பிரசவத்துக்கு பின்னர் மன அழுத்தம்... தீர்வு காண்பது அவசியம்..
இன்றைய தனிக்குடித்தன வாழ்வில் உறவுகளின் உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை. பிரசவித்த தாயே தனக்கான வேலைகளை கவனித்துக்கொள்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், பிரசவத்துக்கு பின்னர் ஏற்படும் மன அழுத்தம் முக்கியமானது. இது காலம்காலமாக பிரசவித்த பெண்கள் சந்திப்பதுதான் என்றாலும், தற்போதைய நகர நாகரிகத்தில் அதன் பாதிப்பும், எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதற்கான தீர்வு பற்றி பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் அளித்த ஆலோசனைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
காரணங்கள்
முந்தைய தலைமுறையில் பிரசவித்த பெண்ணை பாட்டி, பெரியம்மா, சித்தி, அத்தை போன்றவர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதன் காரணமாக குழந்தைக்கு பாலூட்டி விட்டு, குழந்தை உறங்கும்போது தாயும் உறங்கி ஓய்வெடுத்துக்கொள்வார்.
மேலும் தாய்க்கு அவசியமான பத்திய சாப்பாடு, துணிகளை துவைப்பது உள்ளிட்ட பல உதவிகளை வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் செய்தார்கள். அதன் மூலம் பிரசவித்த பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அமைதியான சூழலைப் பெற்றிருந்தார்கள்.
இன்றைய தனிக்குடித்தன வாழ்வில் உறவுகளின் உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை. பிரசவித்த தாயே தனக்கான வேலைகளை கவனித்துக்கொள்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
மேலும், பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், கர்ப்ப காலத்தில் சந்தித்த அதிர்ச்சிகள், பிரசவம் குறித்த மன தெளிவின்மை, உடல் ரீதியான காரணங்கள், பொருளாதார மற்றும் சமூக ரீதியான காரணங்களால் பிரசவத்துக்கு பின்னர் மன அழுத்தம் உருவாகிறது. பிரசவித்த பெண்களில் சுமார் 7 பேரில் ஒருவருக்கு இது ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்
பிரசவித்த பெண்கள் மன அழுத்தம் காரணமாக யாரிடமும் பேசாமல் இருப்பது, தனிமையை விரும்புவது, குழந்தையை கவனிப்பதில் அக்கறையின்மை, குழந்தை மற்றும் தனக்கான பராமரிப்புகளை சரியாக செய்யாதது, தானாக அழுவது, கோபமடைவது, சரியாக உணவு உண்ணாதது உள்ளிட்ட வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளில் தங்களை அறியாமல் ஈடுபடுவார்கள்.
தீர்வுகள்
இந்தப் பிரச்சினை தானாகவே 3 மாதத்துக்குள் குணமாகி விடும். இல்லாவிட்டால் தக்க மருத்துவரிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்.
நெருங்கிய உறவினர்களிடம் அல்லது தோழிகளிடம் மனம் விட்டு பேசும் சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிரசவித்த பெண்ணின் கணவர் ஆதரவுடன் நடந்து கொள்வது அவசியம். தாய்க்கு சத்தான உணவு வகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
நகர்ப்புற குடியிருப்புகளில், பக்கத்தில் வசிக்கும் மனிதாபிமானம் கொண்ட பாட்டிகளிடம் ஆலோசனை பெறலாம்.
எளிய உடற்பயிற்சிகள் செய்வது, மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை கேட்பது, தகுந்த நபர்களிடம் ஆலோசனை பெற்று யோகா, மூச்சுப்
பயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
பாலூட்டும் தாயின் மன அழுத்தம் காரணமாக, பிஞ்சு குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை பிரசவித்த பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
Related Tags :
Next Story