பாரம்பரிய எண்ணெய்க் குளியலின் பயன்கள்


பாரம்பரிய எண்ணெய்க் குளியலின் பயன்கள்
x
தினத்தந்தி 1 Nov 2021 5:30 AM GMT (Updated: 30 Oct 2021 11:26 AM GMT)

தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மூளைப்பகுதியில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, உடல் முழுவதும் வெப்பத்தையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மன அழுத்தத்தைக் குறைத்து உடல் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்பட உதவும்.

மது கலாசாரத்தில் சத்தான உணவு முறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இதைத் தொடர்ந்து எண்ணெய்க் குளியலும் அடக்கம்.
ஆரோக்கியப் பிரச்சினையிலிருந்து உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் சிறந்த முறையாகும்.

 எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் வாத, பித்த, கப தோஷங்கள் சீராகும். உடல் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தவும் முடியும்.

லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டம் அளிக்கும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சருமத்தின் வழியாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு, இந்த நிணநீர்க் கோளத்தை அடைந்து உடலுக்கு நன்மை அளிக்கிறது.


நன்மைகள்:
தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மூளைப்பகுதியில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, உடல் முழுவதும் வெப்பத்தையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

மன அழுத்தத்தைக் குறைத்து உடல் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்பட உதவும். முடி உதிர்வைக் குறைக்கும். பார்வைத் திறனை மேம்படுத்தும். சருமத்தை பொலிவாக்கும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். மூட்டுக்களின் இணைப்பில் உள்ள தேய்மானத்தை குறைக்கும்.

குளிக்கும் முறை:
பண்டிகை நாட்கள், முக்கிய நிகழ்வுகள் தவிர வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் வரை காலை நேர இளம் வெயிலில் நின்று, பின் மிதமான சுடு தண்ணீரில் குளிக்கலாம். 

உடலில் தேய்க்கும்போது மூட்டுக்களில் வட்டவடிவிலும், உடல் உறுப்புகளில் மென்மையாகவும் தேய்க்க வேண்டும். எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்தலாம். 

எண்ணெய்யுடன் இரண்டு பூண்டு, ஐந்து மிளகைச் சேர்த்து முப்பது வினாடிகள் வரை அடுப்பில் சூடுபடுத்தி தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சியால் ஏற்படும் உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம்.

செய்யக் கூடாதவை..
எண்ணெய் தேய்த்துக் குளித்த தினம் அன்று பகல் வேளையில் தூங்கக் கூடாது. குளிர்ந்த உணவு, குளிர்பானம், குளிர்ந்த நீர், குளிர்ச்சியை ஏற்படுத்தும் வாழ்வியல் முறை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

Next Story