எக் டெவில்


எக் டெவில்
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 10:46 AM GMT)

இந்திய சுவையில் தயாரிக்கப்படும் ‘எக் டெவில்’ ரெசிபியின் செய்முறையை இங்கு காணலாம்.

காரசாரமாக சமைக்கப்படும் உணவுப் பொருளை ஆங்கிலத்தில் ‘டெவில் ரெசிபி’ என்று அழைப்பார்கள். 1700-களின் ஆரம்பத்திலேயே இந்த வகை உணவுகள் மக்களால் அதிகமாக விரும்பப்படும் பட்டியலில் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்திய சுவையில் தயாரிக்கப்படும் ‘எக் டெவில்’ ரெசிபியின் செய்முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
முட்டை - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கறி மசாலா தூள்  1½ தேக்கரண்டி
மிளகுத்தூள் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சோளமாவு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
ரொட்டித் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். 3 முட்டையை தனியாக வேகவைத்துக் கொள்ளவும். தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் மிதமான தீயில் வறுத்து தூளாக்கிக்கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் மஞ்சள் தூள், தனியா கலவை, கறி மசாலா தூள், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழை, உப்புச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி,  மிதமான தீயில் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வேறொரு சிறிய பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் சோளமாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

வேகவைத்த முட்டையை இரண்டு பாகமாக வெட்டி, அதன் மேல் மிளகுத்தூளை தடவவும். மிளகுத்தூள் தடவிய முட்டையைச் சுற்றிலும் உருளைக்கிழங்கு கலவையைக் கொண்டு முட்டை வடிவத்தில் மூடவும்.
பின்பு அதனை முட்டைக் கலவையில் நனைத்து, ரொட்டித் தூளில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 

Next Story