வாழ்க்கை முறை

வாழ்வை வளப்படுத்தும் வண்ணக் கோலங்கள் + "||" + life changing colour rangoli's

வாழ்வை வளப்படுத்தும் வண்ணக் கோலங்கள்

வாழ்வை வளப்படுத்தும் வண்ணக் கோலங்கள்
‘சைமேடிக்ஸ்' என்ற சிறப்பு அறிவியல் கூற்றின்படி, ஒரு வடிவத்தை வண்ணங்கள் மூலமாக அலங்கரிக்கும்பொழுது, அதில் இருந்து நேர்மறை சக்தி மற்றும் அமைதி கிடைக்கும். இந்தக் கூற்றை உறுதி செய்வது நமது பாரம்பரிய கோலங்கள்.
மார்கழி மாதத்தில், சில்லென்ற பனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் அதிகாலை நேரத்தில், பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் இடுவார்கள். கிராமங்களில் வசிக்கும் பெண்கள் இன்றும் இதை பின்பற்றி வருகிறார்கள். வாழ்க்கை முறை மாற்றத்தால், நகர்ப்புறங்களில் குறைந்துவிட்ட கோலமிடும் வழக்கம், மார்கழி மாதத்தில் மட்டும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும்.

இவ்வாறு கோலம் இடும் நமது பாரம்பரிய பழக்கத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறி, வளரும் இளைய தலைமுறைக்கு அதைக் கொண்டு சேர்க்கும் செயலை செய்து வருகிறார் ஸ்ருதி கிருஷ்ணமூர்த்தி. சென்னையைச் சேர்ந்த இவர் மழலையர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். 

தற்போது இணைய வழியாக குழந்தைகளுக்கு பாரம்பரியம் மற்றும் கலாசாரம் சார்ந்த தகவல்கள், கோலம் இடுதல் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்து வருகிறார். அவருடன் நடந்த உரையாடல்.

கோலங்களில் ஆர்வம் வந்தது எப்படி?
என்னுடைய சிறுவயதில், எனது அம்மா விஜயலட்சுமி, வீட்டில் கோலம் போடுவதை பார்த்து வியந்திருக்கிறேன். கோலத்தை எப்படி வரைகிறார்கள்? அவர்களுடைய கையில் இருந்து எப்படி அந்தக் கோலம் உருவாகிறது? என்பதைக் கவனிப்பேன். 

நாங்கள் வசிக்கும் பகுதியில் மார்கழி மாதத்தில் அனைத்து வீடுகளிலும் பெரிய பெரிய கோலங்கள் வரைந்திருப்பார்கள். அவற்றைப் பார்த்து எனக்கும் அத்தகைய கோலங்களை வரைய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் அம்மா கோலம் இடும்போது அவருக்கு உதவி செய்து, நானும் கோலம் இடுவதற்குக் கற்றுக்கொண்டேன்.

கோலங்களில் எத்தனை விதங்கள் உள்ளன?
கோலங்களில் நிறைய விதங்கள் உள்ளன. முடிச்சுகள் போடுவதைப் போல வளைத்து வளைத்துப் போடுவதை ‘சிக்கு கோலம்’ என்று சொல்வார்கள். இதில் புள்ளிகள் நேர்க்கோட்டில் இருக்காது. ஆங்காங்கே சில புள்ளிகள் இருக்கும். இவ்வகையான கோலங்களை அனைத்து வீடுகளின் வாசல்களிலும் பார்க்கலாம்.

வீட்டில் ஏதாவது விசேஷம் மற்றும் சுபகாரியங்கள் நடந்தால் ‘படிக்கோலம்’ இடுவார்கள். இந்தக் கோலத்தில் கோடுகள் மற்றும் வளைவுகள் இருக்கும். இதனை சுற்றி நாம் ரங்கோலி போன்று வடிவமைப்பை தந்து அழகுபடுத்தலாம்.

குறிப்பிட்ட புள்ளிகள் மட்டுமே வைத்து, அவற்றின் இடுக்குகள் வழியே வடிவமைப்பு கொடுத்துப் போடுவதை ‘இடுக்குப் புள்ளி கோலம்’ என்று கூறுவார்கள்.

பச்சரிசி மாவை தண்ணீர் கலந்து அரைத்து, அதை துணியில் கட்டி பூஜை அறைக்கு முன்பாக கோலம் இடுவார்கள். இது பிரகாசமாக, வெண்மையாக இருக்கும். இதனை ‘இழைக்கோலம்’ என்பார்கள்.

இவற்றைத் தவிர ஓணம் மற்றும் இதர பண்டிகைகளுக்கு  வீட்டில் ‘பூக்கோலம்’ இடுவார்கள். அதற்கு ரங்கோலி வண்ணங்களைத் தீட்டி அழகுபடுத்தலாம்.கோலம் போடுவதால் பெண்களுக்கு என்ன பயன்?
‘சைமேடிக்ஸ்' என்ற சிறப்பு அறிவியல் கூற்றின்படி, ஒரு வடிவத்தை வண்ணங்கள் மூலமாக அலங்கரிக்கும்பொழுது, அதில் இருந்து நேர்மறை சக்தி மற்றும் அமைதி கிடைக்கும். இந்தக் கூற்றை உறுதி செய்வது நமது பாரம்பரிய கோலங்கள். 

கோலம் என்பது கலை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அதிர்வு முறையின் ஆன்மிக அழகியல் மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காக, இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

கோலம்  மங்களகரமான வடிவமாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் கோலம் இடும்போது, அதைப் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கோலங்களை எளிதாக வரைந்து  விட முடியாது. அந்தந்த வடிவங்களுக்கு ஏற்றவாறு, கைகளை வளைத்து போடும் போது மட்டுமே நமக்குத் தேவையான வடிவம் கிடைக்கும். 

அளவுகோல் இல்லாமலேயே எப்படி வளையம் போன்ற வடிவம் போடுவது, கணித கணிப்புகளை பயன்படுத்தி எப்படி ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்டு வருவது போன்ற முறைகளைப் பயன்படுத்தி கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்வதால் படைப்பாற்றல் அதிகரிக்கும்; மன அமைதி ஏற்படும்.

மார்கழி மாதத்தில் கோலம் இடுவதால் சிறப்பான பலன்கள் ஏதேனும் உண்டா?
‘மார்கழி’ ஆன்மிக ரீதியாக சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதன் மூலம், நேர்மறை அதிர்வுகள் மற்றும் மன நிம்மதி கிடைக்கும்.

இந்தக் கால பெண்களிடம் கோலங்களின் மீது ஈடுபாடு குறைந்தது ஏன்? அதனை எப்படி சரி செய்வது?
கோலம் இடுவதன் நன்மைகள் பற்றி தெரியாத காரணத்தாலும், நேரமின்மையாலும் பல பெண்கள் இதைச் செய்வது இல்லை. இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. 

தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது நேரம் விலகி, பத்து நிமிடம் ஒதுக்கி கோலம் வரைவதில் கவனம் செலுத்தினால் தானாகவே ஈடுபாடு அதிகரிக்கும். மன அமைதி உண்டாகும்.

ஸ்டிக்கர் கோலங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
கோலங்கள் வரைந்திருக்கும் ஸ்டிக்கர்களை வாசலில் ஒட்டுவதன் மூலம் எந்தப் பயனும் இல்லை. இதன் மூலம் எறும்பு போன்ற சிறு சிறு உயிரினங்களுக்கு உணவு கிடைக்காது. நமது படைப்பாற்றலும் அதிகரிக்காது.

கோலம் இடுவதற்கான இடவசதி இல்லாதவர்களுக்கு உங்கள் பரிந்துரை என்ன? 
சிறிய இடம் கிடைத்தாலும் அதில் கோலம் இடலாம். இடவசதி இல்லாதவர்கள் தன்னார்வலராக கோவில் வாசலில் கோலம் போடுவார்கள். வீட்டில் சிறிய மரப்பலகை வாங்கி வைத்து, அதன் மேல் கோலம் போடலாம்.

கோலம் குறித்து மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் வழிகள் என்ன?
வீட்டில் உள்ள குழந்தைகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்தினால், அவர்கள் மூலமாக பெரியவர்களும் அதில் ஈடுபடுவார்கள் என்பது எனது நம்பிக்கை. எனவே எனது தோழி கீதாவுடன் சேர்ந்து இணையம் வழியாக குழந்தைகளுக்கு கோலம் இடுவது பற்றியும், நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தில் பின்பற்றும் பழக்கங்களின் அர்த்தங்கள், நன்மைகள் பற்றியும் கற்றுக்கொடுத்து வருகிறேன். 

இந்தியாவில் வசிக்கும் குழந்தைகள் மட்டுமில்லாமல் பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.