இப்படிக்கு தேவதை
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்ததால், அவர் உங்களைப் பற்றி சொல்லும் வார்த்தைகளை எண்ணி கவலை அடைய வேண்டியது இல்லை. உங்களை சக்தி வாய்ந்தவராக உணருங்கள்; அது உங்கள் நடத்தையில் பிரதிபலிக்கும்.
1.எனது 5½ வயது ஆண் குழந்தையின் சேட்டை அதிகமாக இருக்கிறது. வீட்டிற்கு வரும் உறவினர்களை தொந்தரவு செய்கிறான். உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும் பயமாக இருக்கிறது. ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளி செல்லவில்லை. இந்த வருடம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். என் ஒரே மகனின் இந்த சேட்டை இயல்பானது தானா? இல்லை இயல்புக்கு மீறியதா?
5½ வயதில் குழந்தைகள் அதிகப்படியான ஆற்றலோடு இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களின் செயல்களின் வேகம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் உங்களால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தவறு உங்கள் பக்கமும் இருக்கலாம். அதிகப்படியான செல்லம் கொடுத்து, அவனது எந்த செயலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்காமல் இருப்பதன் காரணமாகக்கூட, அவனது சுட்டித்தனங்கள் அதிகமாகி இருக்கலாம். அவன் கேட்டதை எல்லாம் ‘இல்லை’ என்று சொல்லாமல் வாங்கிக் கொடுப்பது, விரும்பிய செயல்களை தாமதிக்காமல் நிறைவேற்றுவது போன்றவற்றை செய்தீர்களென்றால், இனி அவ்வாறு நடப்பதை தவிர்க்கவும்.
அவனது செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவும். இவை அனைத்தும் சரி செய்யப்பட்டாலும் பிரச்சினை தொடர்ந்தால், குழந்தையை உளவியல் நிபுணரிடம் மதிப்பீட்டுக்கு அழைத்துச் செல்வது சிறந்தது. ஒரு வேளை உங்கள் குழந்தை ஹைப்பர் ஆக்டிவாக இருந்தால், அதற்குரிய பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் அவனது செயல்களை நெறிப்படுத்த முடியும்.
2. நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். எனது மாமியார் எங்களுடன் வசிக்கிறார். திருமணம் நடந்தது முதல் இப்போது வரை, என்னை வார்த்தைகளாலும், செய்கைகளாலும் துன்புறுத்தி வருகிறார்.
எனது கணவர் அவரை எதிர்த்து ஏதாவது பேசினாலும், எனது மாமியார் தன்னைத் தானே ஏதாவது செய்து கொள்வேன் என்று பயமுறுத்தி, என் கணவரின் வாயை அடைத்து விடுகிறார். ஒவ்வொரு நாளும் எனது கணவர் மற்றும் குழந்தைகளின் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தும்போது, நான் மிகவும் தாழ்ந்து போவதாக உணர்கிறேன். இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
நீங்கள் சொல்வதில் இருந்து, உங்கள் மாமியார் வேண்டுமென்றே உங்களிடம் மோசமான நடத்தையில் ஈடுபடுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவரது வார்த்தைகளால் நீங்கள் காயப்பட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அவரது வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சுய பச்சாதாபத்தை பின்பற்றாமல், உங்களுக்குள் இருக்கும் வலிமையை உணருங்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்ததால், அவர் உங்களைப் பற்றி சொல்லும் வார்த்தைகளை எண்ணி கவலை அடைய வேண்டியது இல்லை. உங்களை சக்தி வாய்ந்தவராக உணருங்கள்; அது உங்கள் நடத்தையில் பிரதிபலிக்கும்.
வாழ்க்கை அழகானது, அதை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். நீங்கள் அவ்வாறு வாழ முடிவு செய்தால், யாருடைய செய்கையும் உங்களை பாதிக்க முடியாது. மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
Related Tags :
Next Story