ஆடைகளை அலங்கரிக்கும் ‘கலம்காரி’


ஆடைகளை அலங்கரிக்கும் ‘கலம்காரி’
x
தினத்தந்தி 21 March 2022 11:00 AM IST (Updated: 19 March 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

காளஹஸ்தி கோவிலில் உள்ள தேர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தும் திரைச்சீலைகளை அழகுபடுத்துவதற்காகத்தான் முதலில் ‘கலம்காரி கலை’ பயன்படுத்தப்பட்டது.

டைகளில் இடம்பெறும் அழகிய வேலைப்பாடுகளை உருவாக்கும் பல கலைகள் இந்திய கலாசாரத்தில் உள்ளன. அதில் ஒன்று ‘கலம்காரி’. சமீப காலமாக கலம்காரி ஓவியங்கள் தாங்கிய ஆடைகளுக்கு, அனைத்து தரப்பு மக்களிடமும் தனி வரவேற்பு கிடைத்துள்ளது. கலம்காரி கலை 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

ஆந்திர மாநிலம்தான், கலம்காரி கலைக்கான பூர்வீகம். ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில், மசூலிப்பட்டினத்தில் உள்ள ‘பெத்தனா’ கிராமம்தான் இதற்கான தாய்வீடு.

‘கலம்’ என்றால் ‘பேனா’ என்றும், ‘காரி’ என்றால் ‘கலை வடிவம்’ என்றும் பொருள். காளஹஸ்தி கோவிலில் உள்ள தேர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தும் திரைச்சீலைகளை அழகுபடுத்துவதற்காகத்தான் முதலில் ‘கலம்காரி கலை’ பயன்படுத்தப்பட்டது. இதனாலே, இந்தக் கலையில் ஒரு பாணியாக ‘திருகாளத்தி பாணி’ இன்றும் பின்பற்றப்படுகிறது. இது கோவில்களில் அதிகளவில் அலங்கரிக்கப் படுகிறது.

இவ்வாறான கலம்காரி கலை, மெல்ல நகர்ந்து ஐதராபாத் நிஜாமுதீன்களின் உடைகளையும் அலங்கரிக்கத் தொடங்கியது. ‘பேனா’ கொண்டு இந்தக் கலை துணிகளில் மிளிர்ந்தாலும், இயற்கை வண்ணங்கள்தான் அதிக அளவில் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. தற்போது, இந்தியா முழுவதும் கலம்காரி ஓவியங்கள் கொண்டு ஆடைகள் வடிவமைக்கப்பட்டாலும், தென் மாநிலங்களில்தான் இந்த ஓவியங்கள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகின்றன.

காலங்கள் பல கடந்தாலும், இன்றும் கூட ஆந்திர கிராமங்களில் கலம்காரி ஓவியங்களைத் தொழிலாகச் செய்கின்றனர். இதில், வரையப்படும் அனைத்து ஓவியங்கள், கோலங்கள், பல நுணுக்கங்கள் அனைத்துக்கும் ஆந்திராதான் இன்றும் வித்திட்டு வருகிறது.

18-ம் நூற்றாண்டில் இந்தியாவில், இந்தக் கலை சற்று நலிவுற்ற போதிலும், வெளிநாடுகளில் இதற்கு ஆதரவு கிடைத்து அங்கு தன் கொடியை நாட்டியுள்ளது.

சாதாரண வெள்ளைப் பருத்தி காடாத் துணியில், கடுக்காயைப் பயன்படுத்தி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊற வைப்பார்கள். இதன் மூலம் சொரசொரப்பாக இருக்கும் துணி, வழுவழுப்பாக மாறும். இதில், நன்றாகக் கொதிக்க வைக்கப்பட்ட வெல்லம், நீர் கலந்த கலவையில் கூரான மூங்கில் குச்சியை நனைத்து, துணியின் விளிம்பு வரை கோடுகளாக ஓவியம் வரையப்படுகிறது.

அந்தக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு, விரும்பிய ஓவியங்கள், விரும்பிய வண்ணங்களில் பூர்த்தி செய்யப்படுகின்றன. எந்த நிறம் தேவையோ, அந்த நிறம் தனித்தனியாக வரையப்படும். முழுவதும் பூர்த்தி செய்த வண்ணங்கள் அடங்கிய துணியை, நீரில் அலசி முழுமையாக்கப்படும். இதுபோல் 20 முறை ஒரு துணியில் கலம்காரி ஓவியத்தை உருவாக்குகின்றனர்.

இந்த ஓவியத்தை ஒரு ஆடையில் புகுத்த குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகும்.

இன்றும் ஆந்திராவில் உள்ள கிராமங்களில், மலர்கள், அவுரி, மஞ்சள் கிழங்கு, மாதுளம் பழம் என இயற்கை வண்ணங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

இதில், வரையப்படும் ஓவிய கதாபாத்திரங்கள் நமக்கு பல கதைகள் சொல்லும். தற்போது, கலம்காரி ஓவியங்கள் பெண்களின் சேலை, சுடிதார் என அனைத்து விதமான ஆடைகள், திரைச்சீலைகள், கைப்பைகள், ஆண்களின் சட்டைகள், லுங்கிகள் என அனைத்திலும் பிரதிபலிக்கின்றன. 
1 More update

Next Story