ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதியில் ரத்து - பெங்களூரு அணி வெளியேற்றம்


ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதியில் ரத்து - பெங்களூரு அணி வெளியேற்றம்
x
தினத்தந்தி 30 April 2019 7:04 PM GMT (Updated: 2019-05-01T02:57:36+05:30)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இடையிலான நேற்றைய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. இதன் மூலம் பெங்களூரு அணி போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது. #IPL2019 #RCBvsRR

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆட்டம் 5 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது.

இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், டிவில்லியர்சும் இறங்கினர். வருண் ஆரோன் வீசிய தொடக்க ஓவரில் முதல் இரு பந்துகளை கோலி சிக்சருக்கு பறக்கவிட, அதே ஓவரில் டிவில்லியர்ஸ் 2 பவுண்டரி ஓடவிட்டார். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய அடுத்த ஓவரில் சிக்சர், பவுண்டரி விரட்டிய விராட் கோலி (25 ரன், 7 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) அதே ஓவரில் கேட்ச் ஆகிப்போனார். அடுத்தடுத்த பந்தில் டிவில்லியர்ஸ் (10 ரன்), ஸ்டோனிஸ் (0) ஆகியோரும் கேட்ச் ஆக கோபால் ‘ஹாட்ரிக்’ சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். நடப்பு தொடரில் இது 2-வது ஹாட்ரிக் ஆகும். ஏற்கனவே பஞ்சாப் வீரர் சாம்குர்ரன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

பின்னர் வந்த வீரர்களும் முடிந்த வரை வேகம் காட்ட முயற்சித்தனர். அதே வேளையில் விக்கெட்டுகளும் சரிந்தன. நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், ஒஷானே தாமஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த போது மறுபடியும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் இந்த ஆட்டத்தை அத்துடன் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு நூலிழையில் ஒட்டிக்கொண்டு இருந்த அடுத்த சுற்று வாய்ப்பு முற்றிலும் முடிந்து போனது. தொடர்ந்து 3-வது ஆண்டாக விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதல் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு வெகுவாக குறைந்து போய் விட்டது.Next Story