இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு
1. நான் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கணவர் மற்றும் மாமியாருடன் வசிக்கிறேன். தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். மாமியார் என்னை மனதார ஏற்றுக்கொள்ளவில்லை. சில நேரங்களில் கடினமான வார்த்தைகளால் திட்டுகிறார். எனது அம்மாவை பார்க்கவோ, பேசவோ அனுமதிப்பது இல்லை. இதனால் மிகுந்த மன வருத்தத்தோடு இருக்கிறேன். எனது கணவர் என்னை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார். அவரது தொழிலுக்கு எனது மாமியார் உதவி இருப்பதால், அவரை இவரால் எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. திருமணத்துக்கு பின்பு தையல் மற்றும் அழகுக்கலை பயிற்சி முடித்து, சொந்தமாகத் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. சில நேரங்களில் எனது தாய் வீட்டுக்கே சென்று விடலாம் என்று தோன்றுகிறது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறி இருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பதே முதன்மையானது. உங்களுக்கு இருக்கும் மற்ற பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கக்கூடியவைதான். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொன்றாக தீர்வு காணுங்கள். மாமியாருடன் மோதலில் ஈடுபடுவது, உங்கள் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். எனவே அதைத் தவிர்த்து, உங்கள் குழந்தையை எவ்வாறு நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் கணவர் உங்களுக்கு துணையாக இருக்கிறார். பிரசவ நேரத்தில் அவரது அன்பும், அரவணைப்பும் உங்களுக்கு கிடைக்கும். எனவே அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியோடு உங்கள் குழந்தையை வரவேற்க தயாராகுங்கள். சுயதொழில் செய்ய வேண்டும் என்ற உங்கள் கனவை வருங்காலத்தில் நனவாக்க முடியும்.
2. எனக்கு 75 வயது. 52 வருட இனிமையான திருமண வாழ்க்கையில், கொரோனா புயல் வீசி எனது கணவரை கொண்டு சென்று விட்டது. எட்டு மாத காலமாக கண்ணீரோடு எனது பொழுது போகிறது. அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. கொந்தளிக்கும் எனது மனதை அமைதிப்படுத்த வழி கூறுங்கள் சகோதரி.
52 வருடங்கள் கணவரோடு உடலும் உயிருமாக சேர்ந்து வாழ்ந்த உங்களுக்கு, தற்போதைய தனிமை நிறைந்த வாழ்க்கை மிகவும் துன்பம் தரக்கூடும். அவருடன் வாழ்ந்த இனிய நினைவுகளை எண்ணிப் பார்ப்பது உங்கள் மனதை அமைதியாக்கும். கணவர் உங்களுடன் இல்லாத வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பிக்கும் முன்பு, கோபம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம். உங்கள் கணவரது இழப்பு ஏற்படுத்திய வலியை ஏற்றுக்கொள்ளுங்கள். அவரது தெய்வீக இருப்பை உணரத் தொடங்குங்கள். கோவிலுக்குச் செல்வது போன்ற மனதுக்கு அமைதி தரும் செயல்களில் ஈடுபடுங்கள். உங்கள் கணவர் செய்ய விரும்பிய நேர்மறை செயல்களை நீங்கள் செய்ய முடியுமா என முயற்சி செய்யுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதையே உங்கள் கணவர் விரும்புவார் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
டாக்டர் சங்கீதா மகேஷ், உளவியல் நிபுணர்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். தங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
‘தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி’,
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
Related Tags :
Next Story