திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனத்திற்கு...
திருமணத்தின் மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் எதிர்கொண்டு அரவணைத்து செல்ல வேண்டும்.
பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
1. சரும பராமரிப்பு:
திருமணத்தன்று ஒப்பனை செய்துகொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இது திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
2. உணவில் கவனம் தேவை:
விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு சிறந்தது.
3. உறக்கம் முக்கியம்:
உணவு, சரும பராமரிப்பு போலவே, போதுமான உறக்கம் அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த அமைதியான இரவு உறக்கம் மன மகிழ்ச்சியை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். இது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்குவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
4. உடற்பயிற்சி அவசியம்:
தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலையும், மனதையும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடலின் ஆற்றல் அதிகரிக்கும். முகத்தின் பொலிவு கூடும். திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.
5. மனநலன் பேணுதல்:
உடல் நலன் போலவே, மன நலன் பேணுதலும் முக்கியமானது. திருமணத்தின் மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் எதிர்கொண்டு அரவணைத்து செல்ல வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் தயார் நிலையில் மனதை பக்குவப்படுத்தி வைப்பதும் முக்கியமானது.
Related Tags :
Next Story