கிழக்கு கடற்கரை சாலையில் புதிய மதுக்கடையை அகற்ற வேண்டும்


கிழக்கு கடற்கரை சாலையில் புதிய மதுக்கடையை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 6 May 2017 10:45 PM GMT (Updated: 6 May 2017 9:09 PM GMT)

கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பெடியிடம் மனு அளித்தார்.

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடி தொகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமுதசுரபி பெட்ரோல் பங்க் அருகில் புதிய மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் கொட்டுப்பாளையம் கிரீன் கார்டன், கோகுலம் தெரு பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. தலைமையில் அவர்கள் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

மதுக்கடையை அகற்றவேண்டும்

குடியிருப்பு, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கு மத்தியில் போக்குவரத்து மிகுந்த மாநில நெடுஞ்சாலையாக கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு இன்னல்களை அளிக்கும் வகையில் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கலால்துறை சட்டம் 1970–ன்படி பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு 300 மீட்டருக்கு அப்பால் இருக்கவேண்டும் என்பதை புறந்தள்ளியும், இந்திய அரசாணைப்படி கிழக்கு கடற்கரை சாலை என்பது மாநில நெடுஞ்சாலை என்பதை மறைத்தும், பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை மனதில் கொள்ளாமல் மதுக்கடை அமைக்க அனுமதி அளித்து மக்களுக்கு தீமை இழைத்துள்ளனர். அந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவினை பெற்றுக்கொண்ட கவர்னர் கிரண்பெடி, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story