திருநங்கைகளையும் பெண்களாக மதிக்க வேண்டும்- மோகனா


திருநங்கைகளையும் பெண்களாக மதிக்க வேண்டும்- மோகனா
x
தினத்தந்தி 2 May 2022 5:30 AM GMT (Updated: 30 April 2022 12:37 PM GMT)

திருநங்கைகளை முதலில் அவர்களின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘பக்கத்து வீட்டினர் என்ன நினைப்பார்களோ, எதிர் வீட்டினர் என்ன நினைப்பார்களோ, உறவினர்கள் என்ன சொல்வார்களோ?’ என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும்.

“சமூகத்தின் முதலாவது அங்கம் குடும்பம்தான். திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள அவர்களது குடும்பத்தினரே மறுக்கிறார்கள். ஒரு குடும்பம் ஆணையும், பெண்ணையும், மாற்றுத் திறனாளி
களையும் எந்தவகையில் ஏற்றுக்கொள்கிறதோ, அதேபோல் திருநங்கைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அனைத்து திருநங்கைகளின் உணர்வுகளையும் தனது பேச்சில் பிரதிபலிக்கிறார் மோகனா.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்த திருநங்கை மோகனா, கலை, இலக்கியம் போன்றவற்றில் திறம்பட ஜொலித்து வருகிறார். பல வகைகளிலும் சமூக சேவைகளைச் செய்து வரும் இவருக்கு அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. இனி அவருடன் பேசுவோம்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்...
என் பெயர் கமலி என்கிற மோகனா. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தை சுப்பையன் காலமாகிவிட்டார். தாய் சம்பம்மாள் இல்லத்தரசி. எனக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். நான் எம்.எஸ்.சி., பயோ கெமிஸ்ட்ரி படித்திருக்கிறேன். நடனக் கலைஞர், கவிஞர், எழுத்தாளர், திருநங்கை சமூக ஆர்வலர் என்று பல தளங்களில் இயங்கி வருகிறேன். தற்போது தனியார் நிறுவனம்  ஒன்றில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை அமைந்தகரையில் வசித்து வருகிறேன்.

கலை இலக்கியம் சார்ந்து என்னென்ன பணிகளைச் செய்து வருகிறீர்கள்?
நடனக் கலைஞராக மயிலாட்டம், ஒயிலாட்டம், நடன நாடகங்கள் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறேன். கதை, கவிதை, கட்டுரை, தொடர்கதை எழுதி வருகிறேன். நிமிர்ந்து நில், புதியன விரும்பு, அம்மா, வ.உ.சி உள்ளிட்ட தனிக் கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். நான் எழுதிய சில நாவல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. 

நீங்கள் செய்துவரும் சேவைகள் பற்றிச் சொல்லுங்கள்?
சாலையோரத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு, உடை, மருத்துவ வசதிகளை வழங்குகிறேன். வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கி வருகிறேன். 
சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மரக்கன்றுகள் நடுதல், அரசின் திட்டமான ‘ஸ்வச் பாரத்’ மூலம் ‘வீட்டுக்கொரு கழிவறை அமைப்போம்’ என்பதற்கான விழிப்புணர்வு நடன நாடகத்தில் பங்கேற்றுள்ளேன். கொரோனா நேரத்தில் களப்பணியாளராக சேவை செய்தேன். பல திருநங்கைகளுக்கு வேலை கிடைக்கவும், தங்க இடம் கிடைக்கவும் வழிகாட்டியிருக்கிறேன்.

சகோதரன் மற்றும் தோழி ஆகிய திருநங்கைகள் அமைப்புடன் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,  சியர்ஸ், புதுவிடியல் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருநங்கை
களுக்கு உதவுதல்,  போக்குவரத்துக் காவல்துறையுடன் இணைந்து சிக்னலில் கொரோனா தற்காப்பு, சாலை விதிகளைப் பின்பற்றுதல், தலைக்கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறேன்.



உங்களுக்கு காதல் அனுபவம் இருக்கிறதா?
கவிஞர் கமலியாக வலம் வந்துகொண்டிருந்த நான், மோகனாவாக மாறக் காரணமாக இருந்தவர் சந்திரமோகன். அவருடன் கடந்து வந்த வாழ்க்கையைத்தான் எனது நாவல்களில் எழுதியிருக்கிறேன். சூழ்நிலை காரணமாக பல வருடங்களாக அவரை சந்திக்க முடியாமல் போனது. நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்று மாறாத காதலோடும், நம்பிக்கையோடும் காத்திருக்கிறேன்.

திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வை குறித்த உங்கள் கருத்து என்ன?
திருநங்கைகளை முதலில் அவர்களின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘பக்கத்து வீட்டினர் என்ன நினைப்பார்களோ, எதிர் வீட்டினர் என்ன நினைப்பார்களோ, உறவினர்கள் என்ன சொல்வார்களோ?’ என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். 

நான் இந்த அளவுக்கு முன்னேறிய பிறகும்கூட, என் குடும்பம் அதிகபட்சமாகப் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு மட்டுமே என்னுடன் கலந்துகொள்கிறார்கள். நாங்கள் பல துறைகளிலும் சாதித்துக்கொண்டிருந்தாலும், இன்றும் குடும்பத்திடம் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
கலைத்துறைக்காகவும், சமூக சேவைக்காகவும் அன்னை தெரசா விருது, அப்துல்கலாம் விருது, உழைப்பின் சிகரம், சேவைச்செல்வி, சேவைச்செம்மல், மென்மைத்தாய், சிங்கப்பெண் விருது போன்ற 50-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறேன். 

தமிழக அரசு, திருநங்கைக்காக அறிவித்துள்ள ‘மூன்றாம் பாலின முன்மாதிரி விருது’க்கு தேர்வாகி உள்ளேன். என்னுடைய அனைத்து வெற்றிகளுக்கும், திருநங்கைகள் சமூகம் முழு ஆதரவையும் தந்து என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கும், எனக்கு உதவிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் லட்சியம் என்ன?
என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் விதமாக, வாழ்நாள் முழுவதும் என்னால் இயன்ற சேவைகளைச் செய்ய வேண்டும். திருநங்கைகள் அவர்களது  குடும்பங்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையை உருவாக்க வேண்டும். சின்னத் திரையிலோ, வெள்ளித்திரையிலோ கதாசிரியராகி, நானும் கதாபாத்திரமாக நடித்துப்பிரபலமாக வேண்டும் என்பது என் லட்சியம். 

Next Story