ரசாயனம் கலந்த நீரில் இருந்து வீட்டுத்தோட்டத்தை பாதுகாப்பது எப்படி?


ரசாயனம் கலந்த நீரில் இருந்து வீட்டுத்தோட்டத்தை பாதுகாப்பது எப்படி?
x
தினத்தந்தி 1 Nov 2021 11:00 AM IST (Updated: 30 Oct 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

சமையல் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சரியான முறையில் சுத்திகரிப்பதன் மூலம், அதில் இருக்கும் வேதிப்பொருட்களை நீக்க முடியும். இவ்வாறு சுத்திகரித்த நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

காற்று மாசுபாடு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். அதுபோல மக்கள் தொகையின் பெருக்கத்துக்கு ஏற்ப செயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர்களின் உற்பத்தியை பெருக்கியதன் காரணமாக விளை பொருட்களில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது. 

வீடுகளில் பயன்படுத்தும் நீரில் கூட பெருமளவு வேதிப் பொருட்கள் கலந்து உள்ளது. புகை மற்றும் தீங்கு செய்யும் ரசாயனப் பொருட்கள் காற்றையும், நீரையும் மாசுபடுத்துகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் நஞ்சில்லா காய்களைப் பெறுவதற்கு வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளை காற்று மாசுபடுதல் மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்த நீரில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

வீட்டுத் தோட்டத்தில் துளசி, தூதுவளை, நிலவேம்பு, ஆடாதொடா, புதினா, நொச்சி, வெந்தயம், வல்லாரைக்கீரை, வேம்பு, ஓமவள்ளி போன்ற தாவரங்களை வளர்க்கலாம். இவற்றுக்கு காற்றில் உள்ள நச்சுக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இருந்தால் நிலத்தடி நீர் மாசுபடாமல் தடுக்கலாம். மேலும் சமையல் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சரியான முறையில் சுத்திகரிப்பதன் மூலம், அதில் இருக்கும் வேதிப்பொருட்களை நீக்க முடியும். இவ்வாறு சுத்திகரித்த நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் துணி துவைக்கும் பவுடர், குளியல் சோப்புகள் மற்றும் ஷாம்பு போன்றவற்றுக்குப் பதிலாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நன்மை தரும். 

உதாரணமாக கிருமி நாசினியாக கடுக்காய் ஊறவைத்த தண்ணீர், ஷாம்புக்கு பதிலாக செம்பருத்தி இலை, வெந்தயம், அரப்பு, கற்றாழை போன்றவற்றை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும், நமது உடல் நலனுக்கும் நல்லது.

இயற்கை உரங்களான பசுவின் சாணம், ஆட்டுப் புழுக்கை, பசுந்தாள் உரம், சமையலறையில் பயன்படுத்தும் காய்கறி கழிவுகள் போன்றவற்றை உரமாக போடுவதன் மூலம் இயற்கை முறையில் செடிகள் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும். 

Next Story