ஆன்-லைன் மூலம் தரமான பொருட்களை வாங்குவது எப்படி?
சில ஆன்-லைன் தளங்களில் வாடிக்கையாளருக்குக் கியாரண்டி, வாரண்டி போன்றவை வழங்குவதில்லை. இதனால், வாங்கிய சில நாட்களில் பொருட்களில் பழுது ஏற்படும்போது, அதை நாமே செலவு செய்து சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்க வேண்டும்.
உட்கார்ந்த இடத்தில் இருந்தே, ஆன்-லைன் மூலம் விரும்பிய பொருட்களைத் தேர்வு செய்து வாங்குவோர் அதிகரித்து வருகின்றனர். நேரம் மிச்சமாவதோடு, வீண் அலைச்சல் தவிர்க்கப்படுவதால் இதை பலரும் விரும்புகின்றனர்.
ஆன்-லைன் மூலம் விரும்பிய பொருட்களை வாங்கலாம் என்றாலும், அவற்றின் தரத்தைச் சரியாக ஆராய முடியாமல் போவதுடன், எளிதில் ஏமாறுவதற்கும் வாய்ப்புள்ளது. இவற்றைத் தவிர்ப்பதற்கு சில வழிகளைப் பின்பற்றுவது அவசியம். அவை இங்கே:
நிறுவனத்தை ஆராயுங்கள்:
ஆன்-லைனில் பொருளை வாங்கும் முன்பு, அது எந்த நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். நிறுவனத்தின் பெயர், லோகோ போன்றவற்றையும் சரிபார்க்க வேண்டும். முன்னணி நிறுவனங்களின் பெயரில், போலிப் பொருட்கள் சந்தையில் அதிக அளவில் உலா வருகின்றன. எனவே, இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சிறப்பு அம்சங்களை கவனியுங்கள்:
ஆன்-லைன் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருளின் சிறப்பு அம்சங்களை சரியாக கவனியுங்கள். அதே அம்சங்கள், கடைகளில் கிடைக்கும் பொருட்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். இதில், மாற்றம் இருக்கும் போது, சிறிதும் தயங்காமல் அந்தப் பொருளைப் புறக்கணிப்பது ஏமாற்றத்தில் இருந்து காக்கும்.
விலை ஒப்பீடு:
ஆன்-லைன் தளங்களில், பண்டிகைக் காலங்களின்போது பொருட்களுக்கு சலுகைகள், தள்ளுபடிகள் அறிவிக்கப்படும். இதில், பெரிய மாற்றம் இருக்கும்போது, எதனால் இத்தனை சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை ஆராயுங்கள். சாதாரண நாட்களில் அந்தப் பொருட்களுக்கான தேவை எவ்வாறாக உள்ளது என்பதைக் கவனித்து, பின்பு அந்தப் பொருளைத் தேர்வு செய்யுங்கள்.
வாடிக்கையாளரின் கருத்துகள்:
ஆன்-லைன் தளத்தில் பொருட்கள் வாங்கும்போது, மறக்காமல் வாடிக்கையாளரின் கருத்துகளை படியுங்கள். இந்த வசதி, தற்போது அனைத்து தளங்களிலும் உள்ளது. இதில், 5 முதல் 10 வரையில் தரவரிசை அளிக்கப்பட்டிருக்கும். மேலும், அந்தப் பொருளின் பயன்பாடு, அது நீடித்து உழைக்கிறதா?, நமக்கு அந்த பொருள் வந்து சேரும்போது அதன் நிலை உள்பட பல்வேறு தகவல்களை வாடிக்கையாளர்கள் குறிப்பிடுவதுண்டு. இதைத் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்குவது நல்லது.
சரிபார்ப்பு:
ஆர்டர் செய்த பொருள் கைக்கு கிடைத்தவுடன், நாம் தேர்வு செய்த பொருள்தான் நமக்கு கிடைத்துள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். சில இடங்களில், நாம் தேர்வு செய்த பொருளுக்கு மாற்றாக சேதமான பொருட்களோ அல்லது வேறு நிறம், தரம் என அனைத்திலும் மாறுபட்டோ இருக்கலாம்.
கியாரண்டி, வாரண்டி:
சில ஆன்-லைன் தளங்களில் வாடிக்கையாளருக்குக் கியாரண்டி, வாரண்டி போன்றவை வழங்குவதில்லை. இதனால், வாங்கிய சில நாட்களில் பொருட்களில் பழுது ஏற்படும்போது, அதை நாமே செலவு செய்து சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்க வேண்டும்.
திருப்பி அனுப்புதல்:
ஆன்-லைனில் பொருட்கள் வாங்கும்போது, அது தரமில்லாதது போல் தோன்றினால், யாரிடம் வாங்கினோமோ, அந்த நிறுவனத்திடமே திருப்பி வழங்க வேண்டும். இதுபோன்று திருப்பி அனுப்பும் பொருட்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்களே, எவ்வித மறைமுக கட்டணமும் இன்றி பெற்றுகொள்ளும் வசதி உள்ளதா? என்பதைக் கவனியுங்கள்.
Related Tags :
Next Story