பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி


பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 11:07 AM GMT)

குதிகாலில் இரண்டு கைகளாலும் கட்டைவிரலில் மசாஜ் செய்யுங்கள். குதிகாலில் உள்ள ரிப்ளெக்ஸ் புள்ளிகள் முதுகுத்தண்டு பதற்றத்தை நீக்கி, முதுகுவலியைக் குறைக்க உதவும்.

ரிப்ளெக்சாலஜி என்பது மாற்று சிகிச்சையாகும். கால் பாதங்கள் முழுவதையும் படிப்படியாக, மென்மையாக அழுத்தி மசாஜ் செய்து உடலை புத்துணர்ச்சியாக்கும் சிகிச்சை முறையே ‘ரிப்ளெக்சாலஜி’. உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகள் பாதத்தின் வழியாகவே செல்கின்றன. எனவே பாதத்தில் மசாஜ் செய்வதன் மூலம், உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை நீக்க முடியும்.

‘ரிப்ளெக்சாலஜி’ சிகிச்சை முறையில் அழுத்த புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்களின் ஆரோக்கியமும், பார்வைத்திறனும் மேம்படும். பாதத்தில் உள்ள மென்மையான திசுக்கள் வலுப்பெறும். முதுகுவலி, கழுத்துவலி, கழுத்து விறைப்பு, தோள்பட்டை வலி, பதற்றம், தலைவலி, பல்வலி போன்ற பிரச்சினைகள் குறையும். செரிமானம் சீராகும். அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல், வாயு தொடர்பான பிரச்சினைகள் குறையும். மனச்சோர்வு, குமட்டல் மற்றும் பிற மனநலக் கோளாறுகள் நீங்கும்.

ரிப்ளெக்சாலஜி செய்முறை
முதலில் பாதங்களை கழுவுங்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில் 10 முதல் 20 நிமிடங்கள் பாதங்களை வையுங்கள். தண்ணீரில் கால்களைக் கழுவுவது பாதங்களைத் தளர்த்த உதவும்.
அடுத்து உங்களுக்கு பிடித்த லோஷன் அல்லது மசாஜ் எண்ணெய்யை சிறிதளவு பயன்படுத்தி, கால்களின் மேல் பகுதி மற்றும் உள்ளங்கால் முழுவதும் தேய்க்கவும்.

பாதத்தின் மேற்புறத்தை உங்கள் கை விரல்களால், கால் விரல்களுக்கு இடையில் பிடித்து, கால்களை மெதுவாக ஒரு வட்டத்தில் நகர்த்தவும். கடிகார திசையில் 3 முறை மற்றும் எதிர் கடிகார திசையில் 3 முறை, கணுக்காலைத் தளர்த்துங்கள்.

மூன்றாவதாக பாதத்தின் மேற்பகுதியைச் சுற்றி கட்டை விரலால் மெதுவாகவும், உறுதியாகவும் பாதத்தின் மேல் மையத்தில் அழுத்தவும். அதே இடத்தில் 2 முதல் 3 முறை அழுத்தவும். பின்னர் அந்த இடத்திற்கு கீழே நகர்த்தி செயல்முறையை மீண்டும் செய்யவும்.

பின்னர் தலை மற்றும் மூளையின் ரிப்ளெக்ஸ் புள்ளிகளை செயல்படுத்த காலின் பெருவிரலை மசாஜ் செய்யவும். பிட்யூட்டரி சுரப்பிக்கான ரிப்ளெக்ஸ் புள்ளியை செயல்படுத்த உங்கள் கட்டை விரலால், கால்களில் பெருவிரலின் நடுவில் அழுத்தவும். பின்னர், கழுத்து, தொண்டை மற்றும் தைராய்டு சுரப்பிக்கான ரிப்ளெக்ஸ் புள்ளிகளை செயல்படுத்த பெருவிரலின் அடிப்பகுதிக்கு கீழே செல்லவும். 

மற்ற 4 கால் விரல்களின் கீழ் உள்ள பகுதி நுரையீரலுக்கானது. இந்தப் பகுதிகளையும், காலின் நடு பகுதியையும் மசாஜ் செய்ய அதே கட்டைவிரல் அழுத்த நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.

குதிகாலில் இரண்டு கைகளாலும் கட்டைவிரலில் மசாஜ் செய்யுங்கள். குதிகாலில் உள்ள ரிப்ளெக்ஸ் புள்ளிகள் முதுகுத்தண்டு பதற்றத்தை நீக்கி, முதுகுவலியைக் குறைக்க உதவும். கடைசியாக லோஷன் அல்லது எண்ணெய் கொண்டு லேசான மசாஜ் செய்யுங்கள். இதனால் பாதங்கள் ரிலாக்ஸ் ஆகும்.

இந்த பாத மசாைஜ எப்பொழுது வேண்டு மானாலும் செய்யலாம். மாலை மற்றும் இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு செய்வது நல்லது. 

Next Story