நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதற்கு...


நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதற்கு...
x
தினத்தந்தி 27 Dec 2021 5:30 AM GMT (Updated: 25 Dec 2021 6:49 AM GMT)

நாம் கற்றுக் கொள்ளப் போவது, நமக்கு ஏற்றதா? அதைக் கற்றுக் கொண்டால் நமக்கு மனதிருப்தி ஏற்படுமா? என்பதை உறுதி செய்த பின்பு நமக்கான கலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கைபேசியில் உள்ள செயலிகளை ‘அப்டேட்’ செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே நம்முடைய திறன்களை மேம்படுத்திக் கொள்வதும் அவசியமானது. குறிப்பாக பெண்களுக்கு இந்த செயல்முறை அடிப்படையானது; இதன் மூலம் தங்களையும், குடும்பத்தையும் முன்னேற்ற முடியும். நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பது, கற்றலில் நாம் காட்டும் முனைப்பு மட்டுமே. அந்தக் கற்றலை எவ்வாறு அணுகுவது என்பதற்கான வழிமுறை இதோ:

தேர்ந்தெடுத்தல்
மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, நாமும் அவர்கள் கற்பதையே முயற்சிக்கக் கூடாது. நாம் கற்றுக் கொள்ளப் போவது, நமக்கு ஏற்றதா? அதைக் கற்றுக் கொண்டால் நமக்கு மனதிருப்தி ஏற்படுமா? என்பதை உறுதி செய்த பின்பு நமக்கான கலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேடுதல்
நாம் தேர்ந்தெடுத்த கலையைச் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அல்லது நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை விரிவாகத் தேட வேண்டும். அது நம்பத்தகுந்ததா என்பதை உறுதி செய்தல் அவசியம். முடிந்தால் அங்கு பயின்றவர்களிடம், அது குறித்த நிறை, குறை, விமர்சனங்களைக் கேட்டு அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் கற்கும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட தரநிலை, கருத்துகள், விமர்சனங்கள் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமர்ப்பித்தல்
இது மிக முக்கியமான கட்டம். எந்தக் கலையாயினும் அதைக் கற்றுக் கொள்ளும்போது, முழு கவனத்துடன் இருக்க வேண்டும். பொழுதுபோக்குதானே என்று அலட்சியமாக இருந்துவிடாமல், அதற்கென ஒரு நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தை முழுவதுமாக அதற்குச் செலவிட வேண்டும்.

தடுமாறுதல்
எதையும் புதிதாகக் கற்றுக் கொள்ளும்போது, ஆர்வத்தின் காரணமாக ஒரு வாரம் தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டு, பின் அதை அப்படியே விட்டுவிடுவது சிலரின் இயல்பு. இதைத் தவிர்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அவை:

ஒரு கலையை இலவசமாகக் கற்றுக் கொள்ளாமல், கட்டணம் செலுத்தி முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். கொடுத்த கட்டணம் வீணாகிவிடக்கூடாது என்ற எண்ணம், நம்மைத் தொடர்ச்சியாக இயங்க வைக்கும். அந்த விஷயத்தின் முக்கியத்துவமும் அப்பொழுதுதான் நமக்குப் புரியும்.

ஒரு கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை, முடிந்தவரையில் நம் வட்டத்தில் அனைவரிடமும் தெரிவிப்பது நல்லது. ஒருவேளை இதைப் பாதியில் நிறுத்தும்போது, மற்றவர்களிடம் தெரிவித்துவிட்டோமே எனும் அழுத்தத்தின் காரணமாக தொடர்ந்து கற்போம்.

பதிவு செய்தல்
ஒரு கலையைக் கற்று முடித்தபின்பு, அதில் நம் திறமையை வெளிப்படுத்தி, அதைச் சமூக வலைத்தளங்களில் உள்ள நம் கணக்குகளில் பதிவிடலாம். அதற்கு வரும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்  நம்மை மென்மேலும் ஊக்குவிப்பதாகவும், கற்றுக்கொள்ளத் தூண்டுவதாகவும் அமையும்.

‘கற்றல்’ என்பது பள்ளிப் பருவத்தோடு முடிவதில்லை. வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டிய ஒன்று. வருடத்திற்கு ஒரு வயது ஏறுவது போல, நாம் கற்கும் கலையின் எண்ணிக்கையும் வருடம் தோறும் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை, மனதில் விதைப்போம். 

Next Story