விவசாயிகள் பற்றி சர்ச்சை கருத்து ராவ்சாகேப் தன்வேயை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அசோக் சவான் பேட்டி
விவசாயிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேயை கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம்.
மும்பை,
விவசாயிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேயை கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
ராவ்சாகேப் தன்வேபயிர்க்கடன் தள்ளுபடி செய்தால், விவசாயிகளின் தற்கொலை நின்றுவிடும் என்று எதிர்க்கட்சிகள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கட்டும் என்று மாநில பாரதீய ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே சமீபத்தில் தெரிவித்தார். அவரது இந்த கருத்து விவசாயிகளை அவமதிப்பதாக கூறி, கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, மீண்டும் விவசாயிகளை பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்தை தெரிவித்து ராவ்சாகேப் தன்வே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அதாவது, மரத்வாடா மண்டலம் ஜல்னாவில் நிருபர்களை சந்தித்த அவர், ‘‘வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு விவசாயிகளிடம் இருந்து அதிக அளவு துவரம் பருப்பை மாநில அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இன்னமும் ஒரு லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இருப்பினும், விவசாயிகள் புகார் தெரிவித்து கொண்டே இருக்கின்றனர்’’ என்றார்.
காங்கிரஸ் போராட்டம்ராவ்சாகேப் தன்வேயின் இந்த கருத்து விவசாயிகளை இழிவுபடுத்துவதாக காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆளும் கட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள், பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இது அப்பட்டமான அகந்தையே தவிர வேறு எதுவுமில்லை. அதிகாரம் அவர்களுடைய தலைக்கு ஏறிவிட்டது.
விவசாயிகளை அவமதித்ததன் மூலம், அவர்களது காயத்தை ராவ்சாகேப் தன்வே பெரிதுபடுத்திவிட்டார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். ராவ்சாகேப் தன்வேயை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை (அதாவது இன்று) காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அசோக் சவான் தெரிவித்தார்.