அடங்காத காளைகளை அன்பால் அடக்கிய கவுசல்யா


அடங்காத காளைகளை  அன்பால் அடக்கிய கவுசல்யா
x
தினத்தந்தி 10 Jan 2022 11:00 AM IST (Updated: 9 Jan 2022 11:19 AM IST)
t-max-icont-min-icon

உணவு கொடுப்பது, பராமரிப்பது, அவற்றை அன்பாக பார்த்துக்கொள்வது என பெண்களே காளைகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதன் காரணமாகவே காளைகள் பெண்களின் அன்புக்கு அடி பணிகின்றன.

ங்க காலம் முதல் இந்த காலம் வரை, பெண்களின் வாழ்க்கையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனி இடம் உண்டு. இன்றும் கிராமங்களில் பல பெண்கள் காளைகளை வளர்க்கிறார்கள். அந்த வரிசையில் 4 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் வசிக்கும் கவுசல்யா. 

சட்டம் படித்து வரும் இவர், குடும்பத்தினருடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். கபடி விளையாட்டில் ஈடுபட்டு பல பரிசுகளை வாங்கியிருக்கிறார். அவரது பேட்டி…

காளை வளர்க்கும் ஆர்வம் எப்படி வந்தது?
சிறு வயதில் இருந்து மாடு, ஆடு, கோழிகள் போன்றவற்றை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில், காளை மாடுகள் பூட்டி இருக்கும் வண்டிகளைப் பார்ப்பேன். சிறிது நேரம் நின்று அந்தக் காளைகளை ரசித்துவிட்டே வீட்டுக்குச் செல்வேன். காளைகள் மீது எனக்கு இருந்த ஈடுபாட்டைப் பார்த்த எனது தந்தை, நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நான்கு காளைகள் வாங்கிக் கொடுத்தார். 

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பது, சாணம் அள்ளுவது, சுத்தப்படுத்துவது என என் நேரத்தைச் செலவிட்டேன். இவ்வாறு காங்கேயம், மலை மாடு, காரி, செவலை போன்ற காளைகளை எட்டு வருடமாக பராமரித்து வருகிறோம்.

காளைகளைப் பராமரிப்பது பற்றி கூறுங்கள்?
நாம் கொடுக்கும் உணவைப் பொறுத்துதான் காளைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் இருக்கும். நாங்கள் வளர்க்கும் காளைகளுக்கு கடலை புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, தவிடு, புற்கள் போன்றவற்றை உணவாகக் கொடுக்கிறோம். பசுக்களை விட காளைகளை பராமரிப்பது சற்றே கடினமானது.

உங்கள் காளையின் சாதனை பற்றி?
2020-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த ஜல்லிக்கட்டில், என் காளை சீறிப்பாய்ந்து, மாடு பிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இரண்டாம் பரிசை வென்றது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கென்று சிறப்பான பராமரிப்பு முறைகளை பின்பற்றுகிறீர்களா?
ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கும் காளைகளை, அவை பிறந்த 6 மாதத்தில் இருந்து தயார் செய்ய வேண்டும். பாய்வதற்கான பயிற்சி, ஆற்றில் நீச்சல் பயிற்சி போன்ற பல பயிற்சிகளை அளிக்க வேண்டும். சத்தான உணவு கொடுக்க வேண்டும். அவற்றுக்கான பராமரிப்பு வேலைகளை ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும். மற்றவர்கள் அந்தக் காளைகளின் அருகே வரும்போது அவை மிரளக்கூடும்.

ஆண்களை விட பெண்களிடம் காளைகள் அதிக அன்போடு பழகுவதற்கு காரணம் என்ன?
வேலை, தொழில் இவற்றின் காரணமாக ஆண்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. எனவே உணவு கொடுப்பது, பராமரிப்பது, அவற்றை அன்பாக பார்த்துக்கொள்வது என பெண்களே காளைகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதன் காரணமாகவே காளைகள் பெண்களின் அன்புக்கு அடி பணிகின்றன.

உங்கள் காளையுடன் நிகழ்ந்த மறக்க முடியாத தருணம் என்ன?
ஒரு முறை நான்கு காளைகளும் மிரண்டு ஓடின. எங்கள் வீட்டில் இருந்தவர்கள் அவற்றை பிடிக்க முயன்றபோது அவர்களை துரத்தின. நான் அங்கு சென்று “கதிர், வேலன், காளி, வெள்ளையன்” என்று அவற்றின் பெயர்களை சொல்லி சத்தமாக கூப்பிட்டேன். உடனே நான்கு காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக என் அருகில் அமைதியாக வந்து நின்றன. அதை அனைவரும் வியந்து பார்த்தனர். என்னால் மறக்க முடியாத தருணம் அது.


குடும்பத்தினரின் ஆதரவு எவ்வாறு உள்ளது?
பாரம்பரியமாக நாங்கள் வீட்டில் மாடுகளை வளர்த்து வருவதால், குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாக இருக்கிறது. எனது தாத்தாவும், அப்பாவும் எனக்கு உதவி வருகின்றனர். குடும்பத்தோடு எங்காவது செல்லவேண்டி இருந்தாலும், காளைகளை கவனித்துக் கொள்வதற்காக யாராவது ஒருவர் வீட்டிலேயே இருப்போம்.


சட்டப் படிப்பைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?
எனது தாத்தா நீதிமன்றத்தில் வேலை பார்த்தவர். அவரைப் பார்த்து எனக்கு சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை மாற்றுவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் விருப்பம் கொண்டு சட்டப் படிப்பில் சேர்ந்தேன்.

படிப்புக்கும், விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் எவ்வாறு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?
வார விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் குடும்பத்தினருடன் விவசாயத்தில் ஈடுபடுவேன். எங்கள் நிலத்தில் தக்காளி, கத்தரி போன்ற பயிர்களை சாகுபடி செய்வோம். பின்பு ஆடி மாதத்தில் நிலக்கடலை பயிர் செய்வோம். அதன் பின்னர் தட்டை, சோளம் ஆகியவற்றை பயிரிடுவோம். நாங்கள் சாகுபடி செய்த காய்கறிகளை நேரடியாக சந்தைகளில், எங்கள் ஊரில் உள்ள கடைகளில் விற்பனை செய்கிறோம். எங்கள் வீட்டு உபயோகத்திற்காகவும் அதில் இருந்து எடுத்துக்கொள்வோம்.

விளையாட்டுத் துறையில் உள்ள ஈடுபாடு குறித்து சொல்லுங்கள்?
என் அப்பா கபடி விளையாட்டு வீரர். ஆறாம் வகுப்பு முதல் அவரிடம் கபடி கற்றேன். பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். விளையாட்டின்போது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக என்னால் தொடர்ந்து கபடி விளையாட முடியவில்லை. அதன் பின்னர் படிப்பிலும், காளைகளை பாராமரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

உங்கள் இலக்கு என்ன?
அரசு வழக்கறிஞராகி, ஏழை எளியவர்களுக்காக இலவசமாக வாதாடி நீதி பெற்றுத் தர வேண்டும். எவ்வித பாகுபாடின்றி சமூகத்தில் நியாயம் கிடைக்க போராடுவேன்.

எதிர்கால திட்டம்?
நாட்டு மாடுகள் அழிவதைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்கவும், பாராமரிக்கவும் இலவசமாக டிரஸ்ட் மற்றும் விடுதி ஆரம்பிக்க வேண்டும். அவற்றுக்குத் தேவையான மருத்துவம், பாதுகாப்பு போன்றவற்றை உறுதிசெய்வது எனது எதிர்கால திட்டமாகும்.

உங்களைப் போன்ற இளம் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பெண்கள் அமைதி, அன்பு போன்றவற்றை மட்டுமில்லாமல், துணிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் போன்ற அவலநிலையைத் தடுக்க வேண்டும். தங்கள் மீது நம்பிக்கைக்கொள்ள வேண்டும்.

இன்றைய குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது கூட கைபேசியை கொடுத்து பழக்கப்படுத்தி வருகிறோம். அந்த நிலையை முற்றிலும் தடுக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற விலங்குகளுடன் பழகுவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வாழ்க்கை முறை மாற்றத்தால் சிறு வயது குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இயற்கையோடும், பிராணிகளோடும் இணைந்து வாழ்ந்தால் இவற்றைத் தடுக்க முடியும்.

Next Story