மன அழுத்தமா? இதோ எளிய தீர்வுகள்
எதன் மீதும் அதிக பற்றுதல் வேண்டாம். எதிர்பார்ப்பைத் தவிர்க்கவும்; மற்றவரிடம் நாம் எவ்வளவு எதிர்பார்க்கிறோமோ, அவ்வளவு மன அழுத்தம் அடைகிறோம். எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும். ஏமாற்றம் வருத்தம், சுய பச்சாதாபம் தரும்.
தற்போதைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் பரவலான பிரச்சினையாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் எளிதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உடல் உபாதைகள், பிள்ளைகளின் எதிர்காலம், அலுவலகத்தில் மற்றும் வீட்டில் வேலைப்பளு, பண நெருக்கடி, கடன், உறவுகளுக்குள் ஏற்படும் மனக்கசப்பு போன்ற பல பிரச்சினைகள் இதற்குக் காரணமாக இருக்கின்றன.
இது தவிர, காரணமே இல்லாமல் ஏதோ ஒரு பயம், குழப்பம், கவலை, மனதை அரித்துக்கொண்டே இருப்பதாலும் பல பெண்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும் எனில், முதலில் ஆழ்ந்த கவலைக்கான மூல காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்
பசியின்மை - சாப்பிடத் தோன்றாது.
தூக்கமின்மை - மிகக் குறைந்த நேரமே தூங்குவார்கள். முறையான தூக்க நேரம் இருக்காது.
அதீத கவலை - சிறு விஷயத்திற்கெல்லாம் கற்பனை செய்து அதிகமாக கவலைப் படுவார்கள்.
யோசனை - எந்த நேரமும் யோசனையில் ஆழ்ந்து விடுவார்கள்.
பயம் - சின்ன விஷயத்துக்கெல்லாம் பயந்து விடுவார்கள்.
சந்தேகம் - எதையும் சந்தேகக் குணத்தோடே அணுகுவார்கள்.
குழப்பம் - குழப்பமான மனநிலையிலேயே இருப்பார்கள்.
படபடப்பு - எப்போதும் பதட்டம் இருக்கும்.
சுய பச்சாதாபம் - எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்ற சுய பச்சாதாபம் மேலோங்கி இருக்கும்.
நம்பிக்கையின்மை - யார் மேலும் நம்பிக்கை வராது.
சோகம் - சோகமான மனநிலை எப்போதும் இருக்கும்.
அழுகை - எளிதில் அழுது விடுவார்கள்.
எரிச்சல் - அதிக எரிச்சல் அடைவார்கள்.
ஆர்வமின்மை - அழகாக உடுத்திக்கொள்வது, வெளியே செல்வது உட்பட எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.
மேற்கண்ட பிரச்சினைகளை, பெண்கள் தாங்களே கையாண்டு இதிலிருந்து மீண்டு வரலாம்.
1. உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, மனம் உங்களை ஆட்டிப் படைக்கக் கூடாது.
2. உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில். உங்களை யாரும் அல்லது எந்த பிரச்சினையும் கோபப்படுத்தவோ, பலவீனமாக்கவோ முடியாது என்று நம்புங்கள்.
3. எதன் மீதும் அதிக பற்றுதல் வேண்டாம். எதிர்பார்ப்பைத் தவிர்க்கவும்; மற்றவரிடம் நாம் எவ்வளவு எதிர்பார்க்கிறோமோ, அவ்வளவு மன அழுத்தம் அடைகிறோம். எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும். ஏமாற்றம் வருத்தம், சுய பச்சாதாபம் தரும்.
4. உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளை நினைத்துப் பாருங்கள். அப்போது மனது நிறைவாக இருக்கும்.
5. மனதில் ஏற்பட்ட வெறுமையைப் போக்குவதற்கு புது ஆர்வங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
6. சுயபரிசோதனை முக்கியம். உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். என்னுடைய இந்த அர்த்தமில்லாத பயம், குழப்பம், கவலை, சோகம் தேவைதானா? என்று.
Related Tags :
Next Story