மாவட்ட செய்திகள்

ஆரணியில் புதிய வருவாய் கோட்டம்: கோட்டாட்சியரிடம் பொறுப்புகளை கலெக்டர் ஒப்படைத்தார் + "||" + New Revenue Line Kottatci responsibilities Collector handed over

ஆரணியில் புதிய வருவாய் கோட்டம்: கோட்டாட்சியரிடம் பொறுப்புகளை கலெக்டர் ஒப்படைத்தார்

ஆரணியில் புதிய வருவாய் கோட்டம்: கோட்டாட்சியரிடம் பொறுப்புகளை கலெக்டர் ஒப்படைத்தார்
ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து கோட்டாட்சியரிடம் பொறுப்புகளை கலெக்டர் ஒப்படைத்தார்.
ஆரணி,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை (உதவி கலெக்டர் அலுவலகம்) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து ஆரணியில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வி.ஏழுமலை முன்னிலை வகித்தார். ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) குணசேகரன் வரவேற்றார்.

பின்னர் கலெக்டர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி புதிதாக உருவாக்கப்பட்ட ஆரணி உதவி கலெக்டர் பொறுப்பினை பொறுப்பு அதிகாரி குணசேகரனிடம் ஒப்படைத்தார்.

புதிதாக பொறுப்பேற்ற உதவி கலெக்டருக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், சாந்திசேகர், அ.கோவிந்தராசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்குமார், நகரஅவைத்தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது.

இன்று முதல் புதிய உதவி கலெக்டர் அலுவலகம் ஆரணியில் செயல்படும். ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாவை சேர்ந்த சுமார் 7 லட்சத்து 14 ஆயிரம் பேர் உள்ள மக்கள் தொகை நிறைந்த பகுதியாகும். இந்த அலுவலகத்தில் 232 கிராம மக்கள் பயன்பெறலாம்.

மேலும் ஆதரவற்ற பெண்களுக்கான சான்று, பிறப்பு, இறப்பு பதிவு செய்யாதவர்களுக்கு இந்த அலுவலகத்திலேயே பதிவு செய்து சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மலைவாழ் மக்கள் சான்று வழங்கும் பொறுப்பு, வரதட்சணை கொடுமையில் பெண் இறந்தால் அதற்கான விசாரணை அதிகாரியாகவும், 144 தடை உத்தரவு வழங்கக்கூடிய பொறுப்பு அதிகாரியாகவும் உதவி கலெக்டர் செயல்படுவார்.
இங்கு வருகிற 16-ந் தேதி முதல் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் செய்யாறு உதவி கலெக்டர் (பொறுப்பு) அரிதாஸ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.நெடுமாறன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, எம்.பாண்டியன், க.கிருஷ்ணமூர்த்தி, ரமாதேவி, ஆரணி தாசில்தார் ஆ.சுப்பிரமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கிருஷ்ணசாமி, வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, அரசுத்துறை அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.