செவிலியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி வழக்கு சுகாதாரத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
விதிகளை மீறி நடந்ததாக புகார்: செவிலியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி வழக்கு சுகாதாரத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
மதுரை,
கரூரை சேர்ந்த கார்த்திக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நான் கரூர் அரசு மருத்துவமனையில் ஆண்செவிலியராக பணியாற்றி வருகிறேன். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வின்போது, எந்ததெந்த ஊரில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன, எத்தனை புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் போன்ற தகவல்களை வெளியிட வேண்டும். தொடர்ச்சியாக கலந்தாய்வு நடத்தாமல், 5 நாட்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிகள் கடந்த 2007–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த விதிகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. உதாரணமாக, சமீபத்தில் செவிலியர்களுக்கான கலந்தாய்வு கடந்த 19–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை நடந்தது. அப்போது பல ஊர்களில் காலியாக இருந்த செவிலியர் பணியிடங்கள் வெளிப்படையாக காட்டப்படவில்லை. இது விதிகளுக்கு புறம்பானது. எனவே இந்த கலந்தாய்வை ரத்து செய்து, விதிகளின்படி செவிலியர் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.