முக அமைப்புக்கேற்ற கண்ணாடியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மூக்குக் கண்ணாடி தேர்ந்தெடுப்பின்போது அணிந்து பார்த்து, நீண்ட நேர முயற்சிக்குப் பின் நமக்குப் பிடித்ததை எடுப்போம். எனினும், அந்த கண்ணாடி நம் முகத்துக்கு ஒத்துப்போகாமல் காட்சியளிக்கும்போது நேரம் மற்றும் முயற்சி வீணாகும். முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கண்ணாடியின் அளவைக் கண்டறிதல்:
தலையை நேராக உயர்த்தி, ஒரு ஏ.டி.எம். கார்டின் பக்கவாட்டுப் பகுதியை கண்களுக்குக் கீழ், மூக்கின் நடுப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும். ஏ.டி.எம். கார்டு முழுவதுமாக உங்கள் கண்களுக்குள் மறைந்தால் உங்கள் கண்ணாடியின் அளவு ‘எல்’, கார்டும் கண் அளவும் சரிசமமாக இருந்தால் கண்ணாடி அளவு ‘எம்’, கார்டை விட கண் அளவு சிறிதாக இருந்தால் கண்ணாடி அளவு ‘எஸ்’ ஆகும்.
சதுர வடிவ முக அமைப்புக்கு..
பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம். இவ்வித அமைப்பு உள்ளவர்கள் வட்ட வடிவம் அல்லது ‘D’ வடிவ கண்ணாடி பயன்படுத்தினால், முக அமைப்பு மென்மையாக காட்சியளிக்கும். மேலும், ஏவியேட்டர் வகை கண்ணாடிகள் கன்னத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகளை சமப்படுத்த உதவும். முக அமைப்பை சிறிதாகக் காட்ட ‘ஓவல்’ வடிவ கண்ணாடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் கூர்மையான மூலைகளைக் கொண்ட சதுர கண்ணாடிகளைத் தவிர்ப்பது நல்லது.
வட்ட வடிவ முக அமைப்புக்கு..
பரந்த கன்ன எலும்புகள், சதைப்பிடிப்பான கன்னம் மற்றும் சற்று குறுகிய நெற்றி வட்ட முக அமைப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இவர்கள், வட்ட வடிவக் கண்ணாடிகளைத் தவிர்ப்பது சிறந்தது. மாறாக, ‘கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் வைபெரர்கள்’ அல்லது நீள் செவ்வக வடிவ கண்ணாடிகளை முயற்சிக்கலாம். இவை வட்ட முக வடிவத்திற்கு அற்புதமாகப் பொருந்தும்.
நீள்வட்ட வடிவ முக அமைப்புக்கு...
நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்குப் பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது. எனவே கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். சதுரம் மற்றும் செவ்வக பிரேம்கள் நீள்வட்ட வடிவ முக அம்சங்களை மெருகூட்டி காட்டும். ஆகையால், பெரிய சதுர கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இதய வடிவ முக அமைப்பினருக்கு..
கிளாசிக் ‘ஏவியேட்டர்’ கண்ணாடிகள் இதய வடிவ முக அமைப்பினருக்கு கச்சிதமாக பொருந்தும். உங்கள் முக வடிவத்தை இன்னும் மெருகேற்ற ‘ரிம்லெஸ்’ கண்ணாடிகளையும் அணியலாம். இந்த வகை கண்ணாடிகள் அணிய எளிதாக இருக்கும். அதேசமயம் அழகாகவும் இருக்கும். மூக்குப் பட்டைகள் கொண்ட உலோக பிரேம்கள் மற்றும் மெல்லிய பிரேம் கண்ணாடிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பிரேம்கள் உங்கள் முகத்தின் வசீகரத்தை அதிகரிக்கும். எந்த வகை பிரேமாக இருந்தாலும், லென்ஸின் அடிப்பகுதி அகலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Related Tags :
Next Story