவற்றை கற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த கலைகளிலும் என்னை உலகம் திரும்பிப் பார்க்கும்படி சாதிக்க வேண்டும். ‘ஆர்ட் கேலரி' உருவாக்கி என் ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டும். 

Next Story