குழந்தைகளிடம் கட்டாயம் பேச வேண்டிய 5 விஷயங்கள்
தினமும் பார்க்கும், கேட்கும், படிக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே, பேசியும், மற்றவர்களிடம் பகிர்ந்தும் பழக வேண்டும். கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிப்பதிலோ, விவாதிப்பதிலோ நேரத்தையும் கவனத்தையும் செலவிடக்கூடாது.
குழந்தைகள், இரண்டு பரிமாணங்களின் வழியே வளர்கிறார்கள். அடிப்படையான பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, பெற்றோர்கள் வளர்ப்பது ஒரு பரிமாணம். சமூகத்தைப் பார்த்து, அதில் இருந்து அவர்கள் புரிந்துகொண்டதற்கு ஏற்ப வளர்வது அடுத்த பரிமாணம்.
இதில் பெற்றோர்களின் பங்கு முதன்மையானது. அடுத்து சமுதாயத்தின் பங்கு உள்ளது. இது பெற்றோருக்கு சற்றே சவாலான விஷயம். எனினும் எத்தகைய சமுதாயத்தை முன் உதாரணமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அதனை பின்பற்ற வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
இதற்கு சில முக்கியமான நன்னெறிகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். அவை:
1. மற்றவர்களை மரியாதையாக நடத்துவது என்பது அவர்களின் மதிப்பு சார்ந்தது அல்ல. அது உன்னுடைய மதிப்பு சார்ந்தது. அனைவரையும் மதிக்கும் பண்பு உன்னிடத்தில் இருந்தால், அந்த பண்பிற்காக நீ அனைவராலும் மதிக்கப்படுவாய். எனவே வயது, பாலினம், ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.
2. சில நேரங்களில், நெருங்கியவர்களே நம்மை தீய வழிக்கு இழுத்துச் செல்வார்கள். இது உலக இயல்பு. அத்தகைய நேரங்களில், அவர்கள் இழுத்த திசைக்குச் செல்லாமல், நீ அவர்களுடைய கையைப் பிடித்து நல்வழிக்கு, உன் திசையை நோக்கி, இழுத்து வர வேண்டும்.
3. உன்னுடைய தோழனை அல்லது தோழியை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு, உனக்கு தயக்கம் ஏற்படுகிறது என்றால், அவர்களுடனான உன் நட்பு, தவறானதாக இருக்கலாம். நண்பர்கள் என்பது இரண்டாவது குடும்பம். அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, அனைவரிடமும் பழகச் செய்தலே, ஆரோக்கியமான உறவு முறை.
4. பெற்றோரிடம் தினமும் பள்ளியிலும், வெளியிலும், உன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மறைக்காமல், மனம் விட்டு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
5. தினமும் பார்க்கும், கேட்கும், படிக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே, பேசியும், மற்றவர்களிடம் பகிர்ந்தும் பழக வேண்டும். கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிப்பதிலோ, விவாதிப்பதிலோ நேரத்தையும் கவனத்தையும் செலவிடக்கூடாது.
மேற்கண்ட 5 விதிகளையும், பெற்றோர் தினமும் தங்கள் குழந்தைகளுக்கு, திரும்பத் திரும்ப தெளிவாக சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவர்கள் இதை சலிப்பாக எண்ணினாலும், அவர்களையே அறியாமல் இது அவர்கள் ஆழ்மனதில் பதிந்துவிடும் என்பதே உளவியல் கூறும் உண்மை. நற்பண்புகளைக் கடைப்பிடித்தால், சமுதாயமும், அது சார்ந்த மனிதர்களும் அவர்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அவர்களது சுற்றமும் பெற்றோர் விருப்பப்படி நன்றாகவே அமையும்.
Related Tags :
Next Story