பண்டிகைக் கால செலவுகளில் சிக்கனம் அவசியம்
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கிடைக்கும் போனஸ் உள்ளிட்ட ஊக்கத்தொகை முழுவதுமே செலவு செய்வதற்கே என்று நினைப்பது தவறு. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் போனஸ் தொகையில் ஒரு பகுதியை சேமிப்பது நல்ல பழக்கமாகும்
பொருளாதார ரீதியாக பொதுமுடக்கம் ஏற்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் பண்டிகைக் காலங்களில் சற்று கவனமாக திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்வதே அனைவருக்கும் நன்மை அளிக்கும். அதற்கான சில பொதுவான டிப்ஸ்களை இங்கே காணலாம்.
பண்டிகைக் காலங்களில் அனைவருக்குமான ஆடைகள் மற்றும் சோபா, டைனிங் டேபிள், டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடிவு எடுக்கும்போது கச்சிதமான திட்டமிடல் அவசியம்.
குடும்ப நபர்களில் யாருக்கு எவ்விதமான ஆடைகள் தேர்வு செய்கிறோம் என்பதில் பட்ஜெட்டுக்கேற்ற முன்திட்டம் தேவை. மேலும், தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை அறிந்த பின்னர் வாங்குவதும் நல்லது.
வாகனம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பண்டிகை காலங்களில் தள்ளுபடி விலையில் வாங்கலாம். அவற்றைப் பற்றி முன்கூட்டியே விசாரித்து முடிவெடுத்து அதன்படி சிக்கனமாக வாங்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
வாங்குவதாக முடிவெடுத்துள்ள பொருட்களின் விலை, தரம் பற்றி ஒன்றுக்கு இரண்டு கடைகளில் விசாரித்து அறிந்து கொள்வதும் முக்கியம்.
பண்டிகை காலங்களில் பலகாரம் உள்ளிட்ட இனிப்பு வகைகளை, வீடுகளில் தயார் செய்து கொள்வதும் ஒருவித சிக்கன நடவடிக்கையே. வீட்டில் இனிப்பு வகைகளை தயாரித்து உண்பதே பலவிதங்களில் பாதுகாப்பானது.
எந்த ஒரு பொருளையும் தேவைக்கேற்பவே வாங்க வேண்டும். விருப்பப்படி பொருட்களை வாங்கி குவிப்பது என்பது செலவுகளை எகிற வைக்கும் பழக்கமாகும். அது பொருளாதார ரீதியாக பாதிப்பையே உண்டாக்கும்.
பொருட்களை கிரெடிட் கார்டை பயன்படுத்தியோ அல்லது ஆன்லைன் மூலம் தவணை முறைகளிலோ வாங்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால், அதற்கான மாதாந்திர தவணைகளை திருப்பி செலுத்துவது, கடன் தொகைக்கான மாத வட்டி ஆகியவை குறித்து பலமுறை ஆலோசனை செய்த பின்னர் பொருளை வாங்கலாம்.
கேஷ்-பேக் சலுகை, முதல் மாத தவணை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் உள்ளதா என்று விசாரிக்க வேண்டும். மேலும்,
எளிதாக கிடைக்கும் கடன் திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றால் கவரப்பட்டு அவசர முடிவுகளை எடுப்பதுதான் பலரை நீண்ட நாளுக்கு கடனாளியாக ஆக்கிவிடுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கிடைக்கும் போனஸ் உள்ளிட்ட ஊக்கத்தொகை முழுவதுமே செலவு செய்வதற்கே என்று நினைப்பது தவறு. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் போனஸ் தொகையில் ஒரு பகுதியை சேமிப்பது நல்ல பழக்கமாகும்.
Related Tags :
Next Story