மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 7 ரகசியங்கள்


மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 7 ரகசியங்கள்
x
தினத்தந்தி 6 Dec 2021 11:00 AM IST (Updated: 4 Dec 2021 5:02 PM IST)
t-max-icont-min-icon

விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் கடந்து செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாகத் தெரிந்தாலும், தொடர்ந்து செய்யும்போது எளிதாகிவிடும்.

ணம், பொருள், விரும்பியதை அடையும் திறன் போன்றவை இருந்தும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் திணறுபவர்கள் பலர் உள்ளனர். ஒரு சில விஷயங்களைக் கடைப்பிடித்தால், எந்த சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியாக வாழ முடியும். அவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவைப்படும் 7 ரகசியங்கள் இதோ...

1. வெற்றிக்கான வரையறை:
வெற்றியின் எல்லை, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மற்றவர்களின் வெற்றியைக் கொண்டு, நம் வெற்றியின் எல்லையை வரையறுக்கக்கூடாது. நமக்கான சரியான தேவையைத் தெரிந்து கொண்டு, அதைப் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். இதில் நாம் அடையும் உயர்நிலையைத்தான், நமது வெற்றியாக நிர்ணயிக்க வேண்டும். இந்த வரையறையை சரியாக நிர்ணயித்தால், வெற்றியுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

2. ஒப்பிடாதீர்கள்:
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் செல்லும் பாதையில் செல்லக்கூடாது. இதன் மூலம் மகிழ்ச்சியை இழக்க நேரிடுவதுடன், இலக்கையும் எட்டிப்பிடிக்க முடியாது.

3. கிசுகிசுக்காதீர்கள்:
பிறரைப் பற்றி கிசுகிசு பேசுவதாலும், அவதூறு சொல்வதாலும் நமக்கு எந்தப் பயனும் இல்லை, நேரம் தான் விரயமாகும். இதே நிலை தொடரும்போது, பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்படும். இந்தப் பழக்கத்தை விட்டு, நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியானதாகும்.

4. நேர்மறையானவர்களுடன் பழகுங்கள்:
எதையும் நேர்மறையாக எண்ணி செயல்படுபவர்கள், தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அதை பரப்புவார்கள். அத்தகைய நபர்களுடன் பழகும்போது, நம்மை அறியாமலேயே நேர்மறையாக யோசிப்பதற்கு ஆரம்பிப்போம். இதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நமது இலக்கை அடையும் வழியும் எளிதாகும்.

5. பிறரின் கருத்துக்கு இடம் வேண்டாம்:
நாம் செய்யும் செயல்களுக்கு பிறரிடம் இருந்து விமர்சனங்கள் எழுவது இயல்பானதே. இந்த விமர்சனம் எதிர்மறையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதையே நினைத்துக் கொண்டிருக்கும்போது, மனம் மகிழ்ச்சியாக இருக்காது. விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் கடந்து செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாகத் தெரிந்தாலும், தொடர்ந்து செய்யும்போது எளிதாகிவிடும்.

6. அழகிய தருணத்தைக் கொண்டாடுங்கள்:
நாம் நிர்ணயித்த இலக்கை எட்டுவதை மட்டுமே கருத்தில் கொண்டு, வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மகிழ்ச்சியான தருணங்களை தவறவிடுவோம். நமக்கான மகிழ்ச்சி இந்த தருணங்களில் கூட அடங்கி இருக்கலாம். எனவே, அன்றாட வாழ்வில் கிடைக்கும் அழகிய தருணங்களை ரசித்துக் கொண்டாடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

7. கடந்து செல்லுங்கள்:
வெற்றி அடைய வேண்டும் என்பது முக்கியமாக இருந்தாலும், அதில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள், தடங்கல்களைக் கண்டு துவண்டு விடக்கூடாது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது, நமக்கு ஏற்படும் எந்த விதமான பிரச்சினையையும் கடந்து செல்வதுதான். பிரச்சினை ஏற்படும் போது, அதைப் பிறரின் கண்ணோட்டத்தில் இருந்து அணுகுவதன் மூலம், சரியான தீர்வு காண முடியும். 


Next Story