திருப்பூரில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி


திருப்பூரில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 6 May 2017 10:10 PM GMT (Updated: 6 May 2017 10:10 PM GMT)

திருப்பூரில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பூர்,

தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஆங்காங்கே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், முற்றுகை உள்பட பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது வெயிலின் தாக்கம் உச்சம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மழை

இந்த நிலையில் நேற்றும் காலையில் இருந்தே திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. அதன் பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில தினங்களாக அனல் காற்றில் வாகனங்களை ஓட்டிச்சென்ற வாகன ஓட்டிகளுக்கு இது சற்று ஆறுதலை தருவதாக இருந்தது.

இந்த மழை காரணமாக அனுப்பர்பாளையம்–அவினாசி சாலை உள்பட சில இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மேலும், மழையின் போது வீசிய காற்றில் எஸ்.ஏ.பி. தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நின்ற வேப்ப மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story