ஆப்பிரிக்க பெண்கள் கடைப்பிடிக்கும் ‘கூட்டுநிதி பகிர்வு திட்டம்’


ஆப்பிரிக்க பெண்கள் கடைப்பிடிக்கும் ‘கூட்டுநிதி பகிர்வு திட்டம்’
x
தினத்தந்தி 28 March 2022 11:00 AM IST (Updated: 26 March 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப உறுப்பினர்கள் அல்லாத இதர உறவினர்கள் அல்லது நண்பர்கள் குழுவாக ஒன்றிணைந்து ‘சுசு’ திட்டத்தில் நிதியை மாதாந்திர முறையில் சேமிக்கிறார்கள். சேமிக்கப்பட்ட பணத்தை முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட சுழற்சி முறையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ தங்களில் ஒருவருக்கு அளிக்கிறார்கள்

லக மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள நடுத்தர மக்களின் வாழ்வாதாரம், அவர்களது தொழில் வருமானம் அல்லது வேலைக்கான சம்பளம் என்ற இரு நிதி ஆதாரங்களுக்குள் அடங்கியுள்ளது. இந்த நிலையில், அவர்களது அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குழுவாக சேமித்து பகிர்ந்து கொள்ளும், ‘சீட்டு சேர்த்தல் திட்டம்’ உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் ‘சுசு’ (Susu or SouSou) என்ற சீட்டு முறையிலான நிதி சேமிப்பு திட்டம் பரவலாக நடைமுறையில் இருந்து வருகிறது. நமது ஊரில் பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ள மாதாந்திர சீட்டு சேர்க்கும் திட்டத்தின் ஆப்பிரிக்க வடிவமாக இதைக் குறிப்பிடலாம்.

‘சுசு’ சேமிப்பு திட்டம் என்பது குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்தோ அல்லது பல்வேறு உறவினர்கள் ஒன்று சேர்ந்தோ அவர்களது பணத்தை சேர்த்து, அதை அவர்களில் ஒருவரது நிதி தேவைக்கு அளிப்பதாகும். இந்த திட்டத்தின் கீழ் வாரம் அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறையோ, மாதம் ஒரு முறையோ பணத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் அல்லாத இதர உறவினர்கள் அல்லது நண்பர்கள் குழுவாக ஒன்றிணைந்து ‘சுசு’ திட்டத்தில் நிதியை மாதாந்திர முறையில் சேமிக்கிறார்கள். சேமிக்கப்பட்ட பணத்தை முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட சுழற்சி முறையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ தங்களில் ஒருவருக்கு அளிக்கிறார்கள். இதன் மூலம் அனைத்து நபர்களும் நிதியை பெறும் காலகட்டம் வரையில் ‘சுசு’ சேமிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

‘சுசு’ திட்டத்தில் உள்ள கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், குழுவில் உள்ள நபர்களின் மொத்த சேமிப்பும் தீர்மானிக்கப்பட்ட முறையில், வரிசையாக ஒவ்வொருவருக்கும் முழுமையாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

ஜமைக்கா, கானா ஆகிய நாட்டு பெண்களிடையே பரவலாக இருந்த இந்த சேமிப்பு முறையை, ‘கூட்டுறவு நிதி சேமிப்பு நிறுவனமாக’ வர்த்தக ரீதியில் அந்த நாடுகள் செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் அரசின் ஆதரவுடன் பெண்கள் தங்கள் சேமிப்பை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம்.

‘சுசு’ சீட்டுப்பண சேமிப்பு திட்டம், 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. குடும்ப அளவில் அல்லது தெருவில் வசிக்கும் பெண்கள் ஒன்றாக இணைந்து பணத்தை சேமித்து சுழற்சி முறையில் பயன்படுத்தும் வழக்கம் நமது நாட்டிலும் பரவலாக இருந்து வருகிறது. பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்கு குறிப்பிட்ட அளவில் உறுதுணையாக உள்ள ‘சுசு’ சேமிப்பு திட்டம் வரவேற்புக்குரிய ஒன்றாகும். இதன் மூலம் தனி நபர் மட்டுமில்லாமல் அவரைச் சேர்ந்த அனைவரும் பயன்பெற முடியும். 

Next Story