பணியிடத்தில் நேர மேலாண்மை
தினமும் காலையில் அன்றைய தினத்தில் முடிக்க வேண்டிய பணிகளை முதலில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். நேரம் இருந்தால் மட்டுமே அடுத்த நாள் செய்ய வேண்டிய பணிகளுக்கான முன்னேற்பாடுகளை கவனிக்கலாம்
‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்தது. அதன் உள்ளர்த்தம் உணர்ந்து செயல்படுபவர்கள்தான் தங்கள் துறைகளில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறார்கள். மேற்கொண்ட காரியத்தில் ஒருவர் வெற்றி பெறுவதும், மற்றவர் தோல்வி அடைவதும் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட விளைவே ஆகும்.
ஒவ்வொரு மணித்துளியையும் கவனத்தில் கொண்டு திட்டமிடுபவர்கள் வெற்றி அடைகிறார்கள். இத்தகைய நேர மேலாண்மை அலுவலகப் பணிகளில் முக்கியமானது. அதை சிறப்பாக கடைப்பிடிப்பதற்கு ஏற்ற குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
அலுவலக நேர மேலாண்மை என்பதை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என வெற்றி பெற்ற தொழில் முனைவோர்கள், சாதனையாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதிகாலையில் கண் விழித்து, அன்றைய நாளை உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளுடன் தொடங்க வேண்டும். அதன் மூலம் அன்று முழுவதும் புத்துணர்ச்சியுடன், மன அழுத்தம் இல்லாமல் செயல்பட முடியும்.
அலுவலகத்தில் தங்களுக்கான இடத்தில் உள்ள பொருட்கள் நேர்த்தியாகவும், இடம் சுத்தமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் உருவாகும் தெளிவான மனநிலை, பணிகளைச் சரியாக மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
சிறிய வேலை முதல் பெரிய வேலை வரை அனைத்தையும் சரியாக திட்டமிட வேண்டும். நீங்கள் தொழில் முனைவோராக இருந்தாலும், அலுவலக அதிகாரியாக இருந்தாலும், சாதாரண ஊழியராக இருந்தாலும் அவரவர் பொறுப்புக்கேற்ற அன்றாட திட்டமிடல் அவசியம். அதன் மூலம் காரியங்களை வரிசையாக, குழப்பமில்லாமல் செய்து முடிக்கலாம்.
செல்போன் அல்லது லேப்டாப்பில் அன்றாட பணிகளுக்கான குறிப்புகள், வாராந்திர விடுப்பு, மாதாந்திர கணக்கு-வழக்குகள் ஆகியவற்றை தெளிவாக, எளிமையாக பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். அவற்றை அன்றைய தினப்படி ‘ரிமைண்டர்’ அளிக்கும்படியான ‘செட்டிங்’ செய்துகொண்டால் எளிதாக செயல்படலாம்.
தினமும் காலையில் அன்றைய தினத்தில் முடிக்க வேண்டிய பணிகளை முதலில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். நேரம் இருந்தால் மட்டுமே அடுத்த நாள் செய்ய வேண்டிய பணிகளுக்கான முன்னேற்பாடுகளை கவனிக்கலாம். அதன் மூலம் சரியான கால அவகாசத்தில் பணியை முடிக்க இயலும்.
பணியில் ஈடுபட்டிருக்கும்போது செல்போனில் பேசுவது, சமூக வலைத்தளங்களில் சாட்டிங் செய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காலம் அறியாமல் அரட்டை அடிக்கும் நண்பர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருக்க முயலுங்கள்.
அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங்குகளில் என்ன பேசுவது என்பது பற்றி முன்னதாகவே தீர்மானம் செய்து அதை குறிப்பாக எடுத்துச் செல்லுங்கள். அதிகாரிகளிடம் அல்லது மீட்டிங்கில் பேசும்போது அதை சுருக்கமான முறையில் பேசுவதே நல்லது.
ஒருவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், எல்லா வேலைகளையும் அவராகவே செய்ய முடியாது. எனவே சரியான நபர்களிடம் வேலையை பகிர்ந்து அளிக்கும் கலையை அறிந்திருக்க வேண்டும்.
Related Tags :
Next Story