முழு முயற்சியோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் - பிருந்தா
குழந்தைகளுக்கு நல்லவற்றை சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் எடுத்த சிறு முயற்சிதான் இது. இதற்கு என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அங்கீகாரம் கிடைத்தது. அதே அங்கீகாரம் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும்.
குதிரை வாலி, வரகு, சாமை, ராகி, தினை போன்ற சிறுதானியங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான பிஸ்கட் வகைகளை தயார் செய்கிறார் அரியலூரைச் சேர்ந்த பிருந்தா. தனது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தயாரிக்கத் தொடங்கியவர், இன்று இதன் மூலம் வெற்றிகரமான தொழில் முனைவோராக உயர்ந்து இருக்கிறார். தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
“நான் எம்.எஸ்.சி., படித்திருக்கிறேன். எனது கணவர் லட்சுமணன் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவது பிஸ்கட்டுகள்தான். கடைகளில் இருந்து வாங்கும் பிஸ்கட்டுகளில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ஒயிட் சுகர், மைதா போன்றவை கலந்து செய்கிறார்கள். இவை அவர்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதல் உண்டாக்கும் என்ற அச்சம் எனக்கு இருந்தது. நானே வீட்டில் பிஸ்கட் தயாரித்து கொடுப்பதற்காக முதன் முதலில் குக்கீஸ் பயிற்சி வகுப்புக்குச் சென்றேன்.
அங்கே கற்றுக்கொண்ட பிறகு வெவ்வேறு சுவைகளிலும், வடிவங்களிலும் பிஸ்கட் செய்து குழந்தை களுக்குக் கொடுத்தேன். சுவை பிடித்ததால் விரும்பிக் கேட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கும், எனது உறவினர்களுக்கும் நான் தயாரித்த பிஸ்கட்டுகளைக் கொடுத்தேன். சாப்பிட்டுப் பார்த்த அனைவரும் பாராட்டினார்கள்.
நான் தினமும் குழந்தைகளுக்கு விதவிதமாகக் கொடுத்தனுப்பும் பிஸ்கட்டுகளைப் பார்த்துவிட்டு, அவர்களின் பள்ளி ஆசிரியர் “இந்த பிஸ்கட்டுகளை எங்கு வாங்குகிறீர்கள்?” என்று கேட்டார். “நானே தயார் செய்தேன்” என்று கூறியவுடன், அதை ருசித்துப் பார்த்துவிட்டு, “ஆரோக்கியமாகவும் இருக்கு, ருசியாகவும் இருக்கு. இதைத் தொழிலாக செய்யலாமே” என்று என்னை ஊக்கப்படுத்தினார். அப்போது முதல் பிஸ்கட்டுகள் தயாரிப்பதை தொழிலாக செய்து வருகிறேன்.
கோதுமை, நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், கேழ்வரகு மாவு, சத்து மாவு, கம்பு மாவு, சாமை மாவு, தினை மாவு, பாதாம், வறுத்த தேங்காய்த் துருவல், கொக்கோ பவுடர், முந்திரி இவற் றைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிக்கிறேன்.
என் கணவரின் ஆதரவோடு, அதிகமாக ஆர்டர் எடுத்து, குறைந்த நேரத்திலேயே பிஸ்கட்டுகள் தயாரித்து வழங்குகிறேன். ஆர்வமுடன் கேட்கும் பெண்களுக்கு பிஸ்கட் தயாரிப்பைக் கற்றுக் கொடுக்கிறேன்.
குழந்தைகளின் விருப்பத்திற்குத் தகுந்தாற்போல பிஸ்கட்டுகளை வடிவமைப்பதிலும் ஆர்வம் காட்டுகிறேன். வடிவத்தை பொறுத்துதான் குழந்தைகள் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களுக்குப் பிடித்த நிறத்திலும், வடிவத்திலும் இருந்தால் ஆர்வத்தோடு சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு நல்லவற்றை சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் எடுத்த சிறு முயற்சிதான் இது. இதற்கு என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அங்கீகாரம் கிடைத்தது. அதே அங்கீகாரம் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும். முழு முயற்சியோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” என்றார் பிருந்தா.
Related Tags :
Next Story