வளைகாப்பு விழா நடத்துவது ஏன்?


வளைகாப்பு விழா நடத்துவது ஏன்?
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 11:22 AM GMT)

உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து ‘உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.

முதல் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் பெண்களுக்கு, பிரசவத்திற்கு முன்பாக வளைகாப்பு எனும் சடங்கைப் பாரம்பரியமாகச் செய்து வருகிறோம். இதன் பின்னணியில் பல நன்மைகள் இருக்கின்றன. அவை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்…

* கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழும். வாந்தி, மயக்கம், ஒவ்வாமை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளும், இத்தகைய உடல் மாற்றங்களைக் கண்டு குழப்பம், பிரசவம் பற்றிய அச்சம் போன்ற மனநலப் பிரச்சினைகளும் ஏற்படும். 

இந்த நேரத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகள் வாய்க்கு ருசியாகச் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் குமட்டல் உணர்வு காரணமாக சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட்டு அவர்களை சிரமப்படுத்தும்.

* வளைகாப்பு வைபவம்
கருவுற்ற ஏழாவது மாதத்தில் உறவினர்களும், நண்பர்களும் பெண்ணின் புகுந்த வீட்டுக்கு வந்து வளைகாப்பு செய்வார்கள். கருவுற்ற பெண்ணுக்கு தாய்மார்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து, கண்ணாடி வளையல்களை அணிவித்து, ஆரத்தி எடுத்து அட்சதை தூவுவார்கள்.

கர்ப்பிணியின் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வண்ணமயமான வளையல்கள் நிறைந்திருக்கும். சுற்றமும்-நட்பும் சூழ அந்தப் பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும். 

பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற கவலையும், பயமும் இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து ‘உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.

* பல்வகைச் சோறும், பலகாரமும்…

கருவுற்றப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி பிரச்சினை, ஏழாவது மாதத்திற்குள்  பெரும்பாலும் நின்றுவிடும். வளைகாப்பு சமயத்தில் அவர்களுக்கு வாய்க்கு ருசியான புளி, எலுமிச்சை போன்ற சோறு வகைகளையும், இனிப்பு, காரம் போன்ற தின்பண்டங்களையும் தாய் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்து கொடுப்பார்கள். கர்ப்பிணிபெண்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை ஆசை தீர  சாப்பிடுவார்கள்.

* வளையல்களே காப்பு
கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையால் நன்றாகக் கேட்க முடியும். அந்தச் சத்தம் தாயையும், சேயையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் ஏழாம் மாதத்துக்கு மேல் தம்பதிகளுக்கிடையே தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும். 

அதற்காகவே எளிதில் உடையக்கூடிய கண்ணாடி வளையல்களை அணிவிப்பார்கள். இதன் மூலம், கணவன் தன்னைப் பார்க்க வரும் நாளில்கூட அப்பெண் பாதுகாப்பாக நடந்துகொள்வதற்கு அந்த வளையல்களே காப்பாக அமையும். 

* தலைப்பிரசவத்தைத் தாய் வீட்டில் வைப்பது ஏன்?
ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற காலத்தில் ‘நம்மையும் நம் தாய் இப்படித்தானே தாங்கியிருப்பாள்?’ என்று நினைத்து தாயின் மீது அதிக பாசம் கொள்வார்கள். தாயின் அருகில் இருப்பதை பாதுகாப்பாக உணர்வார்கள். எனவேதான் தலைப்பிரசவத்தை தாய் வீட்டில் வைப்பது வழக்கமாக உள்ளது. 

Next Story