தகுதி சான்று பெறாமல் இயங்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்


தகுதி சான்று பெறாமல் இயங்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 May 2017 12:00 AM GMT (Updated: 2017-05-07T05:29:51+05:30)

தகுதி சான்று பெறாமல் இயங்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

தகுதி சான்று பெறாமல் இயங்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த (ஜூன்) மாதம் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளில் மாணவர்களை பள்ளிக்கு ஏற்றி வந்து மீண்டும் இருப்பிடத்துக்கு அழைத்துச்செல்ல பஸ்கள், வேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்த வாகனங்கள் தகுதியானதாக உள்ளதா? எனவும், பள்ளி வாகனங்களில் அரசு விதிமுறைகளின்படி பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா? எனவும் ஆண்டுதோறும் மே மாதத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று செய்யும் பணி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பள்ளி வாகனங்கள் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று காலை முதல் வந்த வண்ணம் இருந்தன.

அரசு விதிமுறைகள்

பள்ளி வாகனங்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவின்பேரில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் மேற்பார்வையில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் அழகரசு தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ராம்குமார் (திருவண்ணாமலை) முருகேசன் (ஆரணி), ராமரத்தினம் (செய்யாறு) ஆகியோர் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர்.

வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, தீத்தடுப்பு கருவி சரியாக உள்ளதா? முதலுதவி பெட்டியில் மருந்துகள் உள்ளதா?, அவசர கால வழி, பள்ளி மாணவர்கள் ஏறும் வகையில் படிக்கட்டுகள் உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் பள்ளி வாகனம் என்பதை குறிக்கும் அடையாள ஸ்டிக்கர், வாகனங்களின் பெர்மிட், வாகன தகுதிச்சான்று, டிரைவர் லைசென்ஸ், வாகன இன்சூரன்ஸ் உள்ளிட்ட 16 வகையான அரசின் விதிமுறைகள் சரியாக வாகனங்களில் உள்ளதா என பார்வையிட்டு தகுதிச்சான்றிதழ் வழங்கினர்.

தகுதி சான்று

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் அழகரசு கூறியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 204 தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் 1,008 பள்ளி வாகனங்கள் இன்று (நேற்று) முதல் வருகிற 31–ந் தேதி வரை ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி வானங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி உள்ளிட்ட 16 வகையான அரசின் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா? என ஒவ்வொரு வாகனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குறைபாடு உள்ள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அனைத்து தனியார் பள்ளி வாகனங்களும் பள்ளி திறப்பதற்கு முன்பாக ஆய்வுக்கு கொண்டு வந்து தகுதி சான்று பெற வேண்டும்.

தகுதி சான்று பெறாமல் மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்ற கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story