சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா..? பெங்களூருவுடன் இன்று மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 May 2022 11:37 PM GMT (Updated: 3 May 2022 11:37 PM GMT)

ஐபிஎல்லில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது.

மும்பை.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில்விளையாடி 3-ல் வெற்றி, 6-ல் தோல்வி என்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து 9-வது  இடத்திலேயே இருக்கிறது. 

முதல் 8 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாதனது ஆட்டத்திறன் பாதிக்கப்படுவதாக கூறி பொறுப்பில் இருந்து பின்வாங்கியதால் கேப்டன் பதவி மீண்டும் டோனியிடம் சென்றுள்ளது. டோனியின் தலைமையில் சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் 13ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. அதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (99 ரன்). டிவான் கான்வே (85 ரன்) இருவரும் பட்டையை கிளப்பினர். இத்தகைய தொடக்கத்தை தான் அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. பந்து வீச்சில்இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி 4 விக்கெட் சாய்த்தார்.

இருப்பினும் சென்னை அணியின் பந்து வீச்சு குறித்து முழுமையாக திருப்தி அடைய முடியாது. குறைந்தது ஓவருக்கு சராசரியாக 7.50 ரன்னுக்கு மேலாகத் தான் வாரி வழங்கியுள்ளனர். இதே போல் பீல்டிங்கும் மோசமாக இருக்கிறது. தொடரில் இதுவரை 19 எளிதான கேட்ச்களை தவற விட்டுள்ளனர். இதில் கூடுதல் கவனம் செலுத்த
வேண்டியது அவசியமாகும். பெங்களூருவை ஏற்கனவே 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியிருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

 எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்த ஆட்டத்தின் வெற்றி சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி முதல் 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகு வரிசையாக ஐதராபாத், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகளிடம் உதைப்பட்டு இப்போது 5 வெற்றி, 5 தோல்வி என்று இருக்கிறது.இதில் ஐதராபாத்துக்கு எதிராக வெறும் 68 ரன்னில் சுருண்டது.

குஜராத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் சறுக்கினாலும் விராட் கோலி அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பியது சற்று ஆறுதலான விஷயமாகும். அவர் இன்றைய ஆட்டத்தில் 51 ரன்கள் எடுத்தால், சென்னைக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைக்கலாம்.

இருப்பினும் பெங்களூரு அணியிடம் இருந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இன்னும் அனல் பறக்கும் ஆட்டம் வெளிப்படவில்லை. கேப்டன் பிளிஸ்சிஸ் கடைசி 3 ஆட்டங்களில் சொதப்பியுள்ளார். அவரும் ரன்மழை பொழிந்தால் தான் பெங்களூருவின் பேட்டிங் வலுவடையும். மொத்தத்தில் தோல்விப்பயணத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் இருப்பதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

புனேமைதானத்தில் கடைசியாக நடந்த 3 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.


Next Story