வீடியோ கேம்களும்… உடல் பருமனும்…!


வீடியோ கேம்களும்… உடல் பருமனும்…!
x
தினத்தந்தி 4 April 2022 11:00 AM IST (Updated: 2 April 2022 6:24 PM IST)
t-max-icont-min-icon

வீடியோ கேம் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க நினைப்பவர்கள் படிப்படியாக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். புத்தகம் வாசிக்கக் கொடுப்பது, தோட்ட வேலை, வீட்டு அலங்காரம் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.

டந்த சில வருடங்களில் சிறுவர்-சிறுமிகள் வீட்டுக்கு வெளியே வந்து விளையாடுவது பெருமளவில் குறைந்திருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு, பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு பயப்பட ஆரம்பித்தனர். காலச்சூழல் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வீடியோ கேம்சுக்கு அடிமையாகி விட்டனர்.நேரத்தை போக்குவதற்கும், மனசை ரிலாக்ஸ் செய்வதற்குமான பொழுதுபோக்குதான் இது. ஆனாலும் இதன் மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் அச்சப்பட வைக்கின்றன.

வீடியோ கேம் விளையாடும்போது பெரும்பாலும் அதிக அசைவுகள் இன்றித்தான் உட்கார்ந்திருப்போம். கூடவே, நொறுக்குத் தீனிகள், துரித உணவு, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் என தவறான உணவுப் பழக்கமும் ஒட்டிக்கொள்கிறது. பெரும்பாலான குழந்தைகள் வீடியோ கேம்ஸ், கணினி, செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களில் ஏதாவது ஒன்றைத் தினமும் சராசரியாக நான்கு மணி நேரத்துக்கும் மேலாக உபயோகப்படுத்துகிறார்கள்.

இதன் காரணமாக உடல் எடை அதிகமாக இருப்பது, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், மூட்டு வலி, கருப்பை பாதிப்பு, புற்றுநோய், தூக்கமின்மை போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன. அடித்தல், குத்துதல், துப்பாக்கியால் சுடுதல், வெடிகுண்டு வீசுதல் போன்ற விளையாட்டுகளை நண்பர்களுடன் இணைந்து விளையாடுகின்றனர். இதன் தாக்கத்தால் சிலர் சரியாகத் தூங்குவதில்ைல. அப்படியே தாமதமாக இரவில் தூங்கினாலும் வீடியோ கேம் விளையாடுவது போன்ற கனவு வருவதாக கூறுகின்றனர். இத்தகைய உளவியல் ரீதியான சிக்கல்கள் பின்னாளில் பல பாதிப்புகளை உருவாக்கும்.

வீடியோ கேம் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க நினைப்பவர்கள் படிப்படியாக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். புத்தகம் வாசிக்கக் கொடுப்பது, தோட்ட வேலை, வீட்டு அலங்காரம் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். அவர்கள் வீடியோ கேம் விளையாடுவதை திடீரெனமொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள்தான் உங்கள் குழந்தையின் ரோல்மாடல். ஆகவே, நீங்கள் முதலில் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்.

உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளைக் கூடுமானவரை வீட்டிலேயே தயார்செய்து கொடுக்க வேண்டும்.

சாப்பிடும்போது டி.வி., வீடியோ கேம், செல்போன் பார்க்க அனுமதிக்கக்கூடாது.

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

வெளியே சென்று விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

குழந்தைகளின் அதிகப்படியான உடல் எடை குறைவதற்கு மருத்துவரின் ஆலோசனையோடு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 
1 More update

Next Story